வட கொரியாவின் ஆயுதச் சோதனை: அமெரிக்காவுக்கான சங்கேதமா?

(கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

ஜனநாயக மக்கள் குடியரசான வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கெ.சி.என்.ஏ, அந்நாடு, வழி நடத்தப்பட்ட ஆயுதம் ஒன்றை சோதித்துள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது. இந்த சோதனை, ஆணு ஆயுத அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைக்கான தன்மை உடையதாக இருக்கும் என்பது தெளிவாக இருந்தாலும், இதை ஒரு அதிநவீன ஆனால், செயலுத்தி ரீதியாக வழி நடத்தும் ஆயுதத்திற்கான சோதனை என்று கெ.சி.என்.ஏ கூறியுள்ளது. அதாவது, இந்த ஆயுதத்தின் வரம்பு, அமெரிக்காவை எட்டும் அளவு அதிகமானதாக இருக்காது என்றே கருதப்படுகின்றது.

வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு, அமெரிக்காவின் பிரதிநிதியாக இருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவை மாற்றுமாறு வட கொரியா கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கோரிக்கையின் மூலம், வட கொரியா அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என அமெரிக்கா கருதுகிறது.

இதற்கான வெள்ளை மாளிகையின் பதில், கடுமையற்றதாகவும் எச்சரிக்கையுடனும் இருந்தது. டிரம்ப் நிர்வாகம், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கைவிட விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், அமெரிக்கா, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட, வடகொரியாவிற்கு அழைப்பு விடுத்தது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம், வியட்னாமில், அமெரிக்கா வட கொரியா இடையில் நடந்த இரண்டாவது உச்சிமாநாடு தோல்வியடைந்ததற்குப் பிறகு, வட கொரியாவின் வழிநடத்தப்பட்ட ஆயுத சோதனைப் பற்றிய செய்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   இதனால், இந்தப் பகுதிகளில் அமைதிக்கான வாய்ப்புகள் தொடர்பான கவலைகள் எழும்பியுள்ளன. தனது நாட்டுடன் எந்தவித மோதல்களும் ஏற்படாமல் இருக்க, அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை, கிம் ஜோங்-உன், தனது இந்த எச்சரிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். ஏப்ரல் துவக்கத்தில், சுப்ரீம் மக்கள் சட்டசபையில் பேசுகையில், திரு.கிம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு, இவ்வாண்டின் இறுதியை காலக்கெடுவாக வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு, ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் திரு. கிம் ஜோங்-உன் கையெழுத்திட்ட உறுதிப்பாட்டின் படி, அமெரிக்காவும், வட கொரியாவும் கொரிய தீபகற்பத்தில், அமைதியான நிலையான ஆட்சி அமைய இணைந்து உழைப்பதாகத் தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலாக, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற இடமாக மாற்றுவதை நோக்கி உழைப்பதாக வடகொரியாவும்  உறுதி அளித்திருந்தது. தடைகளை அகற்றுவது, வட கொரியாவிற்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை அளிப்பது, தென் கொரியாவுடனான ராணுவ இணைப்புகள் இல்லாமல் இருப்பது என, அனைத்து விஷயங்களிலும், அமெரிக்கா எடுத்துள்ள முயற்சிகளில் திரு. கிம் ஜோங்-உன்-னிற்கு எந்தவித திருப்தியும் இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகின்றது. கிம்-ஜோங்-உன், கொரிய தீபகற்பத்திலிருந்து அணு ஆயுதங்களை அகற்றுவது தொடர்பாக ஒரு திடமான நடவடிக்கையை எடுப்பதற்காகவே அமெரிக்கா காத்துக் கொண்டிருக்கின்றது என வடகொரியா எண்ணுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்த வரை, வட கொரியாவின் அணு ஆயுதங்கள்தான் பேச்சுவார்த்தைகளின் மையப் புள்ளியாக உள்ளன. தனது அணு ஆயுதங்களை வட கொரியா விட்டுக்கொடுப்பது தொடர்பாக, அந்நாடு ஒரு தெளிவான உறுதிப்பாட்டை அளிக்க வேண்டும் என்பதை திரு.டிரம்ப் அவ்வப்போது தெளிவுபடுத்தி வருகிறார். 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட , கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹ்வாசோங்க்-15 ஏவுகணையின் சோதனைக்குப் பிறகு, வட கொரியா, அணு/ஐ.சி.பி.எம் சோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனது நாடு தொடர்ந்து எந்த வித அணு சோதனையையும் செய்யாது என்றும், அவற்றிற்கான தேவை இனி இல்லை எனவும் திரு. கிம் ஜோங்-உன் தெரிவித்திருந்தார். வட கொரியா இது வரை, இந்த நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை.

திரு.டிரம்ப் – திரு.கிம் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அலங்காரச் சொற்கள் ஒலித்தாலும், ஆக்கபூர்வமான முடிவு எதுவும் வெளிவரவில்லை. வட கொரியா நீண்ட நாட்களுக்கு அமைதியாக இருக்காது என்றும், அமெரிக்காவை எச்சரிக்க, இப்படிப்பட்ட ஒரு சிறிய சோதனையையாவது அந்நாடு மேற்கொள்ளும் என்றும் பரவலாக எண்ணப்பட்டது. சில பொருளாதாரத் தடைகளை நீக்க, அமெரிக்காவை வடகொரியா கட்டாயப்படுத்தும் ஒரு உக்தியாகவே, சமீபத்தில் வட கொரியாவால் மேற்கொள்ளப்பட்ட சோதனைபார்க்கப்படுகின்றது. வட கொரியா மைக் பாம்பியோவை மாற்றக் கோரியுள்ளதன் மூலம், வட கொரியா தனது அணு ஆயுதங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதும், அதிபர் டிரம்ப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையே அந்நாடு விரும்புகிறது என்பதும் தெளிவாகியுள்ளன.

இவ்வாண்டு ஹனோயில் நடந்த இரண்டாவது டிரம்ப்-கிம் உச்சிமாநாடு எந்த வித முடிவும் ஏற்படாமல் நிறைவு பெற்றாலும், இந்த சந்திப்புதான் திரு.கிம்-முடனான தனது இறுதி சந்திப்பு என்ற வகையில் எந்த வித கருத்தையும் திரு. டிரம்ப் தெரிவிக்கவில்லை. இருவருக்குமிடையில் மற்றொரு  உச்சிமாநாடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது என்றே தெரிகிறது. எனினும், அப்படிப்பட்ட ஒரு சந்திப்பிற்கு முன், வட கொரியா சில திடமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கிடையில், வட கொரியா ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்த, வட கொரியத் தலைவர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்கா-வட கொரியா  இடையிலான பேச்சுவார்த்தைகளில், இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த விஷயத்தைப் பொறுத்த வரை, கொரிய தீபகற்பம் அமைதியாகவும் ஸ்திரமாகவும் இருக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது.