உக்ரைன் நாட்டு சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயம்.

(இட்சா ஆய்வாளர் ரஜோர்ஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

அதிபர் தேர்தலில், அரசியல்வாதியாக மாறிய நகைச்சுவை நடிகர் வோல்டோமிர் ஸெலென்ஸ்கி, பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது, உக்ரைன் நாட்டு அரசியல் சரித்திரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அவர் 73 சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டின் மிகவும் இளைய அதிபராகியுள்ளார். ரஷிய மொழி பேசும் இவரது பூர்வீகம் யூத இனத்தினரானது.

வாழ்க்கை, கலையைப் பின்பற்றுகிறது என்ற கூற்றுக்கிணங்க, ஸெலென்ஸ்கி அவர்களின் வெற்றி அமைந்துள்ளது. தொலைக்காட்சித் தொடரில் அதிபராக நடித்து வந்த அவர், நிஜவாழ்க்கையிலும் அதிபராகியுள்ளார். அரசியலில் அனுபவமற்ற ஸெலென்ஸ்கி, அதிபர் தேர்தல் அறிவிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பாகத்தான் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். அதற்குப் பின்னரே, காலம் தாழ்த்தி அரசியல் கட்சியைத் துவக்கினார்.

ஆளும் கட்சிக்கு எதிராக உணர்வுகள் தூண்டப்பட்ட நிலையில், அரசியலில் புதிதாகப் பிரவேசம் செய்பவர்கள், உலகெங்கிலும் வெற்றி பெற்று வரும் போக்கைப் பின்பற்றி, உக்ரைன் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதிபராக இருந்த பெட்ரோ போரோஷென்கோ, ‘தேவாலயம், ராணுவம், மொழி” என்ற முழக்கத்துடன் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். மாற்றாக, ஸெலென்ஸ்கியோ, 2014 ஆம் ஆண்டு மைதான் புரட்சி, புரையோடிப்போன ஏமாற்றமளித்ததை தமது தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிறுத்தினார். எங்கும் பரவிய ஊழல், மெத்தனமான பொருளாதார வளர்ச்சி, ரஷ்யாவுடனான மோதல் ஆகியவையே உக்ரைன் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருந்தன.

உள்நாட்டு சீர்திருத்தங்கள் தவிர, அதிக சமநிலை கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் முன்னிறுத்தி, மாற்றங்களுக்கு வித்திடுவதை தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக, ஸெலன்ஸ்கி அவர்கள் வெளியிட்டார். மேற்கத்திய நாடுகளைச் சார்ந்தும், அதேசமயம், டோனெஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் கிழக்கு பிராந்தியங்களுக்கு இடையிலான போரை நிறுத்தவும், ரஷியாவுடன் காலவரையற்ற சமாதானத்திற்கான வழியைக் கண்டறியும் விதமாகவும் அவரது வெளியுறவுக் கொள்கை அமைந்தது. புதிதாக அதிபராகும் ஸெலென்ஸ்கி எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து, உக்ரைன் நாட்டில் மாற்றங்கள் எந்த அளவுக்கு வெற்றி அடையப் போகின்றன என்பது தீர்மானிக்கப்படும்.

நிறுவனக் கட்டமைப்பின் பின்னணி, ஸெலென்ஸ்கி அவர்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற ஜனநாயக நாடான உக்ரைன் போன்ற நாட்டில், இதனால் அவரது திட்டங்களுக்குப் பின்னடைவு ஏற்படலாம். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவற்றில் அதிபர் தனித்து செயல்பட முடியும் என்றாலும், உள்நாட்டு சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடைகளை உருவாக்கக் கூடும். ராடா எனப்படும் உக்ரைன் நாடாளுமன்றத்தில், தற்போது எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையில் உள்ளன. அரசியலுக்கும், தொழிலுக்கும் இடையே, மெல்லிய நூலிழை போன்ற எல்லைகள் கொண்ட பழைய முறைக்கே நாடு திரும்ப கொண்டு செல்லப்படலாம் என்பதற்கான வாய்ப்புக்களை, அதிபருடன் நெருக்கமான ஊடகங்கள் மற்றும் வங்கிகள் ஊதிப் பெரிதாக்குகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் வரவேற்கத்தகாத சீர்திருத்தங்கள், ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகள் ஆகியவை, உக்ரைன் நாட்டின் பொருளாதார உயிர்நாடியைப் பாதித்துள்ளன. புதிய அதிபருக்கு இது பெரும் சவாலாக அமையும். கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் பகுதிகளிக்கிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு தனித்திறமை தேவைப்படுகிறது.

எனினும், அரசியல் களங்கமற்ற பின்னணி கொண்ட ஸெலென்ஸ்கி அவர்களுக்கு நாடு முழுவதும் பெருவாரியான ஆதரவு கிட்டியுள்ளது. இதனால், உள்நாட்டு, வெளியுறவு விஷயங்களில் புதிய அத்தியாயத்தைத் துவாக்க வாய்ப்பும் கிட்டியுள்ளது. வரும் அக்டோபர் மாதம், நாடாளுமன்றத் தேர்தல் உக்ரைனில் நடக்கவிருக்கிறது. அப்போது, ஸெலென்ஸ்கி அவர்களின் அரசியல் திறமை வெளிப்படும்.

ரஷியாவுடனான இறுக்கமான உறவு தொடர்வது, சவாலாக உள்ளது. கிரிமியாவைத் திரும்பப் பெறுவதும், மேற்கத்திய நாடுகளுடன் சார்ந்திருப்பதும் ஸெலென்ஸ்கி அவர்களின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடம் பெறுகின்றன. பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக உள்ள மின்ஸ்க் ஒப்பந்தத்தை செயல்படுத்துமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இது, ஸெலென்ஸ்கி அவர்களுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கும். ரஷிய அதிபர் புடின், ஸெலென்ஸ்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது பற்றியோ, இரு தலைவர்களும் இணைந்து பணியாற்றுவது பற்றியோ பேச காலம் இன்னும் கனியவில்லை என, மிகுந்த எச்சரிக்கையுடன், ரஷிய செய்தித் தொடர்பாளர்  அறிக்கை வெளியிட்டுள்ளார். இது, இருநாடுகளின் கண்ணோட்டங்களில் தற்போது நிலவி வரும் வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. ஸெலென்ஸ்கி அவர்கள் உக்ரைனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, கைதிகளைப் பரிமாறிக் கொள்ளுதல், நீண்டகாலப் போர் நிறுத்தம் உள்ளிட்ட நம்பிக்கை நடவடிக்கைகளை இருநாடுகளும் முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக அமையும்.

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் நட்பு நாடாக விளங்கும் இந்தியா, இருநாடுகளும் தங்களுக்கிடையேயான பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறது. இது உக்ரைன் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம்.

கலைத்துறையிலிருந்து நிஜ வாழ்க்கையில் அதிபராக மாறியுள்ள ஸெலென்ஸ்கி அவர்களுக்கு, உக்ரைன் நாட்டின் அபிரிமிதமான சக்தியை முழு அளவில் பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.