ஐபிஎஸ்ஏ குழுவுக்குப் புத்துயிர்.

(உலகக் கல்வி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் ராஜீய அதிகாரியுமான அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குழுவான ஐபிஎஸ்ஏ யின் பிரதிநிதிகள் சந்திப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை அமர்வுக்கிடையே, ஒன்பதாவது ஐபிஎஸ்ஏ முத்தரப்பு அமைச்சர்கள் குழு சந்திப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய சந்திப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎஸ்ஏ என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த மன்றம் ஆகும். இதில் மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருந்து, மிகப்பெரிய ஜனநாயக மற்றும் முக்கியப் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இணைந்துள்ளன. இந்த மூன்று நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொண்டுள்ளன. இவை பன்முகத்தன்மை, பலதரப்பட்ட கலாச்சாரம், பலதரப்பட்ட இனங்கள், பலதரப்பட்ட மொழிகள், மற்றும் பலதரப்பட்ட மதங்களை கொண்ட வளரும் நாடுகளாகும். 2003 ஆம் வருடம் ஜூன் மாதம் பிரேசிலியா நகரில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது ஐபிஎஸ்ஏ துவங்கப்பட்டது. அதன் 15 ஆவது ஆண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.

ஐபிஎஸ்ஏ, ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்ட நாடுகளின் தெற்கு – தெற்கு குழுவாகும். இவை, நிலையான முன்னேற்றத்துடன் கூடிய, உலக மக்கள் நல்வாழ்வுக்காக உறுதி பூண்டுள்ளன. மக்களின் பங்கேற்புடனான ஜனநாயகம், மனித உரிமைகளை மதித்தல், சட்டத்தை மதித்தல், மற்றும் பல்நிலைத்தன்மையை வலுப்படுத்துதல் போன்றவை ஐபிஎஸ்ஏ பேச்சுவார்த்தை மன்றத்தின் முக்கிய விதிமுறைகள், கொள்கைகள், மற்றும் அச்சாணிகள் ஆகும். அரசாங்கங்களுக்கு இடையே ஆலோசனை, உலகப் பிரச்சனைகளில் உள்ள பொதுவான விஷயங்களில் ஒத்துழைப்பு, மூன்று நாடுகளுக்கும் பொதுவாகப் பயனளிக்கக்கூடிய முத்தரப்புக் கூட்டுப் பணி, மற்றும் ஐபிஎஸ்ஏ நிதி மூலமாக, பிற வளரும் நாடுகளில் திட்டங்களை முன்னெடுக்க உதவுதல் போன்றவை இந்தஐபிஎஸ்ஏ ஒத்துழைப்பில் அடங்கியுள்ளன. வழக்கமான வல்லுனர்கள் பரிவர்த்தனை மற்றும் பயிற்சிகளைத் தாண்டி, தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு விரிவடைவதற்கான வாய்ப்புக்களை வெளிப்படுத்தும் விதமாக, இக்குழுவின் வெற்றிகரமான செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இதுவரை, ஐபிஎஸ்ஏ தலைமையிலான உச்சிமாநாடு ஐந்து முறை நடைபெற்றுள்ளது. 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஐபிஎஸ்ஏ யின் ஐந்தாவது உச்சிமாநாடு பிரிட்டோரியாவில் நடைபெற்றது. ஆறாவது ஐபிஎஸ்ஏ உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. மூன்று நாடுகளின் தலைவர்களுக்கும் பரஸ்பரம் வசதியான தேதிகள் கிடைக்காததால் இந்த ஆறாவது உச்சிமாநாடு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆறாவது உச்சிமாநாட்டை வெகு விரைவில் நடத்துவதற்கு மூன்று நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். மூன்று நாடுகளிலும் தேர்தல் பணிகள் முடிவடைந்தவுடன் அடுத்த உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடு நடைபெறும். மூன்று நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டு நிகழ்ச்சிகளை நடத்தவும் அமைச்சர்கள் அளவிலான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமை மற்றும் பசி பட்டினியை ஒழிப்பதற்காக, ஐபிஎஸ்ஏ நிதித் திட்டத்தை 2004 ஆம் வருடம் இந்த மூன்று நாடுகளும் துவக்கி வைத்தன. இந்த தனிப்பட்ட முன்முயற்சி மூலம், வளரும் நாடுகளில் முன்னேற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுவரை, ஐபிஎஸ்ஏ யின் 20 வளரும் கூட்டாளி நாடுகளில், குடிநீர், விவசாயம், சூரிய ஆற்றல், கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் 31 திட்டங்களுக்கு ஐபிஎஸ்ஏ உதவியுள்ளது.

ஐபிஎஸ்ஏ யின் பங்களிப்பை அங்கீகரித்து, பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஹய்யிதி மற்றும் கினி பிஸ்ஸௌ நாடுகளில் மேற்கொள்ளப்ப்பட்ட திட்டங்களுக்காக 2006 ஆம் வருடம் அளிக்கப்பட்ட ஐ.நா வின் தெற்கு – தெற்கு கூட்டாளி விருது, 2010 ஆம் வருடம், தெற்கு -தெற்கு ஒத்துழைப்புக்காக வழங்கப்பட்ட எம்டிஜி விருது, புதுமையான அணுகுமுறையுடன் தங்கள் அனுபவங்களைப் பிறநாடுகளுடன் பகிர்ந்து கொண்டதற்காக, 2012 ஆம் வருடம் அளிக்கப்பட்ட தெற்கு – தெற்கு சேம்பியன் விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பாதுகாப்பிற்காக ஐபிஎஸ்ஏஎம்ஏஆர் என்ற கடல் வழிப் பயிற்சி  மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுவரை 6 முறை ஐபிஎஸ்ஏஎம்ஏஆர் பயிற்சி நடைபெற்றுள்ளது. சமீபத்தில், 2018 ஆம் வருடம், அக்டோபர் மாதம், தென் ஆப்பிரிக்காவின் கடல் பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

கொச்சியில் நடைபெற்ற, இந்த பிரதிநிதிகள் சந்திப்பின்போது, சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும், சுற்றுலா மற்றும் தெற்கு – தெற்கு கூட்டாளித்துவம் போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பேசப்பட்டன. கூட்டு செயற்குழுவின் செயல்பாடுகளையும் இந்தப் பிரதிநிதிகள் மதிப்பாய்வு செய்தனர். ஐபிஎஸ்ஏ யின் 15 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை பிரதிநிதிகள் பாராட்டினார்கள். இந்த வருடம், ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற காந்தி – மண்டேலா நினைவு சுதந்திர விரிவுரை நிகழ்ச்சியில், தென்னாப்பிரிக்க அதிபர் கலந்து கொண்டு உரையாற்றியதற்கும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். மூன்று நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு, ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பிற்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது என்றால் அது மிகையல்ல.