விண்ணில் பாயத் தயாராகும் இந்தியாவின் சந்திரயான்-2

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)                                                 

நிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தில், சந்திரயான்-2 விண்கலத்தை இவ்வாண்டு ஜுலை மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல ஆய்வுக் கூடங்களால் உருவாக்கப்பட்ட 13 பேலோடுகள் இதில் இருக்கும். இவற்றின் மூலம் பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. 3.8 டன் எடை கொண்ட இந்த விண் ஊர்தியில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை, ஆர்பிட்டர், விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் ஆகியவையாகும். நாசாவின் பேசிவ் சோதனைப் பிரிவு, பூமி மற்றும் அதன் ஒரே இயற்கைக் கோளான நிலவிற்கு இடையில் உள்ள தொலைவை அளப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. விண்கலத்தின் அனைத்துப் பகுதிகளும் செலுத்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஜூலை 9-16 ஆம் தேதிக்குள் சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டு, செப்டம்பர் 6 ஆம் தேதி இது நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி மையம் கூறியுள்ளது. நிலவுக்கான பரப்பிலிருந்து 100 கி.மீ தொலைவில் ஆர்பிட்டர் பகுதி  சுற்றிக் கொண்டிருக்கும். தரையிறங்கும் பகுதியான விக்ரம் என்ற லேண்டர், நிலவின் தென் துருவத்தின் அருகில் மெதுவாகத் தரையிறங்கும். பின்னர் பிரக்யான் என்ற ரோவர், நிலவின் நிலப்பரப்பில் நகர்ந்து, அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

நிலவின் நிலப்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்த சந்திரயான்-1, மிக வெற்றிகரமான பணித்திட்டமாக அமைந்தது. இதில், ஐந்து வெளிநாட்டு பேலோடுகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் மூன்று ஐரோப்பாவையும் இரண்டு அமெரிக்காவையும் சார்ந்தவையாகும். மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட சந்திரயான்-2, நிலவிற்கான அதி நவீன பணித்திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

செப்டம்பர் 6 ஆம் தேதி அல்லது, ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, ஐந்து-கால்கள் கொண்ட ஊர்தியான விக்ரம் லேண்டர், நிலவின் பரப்பில் இறங்கியவுடன், ரோபோடிக் ரோவரான பிரக்யான், நிலவின் நிலப்பரப்பில் ஆய்வுகளைத் துவங்கும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் கூறினார். நிலவின் நிலப்பரப்பில் 300-400 மீட்டர் தூரத்திற்கு பிரக்யான் நகர்ந்து செல்லும். பிரக்யான், நிலவில் 14 பூமி நாட்களைக் கழித்து, பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த ரோவர், நிலவினுடைய நிலப்பரப்பின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து, 15 நிமிடங்களுக்குள் ஆர்பிட்டர் மூலமாக, அங்கிருந்து தரவுகளையும் படங்களையும் பூமிக்கு அனுப்பும். 3800 கிலோ கிராம் எடைகொண்ட இந்த விண்வெளி ஊர்தியில், 100 கிலோமீட்டர் தொலைவில் நிலவைச் சுற்றும் ஒரு ஆர்பிட்டர் உள்ளது.

இதுவரையில் இஸ்ரோ மேற்கொண்டுள்ள பணித்திட்டங்களில், சந்திரயான்-2 மிகச் சிக்கலான பணித்திட்டமாகும் என இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறியுள்ளார். நிலவின் தென் துருவத்திற்கு அருகில், இறங்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில், மெதுவாக, நேர்த்தியான முறையில் இறங்கவேண்டும் என்ற கட்டாயம் இந்தப் பணித்திட்டத்தின் சிக்கலான செயல்முறையின் முக்கிய அங்கமாகும். ஒப்பிட்டுப் பார்க்கையில், சந்திரயான்-1-ல் இருந்த எம்.ஐ.பி எனப்படும் மூன் இம்பாக்ட் பிரோப், மெதுவாக இறங்குவதற்கேற்ப வடிவமைக்கப்படவில்லை. இந்த ஜனவரி மாதம், இஸ்ரோ, ‘இதுவரை யாரும் போகாத இடத்தில், அதாவது நிலவின் தென் துருவத்தில், நாம் இறங்கவிருக்கிறோம். இது ஆய்ந்தரியப்படாத இடமாகும்’ எனக் கூறியிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான்-1 பணித்திட்டத்தின் அடுத்த, மேம்பட்ட கட்டமே, சந்திரயான்-2 பணித்திட்டமாகும். சந்திரயான்-1-ல், இந்தியாவிலிருந்து ஐந்து, ஐரோப்பாவிலிருந்து மூன்று, அமெரிக்காவிலிருந்து இரண்டு, பல்கேரியாவிலிருந்து ஒன்று என மொத்தம் 11 பேலோடுகள் இருந்தன. நிலப்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்த மிகப் பெரிய பெருமை சந்திரயான்-1 பணித்திட்டத்திற்கு உண்டு.

இந்தியா, சந்திரயான்-2-ஐ வெற்றிகரமாக  நிலவில் இறக்கிவிட்டால், இந்தச் சாதனையைச் செய்யும் நான்காவது நாடு என்ற பெருமையை நம் நாடு அடையும். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு, இந்தச் சாதனையை செய்து முடிக்கும் நான்காவது நாடு என்ற பெயரெடுக்க இந்தியா முயன்று கொண்டிருந்த வேளையில், இஸ்ரேல் அந்த இடத்தைப் பிடித்துவிடும் சூழலும் ஏற்பட்டது. ஆனால், இஸ்ரேலின் விண்வெளி ஊர்தியான பெர்ஷீட், ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நிலவின் பரப்பில் இறங்கமுடியாமல் தோல்வியுற்றது. இது அவ்வளவு சுலபமான செயலும் அல்ல. பெர்ஷீட், ‘ஸீ ஆஃப் செரினிடி’, அதாவது அமைதியான கடல் என்றழைக்கப்படும், எரிமலைக்குழம்பு கெட்டியான பின் உருவான சம நிலப்பரப்பில் இறங்க முயன்றது. இது சூரிய ஒளி அதிகமாகப் படும் தட்டையான நிலப்பரப்பாகும். ஆனால், சந்திரயான்-2 இப்போது தென் துருவத்தில் இறங்கும். சீனாவைத் தவிர, வேறு எந்த நாடும் இங்கு இறங்க இதுவரை முயற்சித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு ஜனவரி மாதம், சீனா, தனது சேஞ்ச் 4 விண்வெளி ஊர்தியை ‘இருண்ட பக்கம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இறக்கியது நினைவிருக்கலாம். இப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் இருப்பதாலும், பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் பகுதி அவ்வளவாக தெரியாத பகுதியாக இருப்பதாலும், அவ்வாறு கூறப்படுகின்றது.

இஸ்ரோவின் வெற்றி மகுடத்தில், சந்திரயான்-2-ன் வெற்றி மற்றொரு வைரமாக மின்னும் என்பதில் சந்தேகமில்லை. விண்வெளி செலுத்தல்களைப் பொறுத்த வரை, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம், உலகளவில் ஒரு முன்னணி நிறுவனமாக தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. இஸ்ரோவின் பல்வேறு சாதனைகளின் பட்டியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக சந்திரயான்-2 கண்டிப்பாகப் பரிமளிக்கும்.

——————————————————–