வலுவாகும் இந்திய, துருக்கி உறவுகள்.

(ராஜீய விவகாரங்கள் நிருபர் திபங்கர் ராய் சௌத்ரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

இந்தியாவும் துருக்கியும் சமீப காலங்களில் உயரதிகாரிகள் அளவிலான இருதரப்பு சந்திப்புகள் மூலம் தங்களது கூட்டாளித்துவத்தில் உறுதியான முன்னேற்றத்தை கண்டுள்ளன. இந்தியாவுடனான வளர்ந்து  வரும் உறவுகளையும், பாகிஸ்தானுடனான கலாச்சார உறவுகளையும் ஒன்று சேர்த்து எடுத்துச் செல்லும் நோக்கத்தில் துருக்கி உள்ளது. பொருளாதாரப் பற்றாக்குறைகளை ஈடு செய்வதற்கு மட்டுமல்லாமல், தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் துருக்கி தனது நாட்டு  அதிபருக்கான ஆலோசகர் டாக்டர் இப்ராஹிம் கலின் அவர்களை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது.
நீண்ட காலமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, துருக்கி நாட்டின் கூட்டாளித்துவத்திற்கு இந்தியா முயல்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களை இப்ராஹிம் கலின் அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும் ஒரு அங்கமாக இருந்தது.
தெற்காசியா மற்றும் மேற்காசியா சம்பந்தமான பிரச்சனைகள் உள்பட, பிராந்தியப் பிரச்சனைகள் மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் பற்றி இருதரப்பும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கு, அனைத்து நாடுகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தையும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களை, நீதித்துறைக்கு முன் நிறுத்த வேண்டும் என்பதையும் இருதரப்பும் கோடிட்டுக் காட்டின. நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தில் உள்ள தொடர்புகளை இரு நாட்டு அலுவலர்களும் மேலும் வலியுறுத்தினர்.

டாக்டர் காலின் அவர்களின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, துருக்கி நாட்டின் துணை வெளியுறவு துறை அமைச்சர் செடாட் ஓனல் அவர்கள் மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மேற்குப் பகுதிக்கான செயலர் கித்தேஷ் ஏ ஷர்மா அவர்களை சந்தித்தார், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவது உள்பட, இதர பல இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பும் தங்களது பிராந்தியங்களில் நிலவிவரும் தற்போதைய நிலைமை பற்றியும் மற்றும் பலதரப்பட்ட பிரச்சனைகள் பற்றியும் மதிப்பாய்வு செய்தன.

காலின் அவர்கள், இந்திய இஸ்லாமிய அறிஞர்களை சந்தித்து, தீவிரவாதப் பிரச்சாரங்களை முறியடிக்க முயற்சி மேற்கொள்வதையும் தனது பயணத்தின் முக்கிய இலக்காகக் கொண்டிரிஉந்தார்.

பாகிஸ்தானிலிருந்து வரும் சவால்களை எதிர்கொள்ள துருக்கி நாட்டின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் துருக்கி, பாகிஸ்தானின் பாரம்பரிய கூட்டாளி நாடாகும். துருக்கி நாட்டின் அதிபர் தய்யிப் எர்டோகன் அவர்கள், தெற்காசியாவில் துருக்கியின் தொடர்புகளை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

எர்டோகன்  அவர்கள் 2017 ஆம் வருடம் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார் அப்பொழுது இந்திய பிரதமருடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு துருக்கி நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஏற்பட்ட நேரத்தில், உடனடியாக அந்த அரசாங்கத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தொடர்பு கொண்டது. இந்த செயலினால் அதிபர் எர்டோகன் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டார்.
பாகிஸ்தான் தனது நாட்டின் கொள்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகக் கொண்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள, இந்தியா, மேற்கு ஆசியாவின் முக்கிய நாடுகளான, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் துருக்கி நாடுகளுடன் தீவிரமான ஈடுபாடுகளை மேற்கொண்டுள்ளது.

சுற்றுலா, பொலிவுறு நகரம், கட்டுமானம், உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை இரு நாடுகளும் ஆராய்ந்தன. 2017 ஆம் வருடம் துருக்கி அதிபர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம் முன்னேறி வருகிறது. அது தற்போது, 860 கோடி டாலராக உள்ளது. 2020 ஆம் வருடத்தில் ஆயிரம் கோடி டாலர் அளவை எட்டுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை, இந்திய சந்தையில் கொண்டு வருவதற்கு துருக்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த 15 வருடங்களாக இந்தியா – துருக்கி இடையேயான வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. நடுத்தர எண்ணெய் மற்றும் எரி பொருள்கள், மனிதர் தயாரித்த நாரிழைகள் மற்றும் பிரதான இழைகள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் அணிகலன்கள், கரிம வேதிப் பொருட்கள் போன்றவை துருக்கி நாட்டிற்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. உடைந்த மற்றும் உடையாத கசகசா விதைகள், இயந்திர உபகரணங்கள், இரும்பு மற்றும் எஃகுப் பொருட்கள், கனிம வேதிப்பொருட்கள், முத்துக்கள், ஆபரணங்கள் மற்றும் பளிங்குகள் போன்றவற்றை துருக்கி இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா மற்றும் துருக்கி நாடுகளுக்கிடையே வரலாற்றுத் தொடர்புகளும் உள்ளன. 1481-82 ஆம் வருடத்திலேயே இரு நாடுகளுக்கிடையே ராஜிய உறவுகள் ஏற்பட்டுள்ளன. மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் கண்டுபிடித்த சூஃபி தத்துவம், இந்தியா மற்றும் துணைக் கண்டங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. 1912 ஆம் வருட கால கட்டத்தில் பால்கன் போர் ஏற்பட்ட நேரத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் டாக்டர் எம் ஏ அன்சாரி அவர்கள் மேற்கொண்ட மருத்துவப் பணி என்பது, சமீபத்தில் இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையே ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்பாகும். 1920 களில், துருக்கி நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் மற்றும் துருக்கி குடியரசு அமைவதற்கும் இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியது. முதல் உலகப்போர் முடிவடையும் தருவாயில், துருக்கி நாட்டின் மீது ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிராக மகாத்மா காந்தி அவர்கள் குரல் கொடுத்தார்.