(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
ரிசாட் -2பி என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளை இந்தியா வெற்றிகரமாகவும், மிக நேர்த்தியாகவும் விண்ணில் கடந்த புதனன்று காலை செலுத்தியுள்ளது. 615 கிலோ எடையும், ஐந்தாண்டு திட்ட கால அளவும் கொண்ட இந்த செயற்கைக் கோள், அனைத்துப் பருவ காலங்களிலும், குறிப்பாக, எல்லைப் பகுதிகளில், 24 மணி நேரமும் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கப் பெரிதும் உதவும்.
எல்லைப் பகுதிகளில் ஊடுருவலைக் கண்காணிப்பதன் மூலம், ஊடுருவலைத் தடுக்கவும், பயங்கரவாதத்தை முறியடிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும். பாரம்பரிய தொலையுணர்வு செயற்கைக் கோள்கள், பூமியில் எல்லைப்புற நடமாட்டங்களை வெளிச்சம் இருக்கும் போதும், மேகங்களால் மறைக்கப்படாத போதும் மட்டுமே புகைப்படம் எடுக்க வல்லவை. ஆனால், தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ரிசாட் -2பி, ஒரு ரேடார் புகைப்பட செயற்கைக்கோளாகும். சிந்தெடிக் அபெர்சர் ரேடார் என்ற துடிப்பான சென்சரைக் கொண்டுள்ள இந்த செயற்கைக் கோள், தனிப்பட்ட விதத்தில், ரேடார் அலைக்கற்றைகள் மூலம், 24 மணி நேரமும், மேகமூட்டம் உள்ள போதிலும் தொடர்ந்து கண்காணிக்கும் திறன் பெற்றதாகும். பூமியில் நடமாடும் பொருட்களின் கட்டமைப்பைத் துல்லியமாகக் கணிக்கும் திறனை இந்த சென்சர் பெற்றுள்ளது.
ரிசாட் – 2பி, தவிர, மேலும் இரண்டு முக்கியமான பேலோடுகளை பிஎஸ்எல்வி சி 46 விண்கலம் ஏந்திச் சென்றது. விக்ரம் பிராசஸ்ஸர் மற்றும் இனெர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் எனப்படும் குறைந்த செலவிலான இந்த இரு பேலோடுகளும், வருங்கால விண்வெளித் திட்டங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகின்றன என்று, இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவம் அவர்கள் கூறியுள்ளார். வருங்காலத்தில் இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ள ஏவுகலங்களை, சண்டிகரிலுள்ள செமிகன்டக்டர் காம்ப்ளெக்ஸ் உருவாக்கிய விக்ரம் பிராசஸ்ஸர் கட்டுப்படுத்தும்.
அனைத்துப் பருவகாலங்களிலும் கண்காணிக்கவல்ல ரிசாட் செயற்கைக் கோள்கள் வரிசையில் இஸ்ரோ முதலாவதாக இந்த செயற்கைக் கோளை செலுத்தியுள்ளது. ரேடார் புகைப்பட வசதியுள்ள இந்த செயற்கைக்கோள், பாதுகாப்புப் படையினருக்கும், பேரிடர் மேலாண்மைப் பணியாளர்களுக்கும் சிறந்த கருவியாக விளங்கும்.
வேளாண்மையில், மழையும் மேகமூட்டமும் நிறைந்த மே மாதம் முதல், செப்டம்பர் மாதம் வரையிலான கரீஃப் பருவத்தில், நடவுப் பயிரைக் கண்காணிக்க, ரேடார் புகைப்படம் உதவி வருகிறது. வனங்கள், மண்வளம், புவியியல் அமைப்பு, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலம் ஆகியவற்றிலும் ரிசாட் தரவுகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன.
ரிசார் 2பி யானது, கடந்த பத்தாண்டுகளில் உருவான மூன்றாவது ரேடார் புகைப்பட செயற்கைக் கோளாகும். இதற்கு முன்னதாக விண்ணில் செலுத்தப்பட்ட ரிசாட் -1 மற்றும் ரிசாட் 2 ஆகிய இரு செயற்கைக் கோள்களின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்த நிலையில், ரிசாட் -2பி தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ரிசாட் -1 செயற்கைக் கோளுக்கான சென்ஸர் தயாராகாததால், 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலையடுத்து, ரிசாட் -2 செயற்கைக் கோளை முதலில் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்தது. 2009 ஆம் ஆண்டில் ரிசாட் -2 விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், 2012 ஆம் ஆண்டில் ரிசாட் -1 விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ரேடார் புகைப்பட வசதியுள்ள செயற்கைக் கோள் வரிசையில், மேலும் பல செயற்கைக் கோள்களை வரும் மாதங்களில் இந்தியா செலுத்தத் திட்டமிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிலேயே 4 அல்லது 5 செயற்கைக் கோள்களை இஸ்ரோ செலுத்தவுள்ளது.
வெற்றிகரமான ரிசாட் – 2பி ஏவுதல் மூலம், இஸ்ரோவிடமிலுள்ள சக்தி வாய்ந்த விண்கலமான பிஎஸ்எல்வி ராக்கெட், தனது அபிரிமிதமான நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. திட எரிவாயு இல்லாத மோட்டார்களின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி வரிசையில், பிஎஸ்எல்வி சி 46, பதினான்காவதாகும். இதுவரை, 48 முறை விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி இரண்டு முறை மட்டுமே, அதாவது 1993 ஆம் ஆண்டில் முதல் ஏவுதல் போதும், பின்னர் 2017 ஆம் ஆண்டிலும் வெற்றி பெறவில்லை. 2017 ஆம் ஆண்டில், பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட போதிலும், ஐஆர்என்எஸ்எஸ் -1 எச் என்ற செயற்கைக்கோளை திட்டமிட்டபடி, விடுவிக்க இயலவில்லை. 2008 ஆம் ஆண்டில், முதன் முதலாக, இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் -1 மற்றும் செவ்வாய்க் கிரகத்துக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுப்பிய விண்கலம் ஆகியவற்றில் பிஎஸ்எல்வி ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த நிலவுக்கான சந்திரயான் -2 விண்கலம், வரும் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இது, நிலவின் தென் துருவ நிலப்பரப்பில் தரையிறங்கும் ரோவர் என்ற ரோபோ ஊர்தியை செலுத்தி, புதிய மைல்கல் சாதனை படைக்கவுள்ளது.