கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க தயார்நிலையில் இந்தியா.

(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, தான் விதித்த தடையிலிருந்து, அமெரிக்கா, இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கு விலக்கு அளித்திருந்தது.  அந்த விதிவிலக்குக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவிலோ, எண்ணெய்ச் சந்தையிலோ தாக்கங்கள் மிதமாகவே இருக்கின்றன. எனினும், தடைகளால் பாதிக்கப்பட்ட ஈரானில் ஏற்பட்ட உற்பத்தி நஷ்டங்களாலும், உலக எண்ணெய் சந்தையில், வெனிசுவேலா தனது எண்ணெய் வழங்கலை குறைத்துக் கொண்டதாலும் கச்சா எண்ணெயின் விலை, கடந்த மாதம் பேரலுக்கு 70 டாலர் என்ற அளவையும் தாண்டியது.

கடந்த இரண்டு மாதங்களில், பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சீரான ஏற்றத்தைக் கண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் 50 சதவிகிதமாக இது அதிகரித்தது. தங்களது எண்ணெய் வழங்கலைக் குறைத்து, விலைகளை உயர்த்தி, அதனால், உலகம் முழுவதும் ஏற்படக்கூடும் எண்ணெய் பற்றாக்குறை மூலம் லாபம் காண, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஓ.பி.ஈ.சி எடுத்த முடிவே இதற்குக் காரணமாகும். ஈரானிலிருந்து சுமார் 11 சதவிகிதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியாவிற்கு, ஈரானிடமிருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா போட்டிருந்த தடைகளிலிருந்து, கடந்த வாரம் வரை விதி விலக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இதனால், பாதிப்புகளை சமாளிக்க முடிந்தது. 2010 ஆம் ஆண்டு வரை, சௌதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கும் இரண்டாவது நாடாக ஈரான் விளங்கியது. அதன் பின்னர், ஈரானின் அணுத் திட்டங்களால் மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது போட்ட தடைகளாலும், இந்தியா, தான் எண்ணெய் பெறும் நாடுகளின் பட்டியலை விரிவுபடுத்தியதாலும், ஈரான், இந்தியாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

பெட்ரோலியம் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் அளித்துள்ள அறிக்கையில், தற்போது எரியாற்றலின் மாற்றுக்களைக் கண்டறிந்து, இந்திய சந்தைகளில் பாதிப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிடம், மற்ற நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வலுவான திட்டங்கள் உள்ளன. இதற்கிடையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதையும் நிறுத்திவிட்டன.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஈராக், இந்தியாவின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக இருக்கிறது. 2018-19 நிதி ஆண்டில், பாதிக்கும் மேலான எண்ணெய் ஈராக்கிலிருந்து பெறப்பட்டது. 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை, ஈராக், இந்தியாவிற்கு 4.66 கோடி டன் கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில், ஈராக் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்த 4.57 கோடி டன்னை விட இது சற்றே அதிகமாகும். நேர்த்தியான பாதுகாப்பு முறைகள், வழக்கத்திற்கு மாறான எரியாற்றல் வகைகளை மாற்றாக வைத்துக்கொள்ளுதல், கடந்த நிதி ஆண்டின் துவக்கத்தில், உலக கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மிதமான நிலை ஆகியவற்றின் காரணமாக, இந்தியா, 2017-18 ஆம் ஆண்டு இறக்குமதி செய்த 22.04 கோடி டன் என்ற அளவை விடக் குறைவாக, கடந்த நிதி ஆண்டில், 20.73 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் இலக்கை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்குள் எண்ணெயின் இறக்குமதியை 10 சதவிகிதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான ஒரு ஐந்து அம்ச செயலுத்தியும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உற்பத்தியை அதிகரிப்பது, எரியாற்றல் பயன்பாட்டுத் திறன் மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, மாற்று எரிசக்திக்கான உந்துதலை அளிப்பது, இயற்கை எரிபொருட்கள், மாற்று எரிபொருட்கள்/ புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் அறியப்படாத சாத்தியக்கூறுகளை கண்டறிந்து உபயோகிப்பது மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்முறை முன்னேற்றங்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஆகியவை ஐந்து அம்ச செயலுத்தித் திட்டங்களாகும்.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான வசதிகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில், ஹெச்.ஈ.எல்.பி எனப்படும் ஹைட்ரோகார்பன் ஆய்வு உரிமங்கள் கொள்கை, ஓ.ஏ.எல்.பி எனப்படும் திறந்தவெளி நிலப்பரப்பு உரிமங்கள் கொள்கை, டி.எஸ்.எஃப் எனப்படும் கண்டறியப்பட்ட சிறு வயல்கள் கொள்கை, எரிவாயு விலை சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும். தற்போதிருக்கும் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களிலுள்ள தடைகளை நீக்குவதோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் மேம்பட்ட மீட்பு உத்திகளை ஊக்குவிக்க இந்தியா முனைப்புடன் உள்ளது. ஷேல் எண்ணெய்/எரிவாயு மற்றும் கோல் பெட் மீத்தேன் போன்ற வழக்கத்துக்குப் புறம்பான ஹைட்ரோகார்பனின் ஆய்வு மற்றும் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க அதிக சலுகைகள் வழங்கப்படும்.

இதற்கிடையில், ஐ.எஸ்.பி.ஆர்.எல் எனப்படும் இந்தியன் ஸ்ட்ரேடெஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் லிமிடெட்,  செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கச்சா எண்ணெய் இருப்பு வசதிகளை மூன்று இடங்களில் உருவாக்கியுள்ளது. விசாகப்பட்டினத்தில் 13.3 லட்சம் டன்  என்ற அளவிலும், மங்களூருவில் 15 லட்சம் டன் என்ற அளவிலும் பதூரில் 25 லட்சம் டன் என்ற அளவிலும் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று இருப்பு வசதிகளையும் உருவாக்க 4,098.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கச்சா என்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், எண்ணெய் வழங்கலில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றிற்கு இது அரணாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி தடையின்றி பயணிக்க, முக்கிய எரிபொருட்களின் உள்நாட்டுத் தேவைகளையும் இது பூர்த்தி செய்யும். மொத்தத்தில், கச்சா என்ணெய் மற்றும் அதன் விலைகளப் பொறுத்த வரை, எந்த விதப் பிரச்சனைகளையும் சமாளிக்க இந்தியா தயாரான நிலையில் உள்ளது.