சிக்கலில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்

அகில இந்திய வானொலியின் செயலுத்தி விவகாரங்கள் ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

பாகிஸ்தானின் நிலவரம் ஏதும் நன்றாக இருப்பது போல் தெரியவில்லை.  அதன் பொருளாதாரமோ கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில்,  காப்பாற்றுவதற்கான சர்வதேச நிதியத்தின்  உதவி இன்னும் வராத நிலையில்,  அந்நாட்டின் நிதியமைச்சர் அசாத் உமர் பதவி இறங்க வேண்டியதாய்ப் போய்விட்டது.  இஸ்லாமாபாத்,  நிதியமைச்சரின் பதவி விலகலை அடக்கி வாசித்தபோதிலும்,  இம்ரான் கான் தலைமையிலான அரசு ஒரு வருட ஆட்சியைப் பூர்த்தி செய்யாத நிலையில்  நாட்டின் நிதியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலையானது,  பாகிஸ்தான் இருக்கும் நிலையைப் பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளது.

 

சர்வதேச நிதியத்திடமிருந்து 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி கேட்டு இஸ்லாமாபாத் அழுத்தம் கொடுத்து வருகிறது.  இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டால்,  சர்வதேச நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் 13வது முறை உதவித் தொகையாக இது அமையும்.     ஏற்கனவே  சவுதி அரேபியா,  ஐக்கிய அரபு அமீரகம், சீனா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஏறத்தாழ 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை மென் கடனாக வழங்கியுள்ளன.  வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியமானது  இந்த உதவியை வழங்க இரண்டு மாத கால அவகாசம் ஆகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  அப்படி வழங்கப்படும் கடன் தொகையும்  பாகிஸ்தான் கேட்பதை விடக் குறைவாகவே இருக்ககூடும்.  8 முதல் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாகிஸ்தானின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக சர்வதேச நிதியம் வழங்ககூடிய கடன்தொகையாக இருக்க்க்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.  இத்துடன் கடுமையான நிபந்தனைகளும் இருக்க்க்கூடும்.

ஏறிக்கொண்டிருக்கும் அன்றாட உபயோகப்பொருட்களின் விலை உயர்வால்  திரு கானுடைய அரசானது பொது மக்களின் அதிகரித்து வரும் கோபத்திற்கு ஆளாகிக்கொண்டு வருகிறது.  இவற்றில் பெரும்பாலான பொருட்கள்  அடுத்தடுத்த பணப்பற்றாக்குறை அரசாங்கங்களினால் மலிவு விலையில் வழங்கப்பட்டு வந்தவை ஆகும்.  நாட்டில் பண வீக்கமானது 9.5 சதவிகிதத்திற்கு அருகிலுள்ளது;  நவம்பர் 2013க்கு பிறகு மிக அதிகமான பண வீக்கமாகும் இது.  உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது;  இவை இரண்டுமே பெரும்பாலான பாகிஸ்தானிய நுகர்வோருக்கு மிக முக்கியப் பொருட்கள் ஆகும்.

யார் ஒருவர் நிதி அமைச்சராக வந்தாலும்,  அவர் நாட்டின் பொருளாதார நிலைமையை மிக நன்றாக அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று திரு உமர் ராஜினாமா செய்த பின்னர் கூறியுள்ளார்.  நாங்கள் வந்த போது பாகிஸ்தானின் பொருளாதாரம்  சரித்திரத்திலேயே மிக மோசமான நிலையில் இருந்தது;  நல்லவை, மோசமானவை இரண்டுமே இருந்தாலும் கூட  மோசமான விஷயங்கள் மிக மோசமானவையாக இருந்தன என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் அரசானது  மோசமான நிலையில் இருந்து நாடு வெளி வருவதற்காகச் சில கடுமையான முடிவுகளை எடுத்தது என்றும்,  அதன் விளைவால் சில முன்னேற்றங்களைக் கண்டது என்றும்  பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.  ஆனால் புது நிதி அமைச்சர்,  நாங்கள் எதிர் கொண்ட சூழல் அல்லாத   வேறு வகையான பொருளாதாரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று திரு உமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கடுமையான முடிவுகள் என்று திரு உமர் கூறியது,  உணவுப் பொருட்கள் மற்றும் உபயோகப்பொருட்கள் மேலும் விலை உயர்வுகள் பற்றியதாகும்.   இது அரசாங்கத்தையே திருப்பித் தாக்கும் வல்லமை படைத்ததாகும்.  ஏற்கனவே  அத்யாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து   நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் என்ற இம்ரான் கானின் தேர்தல் வாக்குறுதியானது இன்னமும் சாத்தியப்படவில்லை.   அவர் கூறிய ‘புதிய பாகிஸ்தானும்’  இன்னமும் எங்கும் தென்படவில்லை; தென்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை.

 

நிலவி வரும் மோசமான பொருளாதாரச் சூழலில்,  பாகிஸ்தானின் மத்திய வங்கியானது  4 சதவிகித பொருளாதார வளர்ச்சி இருக்ககூடும் என்று கணித்திருக்கிறது;  இது இம்ரான் கான் அரசின் இலக்கான 6.2 சதவிகிதத்திலிருந்து மிகவும் குறைவாகும்.  ஆனால் சர்வதேச நிதியமானது,  பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியானது  2019-ல் 2.9 சதவிகிதமும்,  2020-ல்  2.8 சதவிகிதமும் இருக்ககூடும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே  பிரதமர் இம்ரான் கானுக்கும்,  பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் புட்டோ சர்தாரிக்கும் இடையே சமூக ஊடகத்தில் நடந்து வரும்  கடும் போரானது  பெரும்பாலான பாகிஸ்தானியர்களுக்கு இந்த வாரம் நகைச்சுவை நிவாரணத்தை அளித்தது.    முதலில் ஆப்ரிக்காவை ஒரு நாடு என்று கூறிய திரு கான், பின்னர் இந்த வாரம் இரானுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றிருந்த போது ஜப்பானும் ஜெர்மனியும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.  பாகிஸ்தான் பிரதமர் கூற வந்தது ஜெர்மனியும் ஃப்ரான்சும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதாகும்.  ஆனால்  வாய் தவறி திரு கான் கூறியதற்கான திருத்தம் எதுவும் திரு கானின் அலுவலகமோ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமோ அளிக்கவில்லை.  இது மிகப்பெரும் சிரிப்பலையை பாகிஸ்தானில் ஏற்படுத்தியது.  தானும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவரான பிபிபி கட்சியின் தலைவர், மிகவும் பெயர் பெற்ற அப்பல்கலைகழகத்தில்  திரு கான் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஒதுக்கீட்டில் சேர்ந்திருப்பாரோ என்று ட்வீட் செய்ய,  திரு கானின் தவறான கூற்றுக்களால் பல பாகிஸ்தானியர்கள் சங்கடப்படுகின்றனர்.

பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் திருப்பு முனை ஏற்படுத்துகிறேன் என்று ஆய்ந்தறியாமல் பெரும் சிக்கலில் பாகிஸ்தானை திரு கான் கொண்டு விடாமல் இருக்கவேண்டும்.  அவரது நாட்டிற்கு இப்போது மிக அவசியமான தேவை,  முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு உற்பத்திகள்.  இவை நடக்கவில்லை என்றால்,  பொது மக்களின் கோபம் மேலும் அதிகமாகக் கூடும்.  எந்த பாகிஸ்தான் பிரதமரும் தனது   பதவி காலத்தை  முழுமையாக முடித்ததில்லை என்ற சாபக்கேட்டை அவர் நினைவில் கொள்ளவேண்டும்.