வல்லரசு நாடாகும் இலக்குடன் இந்தியாவின் வெற்றி நடை

(மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

நாட்டிற்கு அனுகூலமான நல்ல முடிவுகளை எடுப்பதில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்றே கூற வேண்டும். ‘புதிய உத்வேகத்துடன் கூடிய ஒரு புதிய இந்தியாவை’ உருவாக்க, இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனது அரசாங்கம் ஒரு புதிய பயணத்தைத் துவங்கும் என அவர் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது. நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் அவர் அளித்த உரை, 2022 ஆம் ஆண்டிற்குள் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான அனைவருடைய கனவையும் நிஜமாக்க அவர் வைத்திருக்கும் திட்டங்களுடன் ஒத்திசைந்துள்ளது. இந்தக் கனவு, அனைத்து இந்தியர்களுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில், சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகளை அளிப்பதோடு நின்றுவிடாமல், உலக அரங்கில் நாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

நாரா என்ற புதிய சொற்றொடரை பிரதமர் அறிமுகப்படுத்தினார். தேசிய லட்சியமும் பிராந்திய ஆர்வமும் கலந்த மனப்போக்கு இந்த நாராவின் அடிப்படையாக இருக்கும். விரிவாகச் சொன்னால், விரைவில், வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான இந்தியாவின் விருப்பத்தோடு இந்த சொற்றொடர் இசைந்திருக்கின்றது. கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் அறிவுத்திறன் ஆகியவற்றின் மையப்புள்ளியாக முன்னேறுவதற்கான இந்தியாவின் வழிப்பாதையையுடனும் இது ஒத்து இருக்கின்றது. உலகளவில் ஒரு கம்பீரக் குரலாக எழுவதற்கான நாட்டின் செயலுத்திக்கும் இது துணையாக இருக்கும்.

எனினும், இவை அனைத்தும் உண்மையில் நடக்கும் முன்னர், இந்தியா, உஜ்வலா, ஆயுஷ்மான் பாரத் போன்ற மக்களுக்கான  அனைத்துத் திட்டங்களின் வரம்பையும் இன்னும் விரிவுபடுத்த வேண்டும். இந்த நலத்திட்டங்களோடு, பொருளாதாரத்தின் வேகத்தையும் நம் நாடு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்புடைய நாடுகளின் பட்டியலில் இணைய முடியும், மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையையும் அடைய முடியும். அதாவது, நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சியால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 10 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்ட வேண்டும்.  உச்சத்தில் இருக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோள், வளர்ச்சிக்குத் தேவையான உந்துதலையும் வேகத்தையும் அளிக்கின்றது.

புதிய இந்தியாவிற்கான பிரதமரின் கனவுகளில், பொருளாதார மற்றும் முதலீட்டு அளவுகளை விரிவுபடுத்துவது ஒரு புறமிருக்க, நாட்டை, அரசியல் ரீதியாகவும், செயலுத்தி ரீதியாகவும் வலுவாக்குவதும் அவரது இலக்கின் மறுபக்கமமாக இருக்கிறது. 1942 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான காலம், நமது நாட்டிற்கு எத்தனை முக்கியமானதாக் இருந்ததோ, அதே அளவு, அடுத்த ஐந்து ஆண்டுகாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இருக்கும் என பிரதமர் தொடர்ந்து கூறி வருகிறார். அவர் குறிப்பிட்ட 1942-1947 வரையிலான காலத்தில்தான், பல்வேறு பின்னணி, பிராந்தியங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து மக்கள் ஒன்று சேர்ந்து ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அதாவது, அதேபோன்ற ஒன்றுபட்ட உத்வேகத்துடன் மக்கள் முன்வந்தால், இந்தியாவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, உலகில் நமக்கான சரியான இடத்தை நாம் பிடிக்கலாம் என்பதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். மக்கள் நலனை மையமாகக் கொண்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த, சரியான நடவடிக்கைகளுக்கும் சரியான நோக்கங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல், ஐ.நா-வின் பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியாவின் உறுப்பினர் அந்தஸ்திற்காக, சர்வதேச அளவில், அரசியல் அரங்கங்களில் சரியான சூழல் உருவாக்கப்பட்டு, வலுவான பின்னூட்டங்கள் அளிக்கப்பட வெண்டும். இது தொடர்பாக, பிஷ்கேக்கில், எஸ்.சி.ஓ எனப்படும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பில், இந்திய அதிகாரிகள் உறுப்பினர் நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்தனர். இதில், ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தில் இன்னும் அதிக நாடுகளின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தவும், செயலூக்கத்தை அதிகரிக்கவும், விரிவான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான தன்னுடைய முயற்சிக்கு எஸ்.சி.ஓ நாடுகளின் ஆதரவை இந்தியா கேட்டது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். கடந்த பல ஆண்டுகளாக, ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஐ.நா-வின் தடுப்பதிகாரமான வீட்டோ அதிகார அமைப்பின் தற்போதைய கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர ஓரிரண்டு நாடுகள் மறுக்கின்றன.  ஆகையால், ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தை விரிவுபடுத்த முடியாமல் இருக்கின்றது. எனினும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார நிலை மற்றும், உலகத் தலைவர்களுடன் இருக்கும் பிரதமர் மோதியின் இணக்கமான உறவுகள் ஆகியவற்றால், கடந்த சில காலமாக, ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தில் திருத்தங்கள் குறித்த இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

உலகின் ஒரு பொறுப்புமிக்க நாடு என்ற வகையில், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உட்பட, இந்தியா பல துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுகளில் ஒன்றாக. சர்வதேச சூரிய சக்தி கூட்டணிக்கு தலைமை வகிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பது இந்த அமைப்பின் இலக்காகும். புதிய இந்தியாவிற்கான இலக்கு இந்த கருத்திற்கும் ஆதரவாக உள்ளது. சர்வதேச விவகாரங்களில் இன்னும் அதிக அளவு பங்களிக்க பல நாடுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. எனினும், பல உலகப் பிரச்சனைகளில், முதிர்ந்த நிலைப்பாட்டில் நிலைத்திருந்து, தனது அரசியல் நிலையை விவேகத்துடன் காத்து வருகிறது இந்தியா. இந்தியாவின் வசுதைவ குடும்பகம், அதாவது, உலகே ஒரு குடும்பம் என்ற சித்தாந்தம் நமது வெளியுறவுக் கொள்கைகளின் குறிக்கோள்களை சரியாக விவரிக்கின்றது.