இலங்கையின் அமைதியை சீர்குலைத்த தொடர் குண்டு வெடிப்பு.

(அரசியல் விமரிசகர் எம்.கே.டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

இலங்கை மக்கள் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயங்களில் அமைதியாகக் குழுமியிருந்த தருணத்தில், எதிர்பாராத விதமாக, பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்புவில் உள்ள தேவாலயத்தில் முதலில் துவங்கிய குண்டுவெடிப்பு, அடுத்த சில நிமிடங்களில், கிழக்குக் கடற்கர நகரான பட்டிக்கோலாவில் நடந்தது. இவற்றையடுத்து, கொழும்புவில் மேலும் ஒரு தேவாலயத்திலும், மூன்று சொகுசு ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இலங்கையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதமாவர். அவர்கள் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் குழுமியிருந்தனர்.

ஆறு மணி நேரத்தில் 8 குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை இலங்கை கண்டிராத அளவிலான இத்தாக்குதல்களில், 290 க்கும் அதிகமானோர் உயிர்நீத்துள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், 6 இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டினர் உயிரிழந்தோரில் அடங்குவர். இத்தாக்குதல், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பைத் தாக்குதலை ஒத்திருந்ததாக சிலர் கருதுகின்றனர்.

நன்கு திட்டம் தீட்டி, ஒருங்கிணைந்த முறையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  சர்வதேச பயங்கரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுவரை எந்தக் குழுவும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. ஒரு ஜிஹாதிக் குழுவின் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் குறித்து உளவுத் தகவல் தங்களிடம் இருந்ததாகக் கூறிய இலங்கை போலீசார், போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவு. இத்தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குழு தொடர்பாக அரசு சிறிது அறிந்துள்ளது எனக் கூறிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, விசாரணை முடியும் வரை மேலும் விவரங்களைத் தெரிவிக்க முன்வரவில்லை.

கொழும்புவில் ஒரு வீட்டை சோதனையிட்ட போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுவரை, சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் ஒரு தேவாலயத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு, உலகெங்கிலுமிருந்தும் பலநாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த இந்தியா, இலங்கைக்குத் தான் பக்கபலமாக உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோதி, இலங்கை அதிபர் திரு மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். காட்டுமிராண்டித்தனமான, கொடூரத் தாக்குதலாக இச்சம்பவத்தை விவரித்த அவர், அனைத்து விதங்களிலும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். கட்சிப் பாகுபாடின்றி, அனைத்து இந்திய அரசியல் தலைவர்களும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை எளிதான இலக்காகத் தேர்வு செய்து அதிக தாக்கத்தை உண்டாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கக்கூடும். இப்பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கும், மேற்கத்தியா நாடுகளுக்கும் இத்தாக்குதல் மூலம் செய்தி அளிக்க பயங்கரவாதிகள் நினைத்திருக்கலாம். தங்களது ஆதிக்கம் பரந்த விரிந்துள்ளது எனத் தெரியப்படுத்துவதற்காக, கொழும்புவிலும், கிழக்கேயுள்ள கடற்கரை நகரான பட்டிக்கோலாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். சொகுசு ஹோட்டல்களில் தாக்குதல் நிகழ்த்தியதன் மூலம், அதிகமான சர்வதேச பாதிப்பை இத்தாக்குதல் உண்டாக்கியுள்ளது. இலங்கைப் பொருளாதாரத்துக்கு உயிர்நாடியாக உள்ள சுற்றுலாத்துறையைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியதன் மூலம், நாட்டில் மத ரீதியிலான பிளவுகளை உண்டாக்க பயங்கரவாதிகள் முயற்சித்துள்ளனர்.

மூன்றாண்டுகளுக்கு முன்னதாக, லாஹூரில், ஈஸ்டர் பண்டிகை தினத்தில் நடந்த 75 பேரைப் பலிவாங்கிய தாக்குதலுக்கு ஒப்பாக இலங்கைத் தாக்குதல் கருதப்படுகிறது. பாகிஸ்தான் இதுவரை பயங்கரவாதிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. எனவே, சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தானால் குரலெழுப்ப இயலவில்லை. இலங்கைத் தாக்குதல், பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து எந்த தெற்காசிய நாடும் விடுபட்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. பயங்கரவாதை எதிர்கொள்ள, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதே சிறந்த வழியாகும். இதனை உதாசீனப்படுத்தும் எந்த நாடும் பயங்கரவாதத் தாகுதல்களிலிருந்து தப்புவது அரிதாகும்.