வளையம் மற்றும் சாலைத் திட்டம் – பரவிடும் சீன ஆதிக்கம்.

(ஜேஎன்யூ கிழக்காசியக் கல்விப் பிரிவின் தலைவர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

சீனாவின் இரண்டாவது வளையம் மற்றும் மன்றம் முன்முயற்சி சந்திப்பானது, பீஜிங் நகரில் சென்ற வாரம் முடிவடைந்தது. 36 நாடுகளின் தலைவர்கள் அதில் பங்குபெற்றனர். ஐ. நா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்பட, 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், மற்றும் ஊடகம், கல்வி, மற்றும் பெரு நிறுவனங்களில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் இந்தோனேசியாவை தவிர அனைத்து தென்கிழக்காசிய நாடுகள், துர்க்மேனிஸ்தான் தவிர அனைத்து மத்திய ஆசிய குடியரசு நாடுகள், எட்டில் இரண்டு தெற்காசிய நாடுகள், கிழக்காசியாவில் இருந்து மங்கோலியா, மேற்கு ஆசியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா மற்றும் அசர்பைஜான் உள்பட 12 ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து ஐந்து நாடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் இருந்து சிலி போன்ற நாடுகள் கலந்து கொண்டன.

பிரிக்ஸ் அமைப்பின் ஐந்தில் மூன்று உறுப்பு நாடுகள் உள்பட, அமெரிக்கா, பிரிட்டன்,ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், துருக்கி மற்றும் இதர நாடுகள், இந்த இரண்டாவது பி ஆர் ஐ சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த மன்ற சந்திப்பிற்கு சில நாட்கள் முன்னதாக, சீனா , சாலை மற்றும் வளையம் முன்முயற்சி, மீதான, ”முன்னேற்றம், பங்களிப்பு மற்றும் வாய்ப்புகள்” என்ற மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. 2015 ஆம் வருடம் மார்ச் மாதம், சீனா வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், திட்ட ஒருங்கிணைப்பு, தொடர்பு, வர்த்தக ஊக்குவிப்பு, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் மக்களுடன் தொடர்பு, போன்ற துறைகள் குறித்த விளக்கத்தை வெளியிட்டிருந்தது.  இந்த இரண்டாவது மன்ற சந்திப்பில், பகிரப்பட்ட எதிர்காலம், உலகமயமாக்கலின் புதிய வழிமுறைகள், பல்நிலை அமைப்பு மற்றும் பிற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது, சீனாவின் சிறகு விரிக்கும் கொள்கையை வெளிப்படுத்துவதாக விளங்குகிறது.

சீன அதிபர் திரு ஸீஜின்பிங், தனது உரையில், பிஆர்ஐ திட்டத்தின் கீழ் உள்ள பகுதிகளில், உயர்தரம், நிலைத்தன்மை, ஆபத்தை எதிர்க்கும் சக்தி, நியாயமான விலை போன்றவற்றை உள்ளடக்கி, கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்து கோடிட்டு காட்டினார். இலங்கை, கென்யா போன்ற நாடுகளில், இத்திட்டத்தின் கீழ், கடனில் சிக்க வைக்கும் ராஜதந்திரத்தை சீனா கையாள்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பி ஆர் ஐ திட்டங்கள் பற்றித் தெளிவுபடுத்த சீனாவிற்கு அதிக அழுத்தம் ஏற்படும். இத்திட்டத்தின் கீழ், மலேசியாவில் அரசியல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் மலிந்தன. இந்த இரண்டாவது பி ஆர் ஐ, தலைவர்கள் மாநாட்டு மன்றத்தில், 6,400 கோடி டாலர் அளவிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அந்த ஒப்பந்தங்களின் விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

சிறிய நாடுகளில் இருந்து பி ஆர் ஐ திட்டத்திற்கு, அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அந்நாடுகளில் இணைப்புத் திட்டங்களுக்காக அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்த பி ஆர் ஐ திட்டத்திற்கு ரஷ்யா முழுவதுமாக ஒப்புதல் அளித்துள்ளது. யூரேஷியா பொருளாதார ஒன்றியத்தை பி ஆர் ஐ திட்டத்துடன் இணைக்க, அதிபர் புடின் அவர்கள் பரிந்துரைத்து வருகின்றார். இதற்கான முன் முயற்சி 2014 ஆம் வருடம் எடுக்கப்பட்டது. ஆச்சரியமளிக்கும் வகையில், ரஷ்ய அதிபர் புடின் அவர்கள், பொருளாதார வளர்ச்சியின்மைக்கு, பயங்கரவாதம் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான குடிபெயர்தல் ஆகியவற்றைக் காரணம் காட்டினார். இதனால், எதிர்காலத்தில் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் ரஷ்யாவும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என ரஷ்யா நம்புவது வெளிப்படையாகிறது..

சீனா, ஊழலை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டி பி ஆர் ஐ இன் பல திட்டங்களை மலேசியா ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தானும் 1400 கோடி டாலர் மதிப்புள்ள டயாமார்- பாசா அணைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. குவாதார் துறைமுகத் திட்டத்தின் வருமானத்தில், 93 சதவிகிதம் சீனாவிற்குச் சென்றுவிடும் என்று பாகிஸ்தானின் செனட் அறிக்கை விடுத்துள்ளது. பி ஆர் ஐ திட்டத்தினால் ஏற்படும் கடன்சுமை குறித்து, துருக்கியும் கவலை தெரிவித்துள்ளது. இதைத் தவிர, ஸின் ஜியாங் மாகாணத்தில் உய்கூர் மக்களை சீனா கையாளும் விதத்தை துருக்கி விமர்சித்துள்ளது.

பி ஆர் ஐ க்காக இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு  மன்ற சந்திப்புக்களினால், எத்தகைய தாக்கங்கள் ஏற்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்த பிஆர் திட்டத்தில் மொத்த முதலீடானது 10,000 கோடி டாலருக்குக் குறைவாக இருக்கும். இதே திட்டத்திற்கு, முன்னதாக, 2013 ஆம் வருடம் ஒரு லட்சம் கோடி டாலர் முதலீடு அறிவிக்கப்பட்டிருந்தது. இணைந்து முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய, இந்த இரண்டாவது பி ஆர் ஐ மன்ற சந்திப்பின்போது சீனத் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.

இரண்டு சந்திப்புகள் ஏற்பட்ட பின்பும், பி ஆர் ஐ திட்டத்திற்காக, இதுவரை நிறுவன மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவே இத்திட்டத்திற்குத் தலைமை வகிக்கும் நிலை தொடர்கிறது. பி ஆர் ஐ திட்டத்தில் சேரும்  உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2017 ஆம் வருடம் நடைபெற்ற முதல் சந்திப்பில் கலந்து கொண்ட சில நாடுகள் 2019 ஆம் வருடம் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பைத் தவிர்த்து விட்டனர். பி ஆர் ஐ திட்டத்திற்கு எந்த ஒரு வரையறையும் இதுவரை இல்லை.

3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அதிகார பூர்வமான கூட்டறிக்கையில், “ நாங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைகளை மதிக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிற்கும், தனது முன்னேற்ற செயல் உத்தியிலும், தேசிய முன்னுரிமை மற்றும் சட்டதிட்டங்கள் ஆகியவற்றை வரையறை செய்வதிலும் உரிமை மற்றும் முதன்மைப் பொறுப்பு உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள, இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியம் மூலமாக செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதர வழித்தடத் திட்டம் குறித்து, இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை சீனாவிற்குத் தெரிவித்து வந்துள்ளது.