அமெரிக்க, இந்திய உறவுகளும் ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான விதிவிலக்கும்.

(அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையிலிருந்து அமெரிக்கா அளித்திருந்த விதிவிலக்கை புதுப்பிக்கப் போவதில்லை என, இந்த வாரத் துவக்கத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்தார். இதனால், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க கூட்டணி நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் துருக்கிக்கு அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும். விலக்கு அளிக்கப்பட்டிருந்த மற்ற மூன்று நாடுகளான இத்தாலி, கிரீஸ் மற்றும் தாய்வான் தங்களது இறக்குமதியை முற்றிலுமாகக் குறைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டது முதல், டிரம்ப் நிர்வாகம், ஈரானை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு, 180-நாட்கள் என்ற கால அளவிற்கு, இறக்குமதித் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இவ்வாண்டு மே மாதம் இந்த விலக்கு காலாவதியாகிறது. அமெரிக்கா இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிடும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. இந்த விஷயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில்,  இது குறித்து இந்தியா அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த இந்தியா, இந்த விலக்கைத் தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் அதே சமயம், ஈரானிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்கான மாற்றையும் இந்தியா ஆராய்ந்துள்ளது. மற்ற நாடுகளிலிருந்து போதுமான கச்சா எண்ணெயைப் பெறுவதை, உறுதி படுத்துவதற்கான வலுவான திட்டங்கள் உள்ளன என்பதை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், பல இடங்களிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்கின்றன என்றும், கடந்த சில மாதங்களாக, ஈரானிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்கான மாற்றையும் தயார் செய்து வருகின்றன என்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் கூறியுள்ளது.

இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்ய உதவுவதாக, சௌதி அரேபியா, ஐக்கிய அரப் அமீரகம் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஓ.பி.ஈ.சி-யின் உறுப்பினர் நாடுகளும் இந்தியாவிற்கு உறுதி அளித்துள்ளன.  இந்த உறுதிகளையும் தாண்டி, சர்வதேச எண்ணெய் விலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆறு மாதம் இல்லாத அளவு அதிகமாக தற்போது விலைகள் உள்ளன. கச்சா எண்ணெயின் விலை உயர்வால், இந்தியாவின் நிதி நிலை மற்றும் நடப்பு கணக்குப் பற்றாக்குறைகளில் இறுக்கம் ஏற்படலாம். விலை உயர்வின் தாக்கம் நுகர்வோரையும் தொடர்ந்து பாதிக்கும் என்பதால், இதனால், பணவீக்கம் அதிகமாகலாம். ஈரானிடமிருந்து எண்ணெய் பெற்ற அதே விதிமுறைகளின் படி எண்ணெய் வாங்க, இந்தியா தனது மேற்காசிய கூட்டாளி நாடுகளுடன் பேசி வருகிறது. வருடாந்தர ஒப்பந்த விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்தியா வற்புறுத்தி வருகிறது. பகுதி ஒப்பந்தங்களை விட, வருடாந்தர ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கு மலிவானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு அடுத்தபடியாக, ஈரானிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இரண்டாவது நாடு இந்தியா. ஈரானிலிருந்து பெறப்படும் எண்ணெயின் அளவு இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 11 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவிற்கு அதிக அளவில் எண்ணெய் வழங்கும் நாடுகளில், ஈராக் மற்றும் சௌதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக, ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஈரானுடனான கட்டண விதுமுறைகளும் இந்தியாவிற்கு சாதகமாக உள்ளன. எண்ணெய்க்கான கட்டணத்தை புது தில்லி, இந்திய வங்கி ஒன்றில், ஒரு காப்புக் கணக்கில், இந்திய ரூபாயில் செலுத்துகிறது. இந்தத் தொகை பின்னர், மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வாங்க, ஈரானால் பயன்படுத்தப்படுகின்றது. கணக்கில் இருக்கும் கார்ப்பஸ் தொகையை, ஈரான் உபயோகிக்கலாம் என அமெரிக்கா கூறியிருந்தாலும், இந்தியாவால் இனி இந்தத் தொகையை அதிகரிக்க முடியாது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இன்னும் சரியான தெளிவு இல்லை என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய சுத்திகரிப்பு ஆலைகளின் உள்ளமைப்பு, ஈரானின் கச்சா எண்ணெயின் குறிப்பிட்ட வகைகளுக்கேற்ற படி இருப்பதால், இந்தியாவிற்குப் பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்தியா தடைகளை மீறினால், இரண்டாம் நிலைத் தடைகளை எதிர்கொள்ள நேரலாம். இதன்படி, சர்வதேச ஸ்விஃப்ட் எனப்படும் வங்கிப் பரிமாற்ற முறையை பயன்படுத்துவதிலிருந்து இந்திய நிறுவனங்கள் தடை செய்யப்படக்கூடும். அமெரிக்காவில் இருக்கும் சில சொத்துக்களையும் இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். இந்தக் காரணங்களுக்காகவே, இந்திய நிறுவனங்கள், ஈரானுடன் தொடர்புகள் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து வந்துள்ளன.

எரியாற்றல் வழங்கலைத் தவிர, இந்தியா-ஈரான் உறவுகளும் கேள்விக்குறியாக உள்ளது. பாகிஸ்தானால் தடுக்கப்பட்டிருக்கும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான முக்கிய வழிப்பாதையை ஈரான் இந்தியாவிற்கு வழங்குகிறது. இந்தத் தடைகளால், சபஹர் துறைமுக பணித்திட்டங்கள் பாதிக்கப்படாது. எனினும், இந்தியாவிற்கு இந்தத் திட்டம் முக்கியமாக இருக்கும் அதே நேரம், தற்போதைய சூழல் மாற்றத்தால், இந்தத் திட்டத்தில் ஈரனின் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமானத் தடைகளை சீனா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தடைகளை நிராகரிப்பதாக துருக்கியும் கூறியுள்ளது. எனினும், இந்த விஷயத்தில், இந்தியா எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் தான் நடவடிக்கையை எடுத்து வருகின்றது. ஏனெனில், பாகிஸ்தான் ஆதரவுபெற்ற தீவிரவாதம் என்ற விஷயத்தில், இந்தியாவின் கவலைகளையும் கருத்துகளையும் அமெரிக்கா புரிந்துகொண்டு செயல்படுவதை இந்தியா வரவேற்கிறது.

சில விவகாரங்களில், இந்தியா ஈரான் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவு, உறுதியான திடமான முறையின் தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பதே உண்மையாகும்.