ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை – அமைதி மற்றும் வளத்தை நோக்கி கூட்டாளித்துவ ஊக்குவிப்பு

மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் முனைவர் மொஹம்மத் முடாஸ்ஸிர் க்வாமர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

16வது ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை அமைச்சர்கள் கூட்டம் இந்த வாரம் தோஹாவில்  நடந்தது.  ஆசிய கண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பு முயற்சியானது 2002 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளுக்கிடையே இணை சார்பு தன்மையை ஊக்குவிப்பதற்காக 18 நாடுகள் இணைந்து எடுத்த முயற்சியின் விளைவால் உருவான அமைப்பு இதுவாகும்.   ஒவ்வொரு ஆசிய நாட்டையும்  நட்பு நாடாக இணைத்து ஆசியாவின் அனைத்து கண்ணிகளையும் இணைத்து மற்ற அமைப்புகளின் நகலாக இல்லாமலும்,  மற்றவர்களுக்கு எதிரான ஒரு கூட்டணி ஆக உருவாக்காமலும், ஒற்றுமையான ஒரு  ஆசிய சமூகத்தை உருவாக்குவதே இந்த அமைப்பின் முக்கிய  நோக்கமாகும். தற்போது இந்த அமைப்பில் 34 உறுப்பினர் நாடுகள் உள்ளன, பேச்சுவார்த்தை மற்றும் திட்டங்கள் ஆகிய இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன.  இந்த அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. எரிசக்தி, வேளாண் துறை, உயிரிதொழில் நுட்பம், சுற்றுலா துறை,  வறுமை ஒழிப்பு, தகவல் தொழில் நுட்பம், மற்றும் நிதி ஒத்துழைப்பு துறைகளில் ஒத்துழைப்பை ஆசிய  நாடுகளுக்கிடையே ஊக்குவிப்பது இந்த அமைப்பின் முக்கிய திட்டங்களாகும்

எரி ஆற்றல் துறையில் ஒத்துழைப்பு, வறுமையை ஒழித்தல், போக்குவரத்திற்கான உள்கட்டுமானம் அமைத்தல், சுத்தமான சுற்றுசூழல், சுற்றுலா மற்றும் வேளாண் துறை ஊக்குவிப்பு ஆகிய 6 முக்கிய துறைகளில் கூட்டாளித்துவத்தின் மூலம் நிலையான வளர்ச்சி பொன்ற பெரும் குறிக்கோள்களை எட்டுவதற்கான செயலுத்திகள் குறித்து விவாதிப்பது 16வது அமைச்சர்கள் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.  பிராந்திய வர்த்தகம், போக்குவரத்து, முதலீடுகளை அதிகப்படுத்துதல், உள்துறை கட்டுமான மேம்பாட்டை ஊக்குவித்தல் போன்றவற்றை எளிதாக்கவும், விரிவுபடுத்துவதற்குமான  அனைத்து திட்டங்களையும், முயற்சிகளையும் ஊக்குவித்து பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த கூட்டல் கோடிட்டு காட்டியது.  சுற்றுசூழல் பாதுகாப்பு, சமூக – பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரதன்மை ஆகியவற்றின் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வட்டார ஒத்துழைப்பு வழிமுறையாக ஏ.சி.டியை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தை இந்த கூட்டம் வலியுறுத்தியது.

கல்வி மற்றும் அறிவு பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்தும் இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  ஆசியா ஆன்லைன் பல்கலைகழகம்,  தாய்லாந்தின் சியாம் பல்கலைகழகம்,  வங்க தேசத்தின் டாஃபோடில் சர்வதேச பல்கலைகழகம், இந்தியாவின் பஞ்சாப் பல்கலைகழகம்,  இந்தோனேசியாவின் சூராபயா பல்கலைகழகம் மற்றும் பிலிப்பைன்ஸின் ஃபாத்திமா பல்கலைகழகம் ஆகிய 6 பல்கலைகழகங்களுக்கிடையே  கல்வி ஒத்துழைப்பிற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.  ஏ.சி.டி நாடுகளின் பல்கலைகழகங்களுக்கிடையே கல்வி ஒத்துழைப்பை எளிதாக்க சியாம் பல்கலைகழகத்தில் ஆசிய பேச்சுவார்த்தை தொடர்பிற்காக மையம் ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர்கள் கூட்டத்தின் இறுதியில் தோஹா அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது அந்த அறிவிப்பானது ஆசிய நாடுகளுக்கிடையேவும் சர்வதேச அமைப்புகளுக்கிடையேவும் ஆசியாவின் நிலையை உயர்த்துவதற்கும்,  உலகளாவிய போட்டியில் தன்னை மேம்படுத்திகொள்வதற்கும்,  பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பிற்கான அவசியம் குறித்து கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆசியாவில் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதில் கணிசமான முன்னேற்றம் கண்டிருப்பது குறித்தும்  உலக பொருளாதாரவளர்ச்சிக்கான மற்றும் உலகளாவிய கூட்டாளித்துவத்தின் முக்கிய உந்து சக்தியாக ஆசியா உருவாகியிருப்பது  குறித்தும் இந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது. ஏ.சி.டியின் அடுத்த தலைமை பொறுப்பு துருக்கிக்கு அளிக்கப்படும் என்றும் 17வது அமைச்சர்கள் கூட்டம் துருக்கியில் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.  2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மூன்றாவது ஏ.சி.டி உச்சி மானாட்டை நடத்தி தருவதாக கட்டார் முன் வந்திருப்பதை வரவேற்ற அமைச்சர்கள் கூட்டமானது, ஜூன் மாதம் 18 ஆம் தேதியை ஏ.சி.டி தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற முன்மொழிதலை மீள் உறுதி செய்தது.

ஏ.சி.டி நிறுவன உறுப்பினர் நாடுகளில் ஒன்றான இந்தியா, இந்த கூட்டத்தில் வெளியுறவுதுறை துணை அமைச்சர் தலைமையிலான குழுவுடன் கலந்து கொண்டது.   பயங்கரவாதத்தால் ஆசியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட ஒரு ஒத்துழைப்பு நெறிமுறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்திய அமைச்சர் தன் உரையில் எடுத்துரைத்தார்.  இலங்கையில் சமீபத்தில் நடத்தப்பட்ட கொடும் பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவின் துயரத்தையும், கண்டனத்தையும் தெரிவித்த அமைச்சர்,  சர்வதேச பயங்கரவாதத்தின் மீதான ஐ.நா விரிவான உடன்படிக்கையை உடனடியாக ஏற்றுகொள்ளவேண்டியதின் அவசியம் குறித்து விவாதித்தார்.

16வது அமைச்சர்கள் கூட்டத்தின் மையக் கருப்பொருளான “வளர்ச்சியில், முன்னேற்றத்தில் கூட்டாளிகள்” குறித்து தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா, கூட்டு முயற்சி, உள்ளடக்கிய வளர்ச்சி எனும் இந்தியாவின் அணுகுமுறையுடன் இது ஒத்திருப்பதாக புதுதில்லி கூறியது. ,அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்காக இந்தியா எடுத்துவரும் சர்வதேச முயற்சிகள்,   நிலையான வளர்ச்சி, ஆரோக்கியமான சுற்றுசூழல் போன்றவற்றிற்காக சுத்தமான எரி ஆற்றல் உபச்யோகத்தில் இந்தியா முன்னே செல்வது போன்றவை குறித்தும் இந்திய பிரதிநிதி குழு எடுத்துரைத்தது. இந்திய பிரதமர் நவம்பர் 2015-ல் தொடங்கி வைத்த சர்வதேச சூரிய கூட்டணியில் சேருமாறு இந்தியா அனைத்து ஏ.சி.டி உறுப்பினர் நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தது.  ஆற்றல், உணவு பாதுகாப்பு, ஆரய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு,  ஆகிய துறைகளில் ஏ.சி.டி உறுப்பினர் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பிற்கான வழிவகைகள் குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சர்  விவாதித்தார்.