ஜப்பானில் புதிய ரெய்வா சகாப்தம் துவக்கம்.

(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி)

1817 ஆம் ஆண்டிற்குப் பின்னர், கடந்த 200 ஆண்டுகளில் முதன்முதலாக, உயிரோடிருக்கும் ஜப்பானிய அரசர் தனது பதவியைத் துறந்த நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. பதவியைத் துறந்த மன்னர் அகிஹிடோ, தனது புதல்வர் நருஹிடோவை ஜப்பானின் 126 ஆவது மன்னராக அரியணையேற்றி, ஜப்பானில் புதிய ரெய்வா சகாப்தத்தைத் துவக்கியுள்ளார். ஜப்பான் நாட்டின் அடையாளச் சின்னமாக மன்னர் கருதப்படுகிறார். ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி, மன்னர் அகிஹிடோ பதவியைத்துறக்கும் சடங்குகளும், தொடர்ந்து, மே 1 ஆம் தேதியான இன்று, புதிய அரசர் அரியணை ஏறும் சடங்குகளும் நிறைவேறின. நருஹிடோ அவர்களின் பட்டமளிப்பு விழா, அயல்நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளது. பதவியைத் துறந்த மன்னர் அகிஹிடோ, நாட்டிற்கு ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டிப் பேசிய பிரதமர் ஷின்ஸோ அபே, அமைதியும் நம்பிக்கையும் நிறைந்த எதிர்காலத்திற்காக, ஜப்பான் அயராது உழைக்கும் என்று கூறினார்.

ஒவ்வொரு சகாப்தத்திற்கும் புதிய பெயரிடுவது, ஜப்பானிய சமுதாயத்தின் முக்கிய நிகழ்வாகும். முதன்முதலாக, கி.பி.645 ஆம் ஆண்டில் டைகா சகாப்தம் துவங்கியதிலிருந்து, ஜப்பான் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளது. ஒவ்வொரு சகாப்தத்தின் பெயரும், ஒரு மன்னரின் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும். அந்த வகையில், புதிய அரசரின் பதவிக்காலத்திற்கு ரெய்வா சகாப்தம் எனப் பெயரிடுவது என்று, ஜப்பானிய அமைச்சரவை, ஏப்ரல் 1 ஆம் தேதியன்று முடிவெடுத்தது. ரெய்வா என்றால், அழகிய ஒத்திசைவு எனப் பொருள்படும். மன்யோஷு என்ற, 1200 ஆண்டு பழமை வாய்ந்த, ஜப்பானிய கவிதைத் தொகுப்பிலிருந்து, ரெய்வா என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று துவங்கும் ரெய்வா சகாப்தத்துக்கு முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் தேதியோடு முடிவடைந்த ஹெய்ஸெய் என்ற சகாப்தம், கடந்த 1989 ஆம் ஆண்டு துவங்கி, முப்பது ஆண்டுகள் நிலவியது. ஹெய்ஸெய் சகாப்தத்துக்கு முன்னதாக, 1926 ஆம் ஆண்டு துவங்கி, 64 ஆண்டுகள், ஷோவா சகாப்தம் நிலவியது. ஜப்பான் நாட்டின் சரித்திரத்திலேயே அதிக காலம் நீடித்த சகாப்தமாக ஷோவா சகாப்தம் விளங்கியது.

அகிஹிடோ அவர்கள், உடல்நிலை காரணமாகப் பதவியைத் துறக்க விழைந்தபோது, அதற்கு ஏதுவாக, ஜப்பான் நாட்டு நாடாளுமன்றமான டையட், 2017 ஆம் ஆண்டு, புதிய பதவித் துறப்பு சட்டத்தை இயற்றியது. தமது பதவித் துறப்பு சடங்கின்போது, அகிஹிடோ அவர்கள், நாட்டின் அடையாளச் சின்னமாகத் தாம் பணியாற்ற ஆதரவளித்த ஜப்பானிய மக்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஜப்பானிய மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமது பதவிக்காலம் முழுவதும் பணியாற்றிய அகிஹிடோ அவர்கள், ஜப்பானிய மக்கள் இயற்கைப் பேரிடர் போன்ற இடர்ப்பாடுகளால் அவதியுறும்போது, பக்கபலமாக இருந்தார். இந்திய, ஜப்பானிய உறவுகளை வலுப்படுத்தவும் அவர் சிறந்த பங்காற்றினார். இந்திய, ஜப்பானிய ராஜீய உறவுகள் 60 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, ,ஜப்பானிய அரசர் அகிஹிடோவும், ராணி மிசிகோவும், 2013 ஆம் ஆண்டில், புதுதில்லி மற்றும் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டனர். முன்னதாக, 1960 ஆம் ஆண்டில், அகிஹிடோ அவர்கள், ஜப்பானிய இளவரசராக இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.

பலதரப்பட்ட அனுபவங்களைக் கலந்தளித்த ஹெய்ஸெய் சகாப்தம் கொடுத்த படிப்பினையை, புதிய சகாப்தமான ரெய்வா அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். பெரிதாக்கப்பட்ட சொத்துக்கள் அளித்த வளர்ச்சி என்ற மாயை, வெடித்த பலூன் போல் ஆன கதையை ஜப்பான் மக்கள் நன்கறிவர். தற்போது, உலகிலேயே, அதிக அளவிலான கடன் – மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கொண்ட நாடாக ஜப்பான் விளங்குகிறது. தவிர, முதியோர்கள் மலிந்த சமுதாயத்தை ஜப்பான் பொருளாதாரம் சமாளிக்க வேண்டியுள்ளது. ரெய்வா சகாப்தத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியமாகிறது. உலகின் நான்காவது தொழில் புரட்சியில், தனது நவீன தொழில்நுட்பத்தின் மூலம், சிறப்பான இடத்தைப் பெறுவதில் ஜப்பான் முனைப்புடன் உள்ளது. புவிசார் செயலுத்திகளில், உலக அமைதிக்கு முன்னின்று பாடுபடும் நாடாகவும், சட்ட நியதிகளுக்குட்பட்ட தாராளமயமான சர்வதேசக் கட்டமைப்பிற்கு உறுதுணையாக நிற்கும் நாடாகவும் ஜப்பான் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களாலும், கிழக்கு சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை சீனா விரிவு செய்வதாலும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள ஜப்பான், அதனை எதிர்கொள்ள, அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.