தெற்காசியாவில் தீவிரவாதம்.

(இட்சா மூத்த ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி)

கடந்த ஞாயிறு, ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் தேவாலயங்களில் மக்கள் குழுமியிருந்த சமயத்தில், 8 தற்கொலைப்படைத் தீவிரவாதிகள், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். கொழும்பு, நிகோம்போ மற்றும் பட்டிகொலோவா என்ற மூன்று இடங்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 38 அயல்நாட்டினர் உட்பட, 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்து இருதினங்கள் கழிந்தபின், சஹ்ரான் ஹஷிம் தலைமையில், ஏழு தீவிரவாதிகள் அடங்கிய தங்கள் குழு, இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, பொறுப்பேற்றது ஆச்சரியமளிக்கும் விதமாக அமைந்தது. இது குறித்து, தீவிரவாதிகள், ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபு பக்கர் பக்தாதிக்கு அடிபணிவதாக உறுதியளிக்கும் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகள், சந்தேகத்துக்கிடமான 70 நபர்களைக் கைது செய்தனர். கொழும்புவில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டபோது, ஒரு தீவிரவாதியின் மனைவியாகக் கருதப்படும் பெண், தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக் குண்டு வெடிப்பை நடத்தினார். இருவேறு இடங்களில், வெடிக்காத குண்டுகள் செயலிழக்கப்பட்டன. இதன்மூலம், தீவிரவாதிகள் மேலும் பல இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பட்டிகொலோவாவில் உள்ள காட்டாங்குடியைச் சேர்ந்த சஹ்ரான் ஹஷிம், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக, முதல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஹஷிம், இளம் வயதிலேயே தீவிரவாதப் போக்கைக் கொண்டிருந்ததால், உள்ளூர் முஸ்லீம் சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்பட்டான். காட்டாங்குடியிலிருந்து வெளியேறி மாலத்தீவுகளில் சிறிது காலம் வசித்த, ஹஷிம், தென்னிந்தியாவுக்கும் பயணித்திருக்கலாம் என்று தெரிகிறது.

பின்னர் காட்டாங்குடிக்குத் திரும்பிய ஹஷிம், தீவிரவாத எண்ணங்களைத் தொடர்ந்ததோடு, அங்கு தௌஹீத் மசூதியை நிறுவி, சலாஃபி மார்க்கத்தைப் போதிக்கத் துவங்கினான். தனது பேச்சாற்றலால், நூற்றுக்கணக்கான இளைஞர்களை நேரிடையாகவும், யூ டியூப், முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஈர்த்தான். ஆக்ரோஷமான ஹஷிமின் பேச்சால் தாங்கள் கவரப்பட்டதாக, தமிழ்நாட்டில், சில மாதங்களுக்கு முன்பாகப் பிடிபட்ட ஐ.எஸ்,. தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சலாஃபி மார்க்க இஸ்லாம் மதத்தைப் பரப்பும் நோக்குடன், 2015 ஆம் ஆண்டு, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை ஹஷிம் உருவாக்கினான். ஆனால், ஹஷிமின் தீவிரவாதத்தை எதிர்த்தவர்கள் அவ்வமைப்பிலிருந்து தனியாகப் பிரிந்தனர். தற்போது இலங்கையில் நிகழ்ந்த சம்பவத்துக்கு, ஹஷிம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் பிரிவு பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில், புத்தர் சிலைகளை ஹஷிம் பிரிவு சூறையாடியதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், மத்திய இலங்கைப் பகுதியில் உள்ள புட்டலம் என்னுமிடத்தில், வெடிகுண்டுகள், டிடோனேட்டர்கள் மற்றும் தீவிரவாத துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். சில நபர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பின்னர் புறக்கணிக்கப்பட்டது. கூடுதலாக, ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தக்கூடும் என்ற முக்கிய உளவுத் தகவலை இந்தியா இலங்கைக்கு அளித்திருந்தது. இந்த முக்கியத் தகவல், இலங்கை  அரசியல் சக்திகளிடையே புறக்கணிக்கப்பட்டது வருத்தத்துக்குரிய விஷயமாகும். எல்டிடிஈ அமைப்பைத் தகர்த்த பின்னர், தளர்வடைந்த இலங்கை பாதுகாப்பு அமைப்பே இதற்குக் காரணமாகும்.

ஹஷிம் குழுவில் இணைந்த பிற தீவிரவாதிகள், வசதியான பின்னணியைக் கொண்டிருந்தனர். முகமது யூசுஃப் இம்ராஹிம் என்ற பெயர்போன மசாலாப் பொருட்களின் விற்பனையாளரின் இரு புதல்வர்களான இன்ஷான் மற்றும் இல்ஹாம் இந்த தீவிரவாதக் குழுவில் அடங்குவர். அப்துல் லதீஃப் ஜமைல் முகமது என்ற நபர், பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் வானவியல் பொறியியல் பட்டம் படித்தவன். தற்கொலைப் படையில், ஹஷிமின் சகோதரனும் இருந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பிராந்தியத்தில் தீவிரவாதம் தலை தூக்கியிருப்பதை இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம் வெளிப்படுத்துகிறது. தெற்காசிய நாடுகளில் சமுதாயங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கும் போக்கு தென்படுகிறது. சிற்சில குறைந்த அளவிலான வன்முறையும் பூதாகரமாக வெடிக்கும் அபாயம் உள்ளது.

இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில், மதங்களுக்கிடையே வேறுபாடுகள் சிலகாலமாக நிலவி வருகிறது. வெறுப்பும் அச்சமும் தூண்டப்பட்ட நிலையில், இப்பிராந்தியத்தில் தீவிரவாதிகள் தங்கள் தடம் பதிக்க உகந்த சூழல் உருவாகியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்திலும் கூட, சமுதாயங்கள் தீவிரவாதப் போக்கை மேற்கொள்வது அதிகமாகியுள்ளது. மாலத்தீவுகளிலும் இந்த அடிப்படைத் தீவிரவாதம் பரவியுள்ளது. ஆஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இது தினந்தோறும் நடந்தேறும் செயலாக உள்ளது. தீவிரவாதத்தைத் தங்கள் ஆயுதமாகவே கைக்கொண்டிருக்கும் சிலநாடுகளில் தீவிரவாதிகள் தாராளமாகப் புழங்க முடிகிறது. இலங்கைக் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்க, எந்நேரமும் தளராமல் விழிப்புடன் இருந்து, உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தெற்காசிய நாடுகள் உள்ளன.