கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ராகுல் மிஸ்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்.
ஒரு மாத கால காத்திருப்புக்கு பின், ஜோக்கோவி என்று பிரபலமாக அறியப்படும் ஜோக்கோ விடோடோ இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் ஏப்ரல் 17 ஆம் தேதியன்று தேர்தல்கள் நடந்ததன. அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல்கள் உடனே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்றன.
154 மில்லியன் வாக்காளர்களையும், நூற்றுகணக்கான தீவுகளையும் உள்ளடக்கிய தீவு நாடான இந்தோனேசியா, அனைத்து நிலைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்கள் நடத்துவது என்ற மிக சிக்கலான விஷயத்தை ஏப்ரல் 17 அன்று வெற்றிகரமாக நடத்தி காட்டிய இந்தோனேசியா பொது தேர்தல் ஆணையம் மே 21 ஆம் தேதி முடிவுகளை உறுதி செய்துள்ளது.
மூன்று முன்னணி ஜனநாயக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இந்தோனேசிய நாடுகள் ஜன நாயக முறைப்படி தேர்தல் திருவிழாவை மிக பெருமளவில் வெற்றிகரமாக நடத்தி முடித்து, மூன்று நாடுகளின் மக்களும் தங்களது எண்ணங்களை வாக்குகள் மூலமாக வெளிப்படுத்தி, இந்தியாவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் திரு நரேந்திர மோதியும், ஆஸ்திரேலியாவின் ஸ்காட் மோரிசனும் வெற்றி பெற்றுள்ள நிலையிலான பரந்த ஆசிய சூழலில் ஜோக்கோவியின் வெற்றியானது மேலும் சுவாரஸ்யத்தை அளிக்கிறது.
இதில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மூன்று நாடுகளிலும், ஆட்சியில் இருந்த தலைவர்கள் மூவருமே மிக கடுமையான தேர்தல் போர்க்களத்தை எதிர்கொள்வதாக கணிக்கப்பட்டது. ஆனால் இந்தோனேசியாவில் ஜோக்கோவியும், இந்தியாவில் மோதியும், ஆஸ்திரேலியாவில் மோரிசன் என மூவருமே பெருமளவில் சிறப்பாக வெற்றி பெற்று தங்களது அலுவலகங்களுக்கு ஆட்சிக்கு மீண்டும் வந்துள்ளனர்.
இந்த தேர்தலில் ஜோக்கோவி 55 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றதன் மூலம் எட்டரை கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தலைமை தளபதி பிரபோவோ சுபியாண்டோ 45 சதவிகித வாக்குகளையே பெற்றார். பிரபோவோ 2014ஆம் ஆண்டு தேர்தலிலும் ஜோக்கோவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜோக்கோவிக்கு கிடைத்துள்ள அதிக சதவிகித வாக்குகளானது, இந்தோனேசிய மக்களிடையே அவருக்கு இருக்கும் பேராதரவை தெளிவாக காட்டியுள்ளது.
தேசிய அவையான நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், ஜோக்கோவியின் தலைமையிலான இந்தோனேசிய ஜன நாயக போராட்ட கட்சியான பி.டி.ஐ.பி 2 கோடியே 70 லட்சம் வாக்குகளை பெற்று மிக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதனை அடுத்து கரிந்த்ர கட்சியானது ஒரு கோடியே 76 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.
இருப்பினும், ஜோக்கோவியின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, முடிவுக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. பிரபோவோவும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல்கள் பாரபட்சத்துடன் நடத்தப்பட்டதாகவும், முறைகேடுகள் நடந்ததாகவும் கூறி முடிவுகளை ஏற்க மறுக்கின்றனர். பிர்போபோவின் மறுப்பானது ஜகார்த்தாவில் கலவரங்களுக்கு வித்திட்டுள்ளது. பிர்பொபோவின் ஆதரவாளர்களால் தூண்டப்பட்ட கிளர்ச்சி என்று சொல்லப்படுகிற கலவரங்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது நிலவரம் கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது என்றாலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் வெடிப்பதை தவிர்ப்பதற்காக சமூக ஊடக தளங்கள் சிறிது காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன.
பிர்போவோ தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். அவர் கடந்த முறை தோல்வியுற்றபோதும் இவ்வாறு வழக்கு தொடர்ந்தார்.ஆனால் வழக்கில் வெற்றி பெற முடியவில்லை. எதிர்கட்சியானது தேர்தலில் மோசடி நடந்ததற்கான நம்பதகுந்த ஆதராம் ஏதும் அளிக்கமுடியாமல் இருப்பதால், இம்முறையும் அதே போல்தான் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதிபர் ஜோக்கோவி, பிரதமர் மோதி இருவருமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய – இந்தோனேசிய உறவுகள் அடுத்த நிலை நோக்கி மேல் செல்லக்கூடும். வட்டாரத்தில் அமைதி, ஸ்திரதனமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பழைய, புதிய பாதுகாப்பு சவால்களை எதிர்த்து போராடுவது என ஏகப்பட்ட விஷயங்களில், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் ஒரே மாதிரியான கவலைகளும், ஆர்வங்களும் உள்ளன. ஆசியான் முன்னிற்கும் கிழக்காசிய உச்சி மாநாடு, ஆசியான் பிராந்திய கருத்துக்களங்கள் மட்டுமல்லாது ஜி இருபது போன்ற முக்கிய மன்றங்களிலும் இரு நாடுகளும் அங்கத்தினர்களாக விளங்குகின்றன.
திரு மோதி அவர்களின் 2018 இந்தோனேசிய பயணத்தின் போது இரு நாடுகளும் தங்களது உறவை விரிவான செயல்தந்திர கூட்டாளித்துவமாக மேம்படுத்தின. இந்தோனேசியாவின் உலகளாவிய கடல் தள மார்க்கம், இந்தியாவின் `கிழக்கு நோக்கி` கொள்கை மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நோக்கு போன்றவை பல ஒற்றுமைகளை உள்ளடக்கியுள்ளதால் இரு நாடுகளின் செயலுத்தி மற்றும் பொருளாதார முன்னுரிமைகள் ஒன்று மற்றொன்றுடன் ஒத்திசைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாகும். இந்திய பிரதமரின் இந்தோனேசிய பயணத்தின் போது இரு நாடுகளும் 2025 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகப்படுத்துவோம் என்று உறுதி பூண்டன.
மற்றுமொரு ஐந்தாண்டுகள் கையிலிருப்பதால், இரு அரசியல் தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமாகவும், தங்களது நாடுகளின் முன்னேற்றத்தை, வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இருக்கும் தடைகளை அகற்றுவதன் மூலமாகவும், புதிய பாதைகளை கண்டறிந்து தங்களது நாடுகளின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்.