ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.

(சீன, யூரேஷிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

இந்த வாரத் துவக்கத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள, கிர்கிஸ்தானிலுள்ள பிஷ்கேக் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தற்போதைய வெளியுறவு அமைச்சர் பதவியில் அவர் மேற்கொள்ளும் கடைசி அயல்நாட்டுப் பயணமாகும் இது. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாக அவர் இப்பயணம் மேற்கொண்டது, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பிற்கு இந்தியா எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டங்களிலும் இந்தியத் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்ற 15 ஆவது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாட்டிலிருந்து தொடங்கி பிரதமர் திரு நரேந்திரமோதி அவர்கள் பங்கேற்று வருகிறார்.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற தங்கள் துறை சார்ந்த சந்திப்பில், வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். டோக்லாம் பிரச்சனையை அடுத்து, தங்கள் துறை சார்ந்த சீனத் தலைவர்களுடன் ஆலோசிக்க இந்த சந்திப்பு அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. தவிர, இந்தியாவுக்கு, ஒரு பல்நிலை அமைப்பின் மூலம், மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்பு கொள்ளவும் வழி கிடைத்தது. இந்த சந்திப்பிற்கிடையே, சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அவர்களைச் சந்தித்து, அதிகாரபூர்வமற்ற வூஹான் உச்சிமாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் முழுநேர உறுப்புநாடாக இந்தியா சேர்க்கப்பட்டது. பாகிஸ்தானையும் உறுப்புநாடாகக் கொண்ட இந்த அமைப்பு, யூரேஷியா முழுவதிலும், இந்திய துணைக்கண்டத்திலும் பரந்து விரிந்த அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பின் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து பங்கு கொள்வது இந்தியாவிற்கு மிகவும் அவசியமாகும்.

மத்திய ஆசியாவுடன் இணைப்புக்களை உருவாக்கும் இந்தியாவின் கொள்கைக்கு, இந்த அமைப்பு ஊக்கமளிக்கிறது. ஆஃப்கானிஸ்தானும், ஈரானும் இந்த அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இந்தக் கூட்டத்தில் பேசுகையில், சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ஆஃப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுவதற்கு இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஆஃப்கானிஸ்தான் தொடர்புக் குழுவுக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் அவர் தெரிவித்தார். இந்தத் தொடர்புக் குழுவின் நடவடிக்கைத் திட்டங்களுக்கு முழுவடிவம் விரைவில் அளிக்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். ஆஃப்கானிஸ்தானில் அமைதி வழிமுறைகளுக்கு பிராந்தியக் கூட்டுறவு கிடைப்பதற்கு ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, நல்ல மேடையை அமைத்துத்தரும் என்று இந்தியா நம்புகிறது.

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா உறுப்புநாடாக சேர்க்கப்பட்டதன் விளைவாக, பிராந்திய அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முக்கியப் பங்காற்ற வழி ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதத்துக்கு எதிராக மேலும் துடிப்புடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள, ரேட்ஸ் எனப்படும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஓர் அங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திர, அமைதித் திட்டம் என்ற பெயரிலான, பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா இணைந்ததன் முக்கிய நோக்கமே இப்பிராந்தியத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வலு சேர்ப்பதே ஆகும்.

இப்பிராந்தியத்தில், இணைப்புக்களை மேம்படுத்தி, அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்யும் பணிகளில் இந்தியா முனைந்துள்ளது. சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம், சபஹார் துறைமுகம், அஷ்கபாத் ஒப்பந்தம் மற்றும் இந்தியா – மியன்மார் – தாய்லாந்து மூவழி நெடுஞ்சாலை ஆகிய திட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதன் மூலம், இப்பிராந்தியத்தில் இணைப்புக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு புலனாகிறது என்று சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தெரிவித்தார்.

எனினும், தற்போதைய வடிவிலுள்ள சீனாவின் வலையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டம், இந்தியாவின் வெளியுறவு முன்னுரிமைக் கொள்கைகளுக்கு சவாலாக விளங்குகிறது. நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைக் கொள்கைகளை மதிக்க வேண்டும் என்றும், வளர்ச்சித் திட்டங்கள், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நிலையானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் விளங்க வேண்டுமென்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

மத்திய ஆசிய நாடுகள் தவிர, ஆசியாவின் இரு மாபெரும் சக்திகளான ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடனும் அதிகத் தொடர்பு கொள்வதற்கு, இந்தியாவுக்கு  ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, மேடை அமைத்துத் தருகிறது. யூரேஷியா பகுதி முழுவதுமே பயங்கரவாதம், இணைப்புக்கள் இன்மை, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்த சவால்களை சந்தித்து வருகிறது. இதுவே இந்தியா, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் பங்கேற்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளதால்,  ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் தனது பங்களிப்பை அதிகரிக்க இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளில், பிராந்தியக் குழுக்களில் ஒரு வலுவான இடத்தை ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு பெற்றுள்ளது. பல மாறுபட்ட முன்னுரிமைகள் கொண்ட நாடுகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு சிறந்த மேடையாக உள்ளது. இதனை நன்கு உணர்ந்துள்ள இந்தியா, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கீழ், அனைத்து நாடுகளுடனும் துடிப்புடன் ஈடுபட்டு வருகிறது.