(அரசியல் விமர்சகர் பேராசிரியர் ஷிவாஜி சர்கார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, 90 கோடியையும் விட அதிகமான இந்திய வாக்காளர்களால் பெரும்பான்மை மிக்க கூட்டணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முப்பத்து ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு தனிக்கட்சி, இந்திய அரசின் மக்களவையில் 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு முன்னேற்றம் என்ற இரண்டு பெரும் காரணிகளின் அடிப்படையில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வெற்றியடைந்து பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
17-ஆவது மக்களவைக்கான ஏழு கட்டங்களைக் கொண்ட தேர்தல்களில், பா.ஜ.கா-விற்கு இந்திய வாக்காளர்களின் முழு அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. மிகக் குறைந்த செல்வாக்கே இருந்த மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், பா.ஜ.கா இம்முறை திடமாகத் தனது கால்தடத்தைப் பதித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளால், தாங்கள் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளும், அறிமுகப்படுத்தியுள்ள நலத்திட்டங்களும், பல வாக்காளர்களை அவர் பக்கம் ஈர்த்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 133 வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதாரம், சமையல் எரிவாயு, மானியங்களின் முறையான வழங்கல், வங்கிக் கணக்கில்லாத பல இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் துவக்கியது என, பல அடிப்படை விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இவை அனைத்தும் இந்திய மக்களால் நல்ல முறையில் வரவேற்கபட்டது.
தேசிய பாதுகாப்பைப் பொறுத்த வரை, என்.டி.ஏ அரசு, திடமான பல நடவடிக்கைகளை எடுத்தது. பயங்கரவாதம் இம்மியளவிலும் சகித்துக் கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தி அளிக்கப்பட்டது. பயங்கரவாதக் கொடுமைகளை, குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கொடூரச் செயல்களை அரங்கேற்றிய எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில், இந்திய பாதுகாப்புப் படையினர் மாபெரும் வெற்றி கண்டனர். மேலும், புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு, பாலாகோட், சகோடி மற்றும் முசாஃபராபாத் ஆகிய இடங்களில் இயங்கிக் கொண்டிருந்த ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் முகாம்களின் மீது இந்தியா நடத்திய எதிர்த் தாக்குதல்கள் ஒரு மறக்க முடியாத முன்னுதாரண நிகழ்வானது. பாகிஸ்தான் எல்லைக்குள் தனது விமானம் வீழ்ந்ததால், அங்கு சிறைபட்ட இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமானையும், மோதி அவர்களின் தலைமையிலான ஆரசாங்கம், மிக விரைவிலேயே தாய் நாட்டிற்கு மீட்டு வந்தது.
இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்த வரை, அவற்றிற்கு ஒரு புதிய உந்துதலையும் திசையையும் பிரதமர் மோதி அவர்கள் அளித்துள்ளார். அவரது கிழக்கு நோக்கிச் செயல்படும் கொள்கை, இந்தியாவின் கிழக்கு பக்கம் உள்ள நாடுகளுடன் இணக்கத்தையும் கூட்டுறவையும் வளர்த்துக் கொள்ள பெரும் உதவியாக இருந்தது. டோக்லாம் பிரச்சனையின் வெற்றிகரமான தீர்வு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் இஸ்ரேல் என அனைத்து நாடுகளுடனும் வலுப்பெற்ற உறவு என அனைத்தும் இந்திய மக்களின் சிந்தையைக் கவர்ந்த விஷயங்களாகும்.
2019 ஆம் ஆண்டின் தேர்தல், அபிலாஷைகளுக்கான, கனவுகளுக்கான, வலுவான எதிர்காலத்திற்கான தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது. மதம், இனம், மொழி, ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, சாதிப் பிணைப்புகளைப் புறக்கணித்து, மக்கள், மோதி அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மேன்மையான ஒரு வாழ்க்கைக்கான கனவுகளுடன் இருக்கும் மக்கள், மோதி அவர்களைப் போன்ற ஒரு தலைவரால்தான் அந்தக் கனவை நிஜமாக்க முடியும் என நம்புகின்றன.
இனி, பிரதமருக்கு பல கடினமான பணிகள் காத்திருக்கின்றன. அடிப்படை வசதிகளான உணவு, நிதியுதவி, வீடு, கழிப்பறைகள் போன்றவற்றைப் பெற்றுள்ள ஏழை மக்கள், இனி, நியாயமான அடுத்த கட்ட வசதிகளை எதிர்பார்ப்பார்கள்.
சுமார் 2000 டாலர் தனி நபர் வருமானம் கொண்டுள்ள நடுத்தர வருமான வகை நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்கிறது. ஃபியுடலிசம் எனப்படும் பிரபுத்துவ முறை பகிர்ந்தளித்தலுக்குப் பதிலாக, இக்காலத்து சாமானிய மக்கள், அவரவர் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளால் உந்தப்படுகிறார்கள். குறைவான எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ள கிராமப்புற இளைஞர்களும், நகர்ப்புற இளைஞர்களுக்கு சரிநிகராக, வேலை வாய்ப்பிற்கான ஆரோக்கியமான போட்டிகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்தியப் பொருளாதாரத்திற்கும் ஒரு உந்துதல் தேவைப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சாதகமான. நல்ல சூழலின் பின்னணியில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மிதமாகவே இருந்தது. தற்போது, உலகளாவிய பொருளாதார மந்தநிலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகளாவிய வர்த்தகப் போர்களோ, அல்லது, உண்மையான போர்களோ கூட உருவாகக்கூடிய சூழலின் பின்னணியில், விலையேற்றத்தில் இறுக்கத்திற்கான துவக்க நிலை அறிகுறிகள் தெரிகின்றன.
வேலை வாய்ப்பு உருவாக்கம், அடுத்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய விஷயமாகும். கோடிக்கணக்கான ஜனத்தொகைப் பெருக்கம் உள்ள நாட்டில், அனைவருக்கும் வேலை என்பது எளிதான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. ‘திறன் படைத்த இந்தியா’, ‘முத்ரா’ கடன் திட்டம், போன்றவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். கல்வி மற்றும் உற்பத்தித் துறைகளில் அதிக உத்வேகம் அளிக்கப்பட வேண்டும்.
வரி வகைகளிலும் சீர்திருத்தங்கள் தேவை. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்தப்பட்டு விட்டாலும், இது இன்னும் எளிதாக்கப்பட வேண்டும். மக்களின் வாங்கும் திறன், அரசாங்கத்தின் வருவாய் என இரண்டுமே அதிகரிக்க வேண்டும் என்பதால், இது சற்று கடினமான பணியாகவே இருக்கப்போகின்றது.
2014 ஆம் ஆண்டில் இருந்ததை விட, தற்போது எதிர்பார்ப்புகளும் கனவுகளும் அதிகமாக உள்ளன. பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, இந்தியாவை ஒரு முன்னணிப் பொருளாதாரமாக முன்னேற்றும் முனைப்பும் உறுதியும் பிரதமர் மோதியிடம் உள்ளது என இந்திய மக்கள் நம்புகின்றனர். வரும் ஐந்து ஆண்டுகளில், இந்தியா, புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியர்களிடம் உள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட, பல உலகத் தலைவர்கள் பிரதமர் மோதிக்கு தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர். மேன்மையான உலக ஒழுங்கை உருவாக்க அவருடன் இணைந்து உழைப்பதற்கான தங்களது விருப்பங்களையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
________