இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக விவகாரங்களில் இறுக்கம்.

(தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவத்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

அமெரிக்க வர்த்தகச் செயலர் வில்பர் ராஸ், உலக நாடுகளில், மிக அதிக கட்டண முறைகளைக் கொண்ட நாடு இந்தியா என சமீபத்தில் கூறியுள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய வருடாந்தர வர்த்தக நிகழ்வான ‘அமெரிக்க டிரேட் விண்ட்ஸ் இந்தோ-பசிஃபிக் வர்த்தக மன்றம் மற்றும் பணித்திட்ட முயற்சி’-ன் 11 ஆவது நிகழ்வு இவ்வாண்டு இந்தியாவில் நடந்தது. இதில் கலந்துகொள்ள அவர் புது தில்லி வந்திருந்தார்.

சீனாவிற்குப் பிறகு அமெரிக்கா இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். இந்திய வர்த்தக அமைச்சருடன் நடந்த இருதரப்பு சந்திப்பில், திரு. ராஸ், ‘அமெரிக்காவை மீண்டும் மேன்மையாக்குவோம்’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் முழக்கத்தை மீண்டும் நினைவுபடுத்தினார். ‘இந்தியா-அமெரிக்கா உறவுகளை மீண்டும் மேன்மையாக்கி அதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் மேன்மையாக்கலாம்’ என அவர் தெரிவித்தார். ‘இந்தியாவின் கூட்டுறவோடு அமெரிக்காவை மீண்டும் மேன்மையாக்குவோம்’ என்ற பொருள்கொண்ட ‘மாகாவிக்’ என்ற புதிய சொற்றொடரை அவர் அறிமுகப்படுத்தினார். எனினும், இந்தியா-அமெரிக்கா இடையில் வர்த்தக உறவுகள் சுமுகமாக இல்லை என்பதும் பல இறுக்கங்கள் இன்னும் இருக்கின்றன என்பதும் நிதர்சனமாகும்.

அமெரிக்கா சீனா இடையில் மோசமாகிக் கொண்டிருக்கும் வர்த்தகப் போர், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவு, ஜி.எஸ்.பி. எனப்படும், முன்னுரிமைகளுக்கான பொது முறைத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் திரும்பப் பெறப்பட்டது ஆகியவை இந்தியாவின் இறுக்கத்திற்குக் காரணங்களாக இருக்கின்றன. ஜி.எஸ்.பி என்பது, வளரும் நாடுகளுக்கு, பலவகைப் பொருட்களுக்கான வரியற்ற அணுகலை வழங்கும் அமெரிக்க வர்த்தகத் திட்டமாகும். அமெரிக்காவில் இது 1974 ஆம் ஆண்டின் வர்த்தக சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இந்தியா, ஜி.எஸ்.பி-யின் ஒரு முக்கியப் பயனாளி நாடாக உள்ளது. உலக வர்த்தக நிறுவனம் அளிக்கும் ‘மிகவும் பிடித்தமான நாடு’ என்ற அந்தஸ்திலிருந்து ஜி.எஸ்.பி மாறுபட்டதாகும். இந்தியாவிற்கான இந்த ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிடுகிறார். இதற்குப் பதிலாக, அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை இந்தியா அதிகரித்தால், அது, உலக வர்த்தக மையத்தின் விதிகளின் படி உகந்ததாக இருக்காது என்றும் அமெரிக்க வர்த்தகச் செயலர் எச்சரித்துள்ளார்..

ஈ-வர்த்தகத்தில் இந்தியாவின் புதிய சட்டங்கள், புதிய நுழைவுத் தடைகளின் மூலம், தொழில் புரிவதற்கான செலவுகளை அதிகரிக்கின்றன என்றும், தரவுப்பரவல் தடைகள், அமெரிக்கா மீது பாரபட்சம் பார்ப்பதைப் போல் உள்ளன என்றும் திரு. ராஸ் மேலும் தெரிவித்தார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவக் கருவிகளுக்கான விலை அளவுகளும், வர்த்தகத்திற்கான தடைகளாக முத்திரையிடப்பட்டன. எனினும், அடுத்த அரசாங்கம் பொறுப்பேற்றவுடன்தான், இந்தப் பிரச்சனைகள் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் விரிவான முறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

உலகளவில், இந்தியாவின் கட்டணங்களே மிக அதிகமாக உள்ளன என அமெரிக்கச் செயலர் கூறியதையடுத்து, அவர், இந்த விஷயத்தைப் பொறுத்த வரை தவறான புரிதலைக் கொண்டுள்ளார் என அறிக்கைகள் சுட்டிக்காட்டின. உண்மையில், இந்தியாவால் விதிக்கப்படும் வர்த்தகத்திற்கான வரி கட்டண அளவு 7.5 சதவிகிதமாகும். இது பிரேசிலின் 10.3 சதவிகிதம் மற்றும் தென் கொரியாவின் 9 சதவிகிதத்தையும் விட குறைவே ஆகும். வணிகம் மற்றும் வர்த்தகத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் இருக்கும் வலுவான, திடமான மற்றும் வளர்ந்து வரும் இரு தரப்பு உறவுகளை அமெரிக்க வர்த்தகச் செயலரும் இந்திய வர்த்தக அமைச்சரும் பாராட்டினர். இருவரும் அளித்த கூட்டறிக்கையில், சரக்கு மற்றும் சேவைத் துறைகளில் இருதரப்பு வணிகம் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. 2017 ஆம் ஆண்டு, 12600 கோடி டாலர் என்ற அளவில் இருந்த வணிகம் 12.6 சதவிகிதம் அதிகரித்து 2018 ஆம் ஆண்டு 14200 கோடி டாலராக உயர்ந்தது. இருதரப்பு வணிகக் கலந்துரையாடலில் முதன்முறையாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அமெரிக்க வர்த்தகச் செயலருடன் 100 அமெரிக்கத் தொழிலதிபர்களும் இந்தியா வந்திருந்தனர். இந்தியாவில் எளிய முறையில் வணிகம் செய்வது தொடர்பான விஷயங்கள் குறித்து சந்திப்புகளை மேற்கொள்வது அவர்களது முக்கிய இலக்காக இருந்தது. அமெரிக்க நிறுவனங்களுக்கான மேன்மையான சந்தை அணுகல், தரவு பரவலைப் பொறுத்தவரை, நுழைவுத் தடைகளை அகற்றுவது ஆகியவற்றில் அவர்களது முக்கிய கவனம் இருந்தது. நுழைவுத் தடைகளில், கட்டண மற்றும் கட்டணமற்ற தடைகள் என இரண்டும் அடங்கும். அமேசான் வால்மார்ட் போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இந்தியாவிலுள்ள ஈ-வர்த்தக கொள்கைக்கான அந்நிய நேரடி முதலீட்டு விதிகள், சமமான வணிக வாய்ப்பை அளிக்கவில்லை என்பது அமெரிக்க வர்த்தகச் செயலர் முன்வைத்த முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.

கடந்த காலங்களிலும் இந்தியா அமெரிக்கா இடையில் அதிகரித்து வரும் வர்த்தக ஏற்றத்தாழ்வை அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கு இந்தியா செய்த ஏற்றுமதியின் அளவு 4790 கோடி டாலராகும். அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்த இறக்குமதியின் அளவு 2660 கோடி டாலரே ஆகும். மிகைத் தொகையான 2130 கோடி டாலரைத்தான் அமெரிக்கா வர்த்தக ஏற்றத்தாழ்வு என சுட்டிக்காட்டுகின்றது. நிதிச் சேவை நிறுவனங்கள் தரவுகளை உள்நாட்டு சர்வர்களிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் கொள்கையை மறு ஆய்வு செய்யவும் அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், அமெரிக்கா ஜி.எஸ்.பி-ஐ திரும்பப்பெற்றால், இந்தியா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார நன்மைகளையும் விருப்பங்களையும் பாதுகாப்பது நாட்டின் தலையாய கடமையாகும்.