தாலிபானுடன் பேச்சுவார்த்தை – அமெரிக்கா மறுபரிசீலனை செய்வது அவசியம்

(அரசியல் விமர்சகர் கௌல் ஜலாலி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்ற உறுதியிலிருந்து அமெரிக்கா திசை மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கா, தாலிபானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஆறாவது சுற்று, சென்ற வாரம், கத்தாரின் தலைநகர் தோஹாவில் தொடங்கி இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இது வரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தைகளில், ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது, பயங்கரவாதத்திற்கு எதிரான உத்தரவாதங்களைப் பெறுவது,, அரசியல் தீர்வைக் காண, தாலிபானும், ஆஃப்கான் அரசும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதை உறுதி செய்வது, நிலையான சண்டை நிறுத்த்த்திற்கு வழி செய்வது ஆகியவை குறித்து  இந்தப் பேச்சுவார்த்தைகள் இருக்கின்றன என, அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியாக இருக்கும் ஸால்மே கலீஸாத்,  தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களை பயங்கரவாதிகள் தாக்கியதிலிருந்து, தொடர்ந்து, ஆஃப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நேரடி கவனம் செலுத்தத் துவங்கியது. இதையடுத்து, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பிரகடனப் படுத்தியது. அமெரிக்க மண்ணில் நடந்த தாக்குதல்களுக்கு காரணமான ஒசாமா பின் லேடனையும் அவனது இயக்கமான அல் கொய்தாவையும் தண்டிக்க அமெரிக்கா சூளுரைத்தது. அல் கொய்தா மற்றும் அதன் தலைவனுக்குப் புகலிடம் வழங்கியதற்காகவும், மற்றொரு பயங்கரவாத இயக்கமாக உருவாகாமல் இருப்பதற்காகவும், தாலிபானையும் வேருடன் களைய அமெரிக்கா முடிவெடுத்தது.

அதன் பின்னர், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்டும் என்ற தனது கருத்தை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. எனினும், கடந்த ஆண்டு, இரண்டாவது முறையாக, அமெரிக்கா, இந்த உறுதியிலிருந்து விலகத் துவங்கியது.  சில ‘நல்ல பயங்கரவாதிகளும்’ இருப்பதாக அந்நாடு மேலோட்டமாக நம்பத் துவங்கியது. பயங்கரவாதி என்பவன் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் ஒருவன். இதில், நல்ல பயங்கரவாதி, தீய பயங்கரவாதி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நாடுகள் பலமுறை அனுபவித்துள்ளன. நல்ல பயங்கரவாதி, தீய பயங்கரவாதி இடையிலான பாகுபாடு, நெறிமுறைகள் சார்ந்த கருத்துக்களைச் சார்ந்தவை அல்ல. மேலும், இது உலகிலிருந்து தீவிரவாதத்தைக் களைய வேண்டும் என்ற உறுதியை பலவீனமாக்கிவிடும் என்பதே உலக நாடுகளுக்கிடையில் உள்ள வலுவான கருத்தாகும். இப்படிப்பட்ட அரசியல் சூழல்கள், தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஊக்கமளித்து, தீவிரவாதத் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு, தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், இவ்வாண்டு துவக்கத்தில், ஆஃப்கானிஸ்தானில் உள்ள தனது பதினான்காயிரம் படைகளில் பாதியை திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவிற்கு பல தரப்புகளிலிருந்தும் பல சர்ச்சைகள் கிளம்பின. அமெரிக்காவிலும் இந்த முடிவு சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் திரு. ஜிம் மேட்டிஸ் பதவி விலகினார். இரண்டு முக்கிய கருத்துகளைச் சார்ந்தே சர்ச்சைகள் இருந்தன, அதாவது, ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது படிப்படியாக இருக்க வேண்டும், பயங்கரவாதம் முற்றிலுமாகக் களையப்படும் வரை, அமெரிக்கா அங்கு ஒரு திடமான போர்ப் படையை வைத்திருக்க வேண்டும் என்பவையே அந்தக் கருத்துக்களாகும்.

2011 ஆம் ஆண்டு வரை, ஒசாமா பின் லேடன், பதுங்கிய நிலையில் அமெரிக்காவிடம் பிடிபடாமல் இருந்தாலும், தாலிபானின் பிடியிலிருந்து ஆஃப்கானிஸ்தானை மீட்பதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். எனினும், திடீரென, யாரும் எதிர்பாராத வண்ணம், அமெரிக்கா, தனது கவனத்தை ஈராக் பக்கம் திருப்பியது. இதன் விளைவாக, 2003 ஆம் ஆண்டு ஈராக் போர் நடந்தது. இது, ஐ.எஸ் மற்றும் அதன் கலீஃபா என்ற மதம் சார்ந்த சித்தாந்தத்தின் உருவாக்கத்திற்குப் பெரிதும் காரணமாக இருந்தது.

இந்தப் பின்னணியிலும், ஆஃப்கானிஸ்தானின் பல பகுதிகள் இன்னும் தாலிபானின் கீழ் இருக்கும் நிலையிலும், தாலிபானை ஆஃப்கானின் முக்கிய சமூக அமைப்பில் ஓர் அங்கமாக் இணைக்காத வரை, அமெரிக்கா, போரால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது உகந்ததாக இருக்காது. அதுவும், ஆஃப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்தைத் தனது நாட்டுக் கொள்கையின் ஒரு முக்கியக் கருவியாக்கி, ஆஃப்கானிஸ்தானில் தனக்கு சாதகமான ஒரு தலைமை வருவதை எதிர்பார்த்திருக்கும் இத்தருணத்தில், அமெரிக்கா, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  எப்படியும் பாகிஸ்தான் தனது கொடிய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கும். இது இந்தப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்தில், மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப் பட்டிருப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான திடமான நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தானிற்கு மற்றொரு வாய்ப்பை அளித்திருக்கின்றது.

இந்தக் கருத்துகளின் அடிப்படையில், அமெரிக்கா, தான் தடம் மாறிப்போவதை சரி செய்து கொண்டு, உலகில் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் அமைப்புகளிலும் ஒழிப்பதற்கான தனது உறுதியில் நிலையாக நிற்க வெண்டும்.  மற்ற நாடுகளும் இணைந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகளை இன்னும் வலுவாக்க ஐ.நா-விடம் வலியுறுத்த வேண்டியதும் மிக அவசியமாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியா முன்மொழிந்த, சி.சி.ஐ.டி எனப்படும் சர்வதேச பயங்கரவாதத்திற்கான விரிவான மாநாட்டிற்கான அமைப்பையும் இன்னும் ஐ.நா ஏற்கவில்லை. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அதன் மூலம், எந்த வித, புவிசார் அரசியல் அல்லது மற்ற இடையூறுகள் இல்லாமல், நாடுகள் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான திடமான முடிவுகளை எடுக்க முடியும்.