இந்திய அமெரிக்க இருதரப்பு உறவுகள்

பேராசிரியர் சிந்தாமணி மஹாபத்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராமமூர்த்தி

இந்திய அமெரிக்க இருதரப்பு உறவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசுக்கு பி பிளஸ் என்ற தரக்குறியீட்டை அளித்துள்ளார்,  முன்னாள் அமெரிக்க தூதுவர் ராபர்ட் பிளக்வெல் அவர்கள்.  இரண்டாவது முறை ஆட்சியை பிடிக்க அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் முயன்று வரும் ஒரே நேரத்தில் இந்த தரக் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்க நிகழ்வாகும்.  முந்தைய அரசுகளை விட டிரம்பின் இருதரப்பு உறவுகள் திருப்தியளிப்பதாக உள்ளது என பிளாக்வெல் தலைமையிலான வெளியுறவு குழு சான்றிதழ் அளித்துள்ளது.  தொடர்ந்து இந்தியாவுடன் ஆன நல்லுறவுகளை வலுப்படுத்தி வந்துள்ளார் என்று கூறுகிறது பிளாக்வெல் அளித்த அறிக்கை.  இந்திய கல்வியாளர்கள், இந்திய வெளியுறவு நிபுணர்கள் ஆகியோரும் தங்களது மதிப்பீட்டில் இருதரப்பு உறவுகள் மெச்சும்படியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

21-ம் நூற்றாண்டு முதலாகவே இந்தியாவுடன் ஆன இருதரப்பு உறவுகள் ஏறுமுகமாகவே இருந்து வந்துள்ளது எனினும் அதற்கு அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சிகள் குறிப்பிடதக்வை.  இந்திய இராணுவத்திற்கு உதவி அளிப்பது, நேட்டோ நாடுகளுக்கு இணையான மதிப்பு, இந்தோ பசிபிக் உறவுகளில் இந்திய அரசிற்கு முதன்மை, கூட்டு இராணுவ அமெரிக்க அரசும் இந்திய அரசும் இணைந்து செயல்பட்டு இருதரப்பு உறவை பலப்படுத்தியுள்ளது என கூறுகிறார் இராபர்ட் பிளாக்வெல்.  வானிலை மாற்றங்கள், வர்த்தக கட்டண விகிதம், நுழைவு விசா வழங்குவதில் சிக்கல், இருதரப்பு வர்த்தகத்தில் முன்னேற்றமின்மை என பல தடங்கல்கள் இருந்த போதிலும், முடிந்தவரையில் இரு அரசுகளும் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன எனக் கூறுகிறார் பிளாக்வெல்.

உலக அமைதி, நிலையான அரசுகள் இணைந்த செயல்பாடுகள் என அனைத்து தளங்களிலும் இரு அரசுகளும் ஒத்துழைப்புடன் உறவாடி வருகின்றன.  அணி சேரா நாடுகளில் இணைந்துள்ள இந்திய அரசு, இந்திய அமெரிக்க உறவுகளில் முன்னேற்றத்தை எடுத்து செல்ல ஆவண செய்து வந்துள்ளது.

வர்த்தகம், முதலீடு, வானிலை மாற்றம் என சில துறைகளில் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இருந்தபோதிலும் இந்திய அரசு உடனடியாக எதிர்வினை ஆற்றாமல் இருதரப்பு உறவுகளை மனதில் கொண்டு பொறுமையுடன் செயல்பட்டு வருகிறது.  இந்திய அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை   அதிபர் டிரம்பின் அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதோடு வருங்காலங்களில் இந்திய அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார் பிளாக்வெல் அவர்கள்.

அமெரிக்க வர்த்தகத்தை பெருக்குவதில் குறியாக செயல்பட்டு வரும் டிரம்ப் தலைமையிலான அரசு, இருதரப்பு உறவுகளை பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த காரணங்களுக்காகவே இதுவரை இரண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.   அமெரிக்க அரசின் கூட்டாளி நாடுகள் அனைத்தும் டிரம்ப் தலைமையிலான அரசுடன் கைகோர்த்து செயல்பட திணறி வருகின்றன.  வானிலை மாற்ற ஒப்பந்தம், இரான் அணுக் கொள்கை, ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடு, எனப் பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுடன் முரண்பட்ட கருத்துக்களை டிரம்ப் நிர்வாகம்  கொண்டிருந்த போதும், இந்திய பிரதமர் தொடர்ந்து அமெரிக்க உறவை வலுப்படுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இராணுவ கொள்கையானாலும், வெளியுறவு கொள்கையானாலும்,   அனைத்து நாட்டு மக்களையும் மனதில் கொண்டு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வரும் இந்திய அரசை அனைத்து நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன எனக் கூறினால் அது மிகையாகாது.