மூன்றாம் கட்ட தேர்தலில் பெருவாரியான மக்கள் வாக்களிப்பு.

(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்மை நிருபர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் பயிற்சியான இந்திய மக்களவைத் தேர்தல், இதுவரை, 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முடிவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்திற்கு 116 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில், 18.85 கோடி வாக்காளர்களில், 66 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை மூன்று கட்ட வாக்குப் பதிவுகள், தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், சுமுகமான முறையில் நடைபெற்றுள்ளன.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில், இதுவரை 303 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இந்திய வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில், பலதரப்பட்ட கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாம் கட்ட தேர்தலில் 116 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1640 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் இந்திய ஜனநாயகம் உறுதியுடன் விளங்குவது நிரூபிக்கப்படுகிறது. 66 சதவீத மக்கள் வாக்களித்ததன் மூலம், ஜனநாயகத்தில் உள்ள மக்களின் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. 14 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில், காலை முதலே வாக்காளர்கள்  வாக்குச் சாவடிக்குச் சென்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மூன்றாம் கட்ட தேர்தலில் மட்டும் நாடு முழுவதிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. “ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது” என்ற அடிப்படையில், ஒரே ஒரு வாக்காளருக்காக குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள, ஆசிய சிங்கங்களுக்குப் பெயர்போன காட்டுப்பகுதியில், பானேஜ் கிராமத்தில், தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைத்திருந்தது.

இந்தியாவின் மேற்குப் பகுதியான குஜராத், 26 நாடாளுமன்ற இடங்களுக்காக வாக்களித்தது. கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிக்காக வாக்களிக்கப்பட்டது. இதைத் தவிர, பீஹார், உத்திரப் பிரதேசம், கர்நாடகா, கோவா, திரிபுரா ,மகாராஷ்டிரா, ஒரிசா மேற்கு வங்காளம், தாத்ரா -நாகர் ஹவேலி மற்றும் தாமன் தியு ஆகிய இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் காரணங்களுகாக, பீஹார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், அடுத்து நடக்கவிருக்கும் நான்காவது கட்ட தேர்தல்களிலும் வாக்களிப்பு நடைபெறும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அனந்த் நாக் நாடாளுமன்ற தொகுதியின் சில பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அடுத்த இரண்டு கட்டங்களில் இந்தத் தொகுதிக்கான வாக்களிப்பு பூர்த்தி அடையும். பாதுகாப்பு காரணங்களுக்காக, அனந்த் நாக் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் தான் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடத்தைக் குறியீடை முழுமையாக நிறைவேற்ற இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாக்காளர்களின் செல்வாக்கைப் பெறுவதற்காக பல அரசியல் கட்சிகள் மயக்கும் விதமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. நேர்மையற்ற முறையில் நடப்பவர்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூன்றாம் கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ள இந்த நேரம் வரை, நாடு முழுவதிலும் 3100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தைக் குறியீடை மீறும் அரசியல்வாதிகள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தைக் குறியீட்டின் புனிதத்தன்மையை கெடுத்த, சில மூத்த அரசியல் வாதிகளை  சில நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு  தேர்தல் ஆணையம் தடை விதித்தது. வாக்குக்காக, ஜாதி மற்றும் மதத்தைக் குறிப்பிட்டுப் பேசுவது, தேர்தல் நடத்தைக் குறியீட்டின்  தீவிர மீறல் ஆகும்.

நடைபெற்று வரும் தேர்தலில், வாக்காளர்களின் உற்சாகம் மிகவும் பாராட்டத்தக்கது. முதல் மூன்று கட்ட தேர்தல்களிலும் இளம் வாக்காளர்களின் ஆர்வம் மிகவும் குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள், சோர்வடையாமல் களத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பே சுமூகமான முறையில் தேர்தல் நடைபெற உதவியுள்ளது..

மீதமுள்ள 240 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் 19 ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்கள் மீதமுள்ள தொகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்.

2019 ஆம் வருட நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி வெளிவரும்.