கொரிய தீபகற்பம் குறித்து புதின் – கிம் பேச்சுவார்த்தை.

(ரஷ்யாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அவர்களை ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளாடிவாஸ்டாக் நகரில் சந்தித்துப் பேசினார். இது இந்த இரு தலைவர்களுக்குமிடையே ஏற்படும் முதல் சந்திப்பாகும். இருநாடுகளும், பனிப்போர் காலத்திலேயே நட்புநாடுகளாக விளங்கியதால், இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ரஷ்யா அந்தப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாலும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. . வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்ட  ரஷ்யாவுக்கு, இப்பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் அந்தப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஷிய அதிபர் புதின் அவர்களுக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குமிடையே, இந்த சந்திப்பு நிகழ்ந்த அதேவேளையில், தென்கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இது இருநாடுகளுக்குமிடையே வழக்கமாக மேற்கொள்ளப்படும் பிரம்மாண்ட ராணுவப் பயிற்சி போல் இல்லாது, மிகச் சிறிய அளவில் நடத்தப்பட்டாலும், வடகொரியா ஆத்திரம் அடைந்துள்ளது.

ஹனோய் நகரில் நடைபெற்ற வட கொரிய, அமெரிக்கப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாமல் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வடகொரியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது. அமெரிக்கா மீதான தனது கண்டனங்களையும், அண்மையில், வடகொரியா பெரிதாக்கியது.

சோவியத் காலம் முதற்கொண்டே, ரஷ்யா, வடகொரியாவின் நட்புநாடாக இருந்து வந்துள்ளது. தென் கொரியாவுடன் ரஷியா தனது உறவுகளை சமநிலையில் வைத்துக் கொண்டிருந்ததால், வட கொரியாவுடனான  அந்நாட்டின் உறவுகள் ஏற்றமும் இறக்கமும் கொண்டிருந்தன. வடகொரியா தனிமைப்படுத்தப்படுவது, அப்பிராந்தியம் தவிர, உலக அளவில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் என்பதால், சீனாவும், ரஷியாவும் வடகொரிய அரசுக்கு ஆதரவளித்து வந்தன.

இருப்பினும், வடகொரியாவுக்கு எதிரான தடைகளை நீக்குவதற்கு முன்னதாக, கொரிய தீபகற்பத்தில் அணு  ஆயுதங்களற்ற நிலை உருவாக வேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கைக்கு ரஷியா ஆதரவளிக்கிறது. வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்புக்குக் கைமாறாக, அமெரிக்கா, வடகொரியா மீதான தடைகளைப் படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அவர்கள் கடந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார். படைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளுக்குப் பதிலாக, பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என, ரஷியா விரும்புகிறது. கொரிய தீபகற்பப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, நின்று போயிருந்த “6 கட்சி” பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க ரஷ்யா ஆதரவளிக்கிறது. கொரிய தீபகற்பத்தில் அணு  ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் ரஷியாவுக்கு உடன்பாடே என்றாலும், வடகொரியாவுக்கு உறுதியான உத்தரவாதமின்றி, அது சாத்தியப்படாது என ரஷியா நம்புகிறது.

கொரிய தீபகற்பத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது தவிர, ரஷியாவுக்கும், வடகொரியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதும், இருதலைவர்களின் சந்திப்பின் நோக்கமாக இருந்தது. இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய ரஷிய அதிபர் புடின், வடகொரியாவில் அணு ஆயுதங்களை ஒழிப்பதில் கிம் அவர்கள் ஆர்வமாக உள்ளார் எனக் குறிப்பிட்டார். எனினும், தங்கள் நாட்டின் நலனுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் கிம் அவர்கள் தீவிரமாக உள்ளார்.

வடகொரியாவின் கூட்டாளிகள், முக்கியமாக, அமெரிக்கா, வடகொரியாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதன் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும் என்று கிம்  அவர்கள் புரிந்து கொண்டுள்ளதாக ரஷிய அதிபர் கூறினார். வடகொரியாவுடனான செயல்பாடுகளில், அமெரிக்காவைத் தவிர்த்து, தென்கொரியா சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவின் கொள்கைகள் காரணமாகவே, 2018 ஆம் ஆண்டு முதல், கொரிய தீபகற்பத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்படாமல் தடைபட்டுள்ளன என்று வட கொரிய தலைவர் கூறினார். இந்த தீபகற்பத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பானது, அமெரிக்காவின் எதிர்கால அணுகுமுறையைப் பொறுத்தே உள்ளது என்றும் அவர் கூறினார். அதுவரை, நாட்டை சீர்குலைக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் எதிராக, வடகொரியா தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை, மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று ரஷியா கூறியுள்ளது. அதிபர் புடின் அவர்களின் இந்த முயற்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் பாராட்டியுள்ளார். ரஷியாவைப் பொறுத்தவரை, இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது. இதன் மூலம், புவிசார்ந்த அரசியல் மோதல்களில், நடைமுறைக்கேற்ற புரிதல்களைக் கொண்ட சக்தியாக, ரஷியாவின் பெயர் மேம்பட வழி ஏற்பட்டுள்ளதாக ரஷியா கருதுகிறது. தவிர, இப்பிராந்தியத்தில் ரஷியாவின் நலன்களும் காக்கப்படும் என அந்நாடு நம்புகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவும் பதற்றமான உறவு நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வடகொரியா, ரஷியாவிடமிருந்து பொருளாதர சலுகைகளைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.  ரஷ்யாவின் ஒத்துழைப்பு, வடகொரியாவுக்கு, சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையைத் தளர்த்த உதவும்.

ரஷ்ய, வடகொரியத் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்துள்ளது, இதன் மூலம் சர்வதேச சமுதாயத்திற்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு, ஒரு திருப்புமுனைக்கான பணி நடப்பதாக இருநாடுகளும் தெரியப்படுத்தியுள்ளன.

இந்தியா இந்த முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால்தான் இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என இந்தியா நம்புகிறது.