மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகள்.

(ஐ.நா விற்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.)

2014ஆம் வருடம் முதல் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவின் அதீத மாற்றத்திற்காக  எடுத்த முயற்சிகளைத் தொடர, சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் 90 கோடி மக்கள் ஜனநாயக முறைப்படி பெருவாரியாக வாக்களித்து, அதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படவுள்ள இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளனர்.

சப்கா சாத் (அனைவருடனும்), சப் கா விகாஸ் (அனைவரின் முன்னேற்றம்) மற்றும் சப் கா விஷ்வாஸ் (அனைவரின் நம்பிக்கை) ஆகியவற்றை முன்னிறுத்திய ஆட்சியே தனது அரசாங்கத்தின் கொள்கை என்று பிரதமர் அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஈடுபாடுகளை அதிகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன் கூடிய மாறுபட்ட இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் அமையும்.

சர்வதேச இடையூறுகள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய சக்திகளாக விளங்கும் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவுகளைக் கட்டமைப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாக விளங்கும். மாறுபட்ட இந்தியாவை உருவாக்குவதற்காகத் தேவைப்படும் முதலீடுகள், உபகரணங்கள், மற்றும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றிற்கு இந்த நாடுகளின் உறவுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். தவிர, அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஆசியான் மற்றும் ரஷ்யா போன்ற முக்கிய உலகப் பொருளாதார நாடுகளுடன், இந்தியாவின் தொடர்புகளை மேம்படுத்த, அந்த உறவுகள் மிகவும் இன்றியமையாதவையாக விளங்கும்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து திகழ்வதற்கு, அண்டை நாடுகள் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் விளங்குவது மிகவும் அவசியமாகும். அமைதி மற்றும் பாதுகாப்பு இல்லாமல் நிலையான வளர்ச்சியைக் காணுவது இயலாது என்பதை இந்தியாவின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவை சுற்றியுள்ள  நிலம் மற்றும் கடல் வழி எல்லைகளில் ஆதரவான சூழ்நிலைகளை உறுதி செய்வது, இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய முன்னுரிமையாக இருக்கும். நிலையான, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக, நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றில் அண்டை நாடுகளுடன் இந்தியா ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆசியாவில், ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வரையிலான இந்தோ பசிபிக் கடல் பகுதிகளுக்கான செயலுத்திக் கட்டமைப்பை, தனது நாட்டின் நலன்களைக் காக்கும் வகையில் மாற்றியமைக்க அடுத்த ஐந்தாண்டுகள் இந்தியாவுக்கு  வாய்ப்பை வழங்குகின்றன. இவை அனைத்தையும், 2015 ஆம் வருடம் மார்ச் மாதம், அனைத்து பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் சாகர் என்று பெயரிடப்பட்ட திட்ட அறிக்கையிலும், 2018 ஆம் வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்கிரி -லா பேச்சுவார்த்தையின் போதும், பிரதமர் மோடி அவர்கள் கோடிட்டுக் காட்டினார். இந்தியாவின் மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும், இந்தியப் பெருங்கடலின் நீலப் பொருளாதாரத்தை கட்டமைப்பது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் சிறப்பு முன்னுரிமையாக விளங்கும்.

80 லட்சம் இந்தியர்கள் வசித்துக்கொண்டு வேலை பார்த்து வரும் இந்தோ பசிபிக் மேற்குப் பகுதிகளான, மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில், கடந்த ஐந்து வருடங்களில் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முன்முயற்சிகளைத் தொடரும் விதமாக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள்  அமையும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவின் பொருளாதார, எரியாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வலுவான ராஜீய உறவுகள் மூலம், ஏடன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி வழித்தடத்தைத்

திறந்த நிலையில் இருத்திக் கொள்வது அவசியமாகும். இந்தியாவின் செயலுத்தித் தேவைகளை நிரப்ப, சபஹார் துறைமுகம் போன்ற இணைப்புத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம், நிலப்பரப்பால் சூழப்பட்ட ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள், சர்வதேச முதலீடுகள் மற்றும் சந்தைகளை அணுகுவது மிகவும் எளிதாக அமையும். மேற்கு இந்தோ பசிபிக் பகுதிகளில், நிகர பாதுகாப்பு அளிக்கும் நாடாக இந்தியா பரிமளிக்க இந்த முன்முயற்சிகள் உதவும்.

இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாடு, இந்தோ பசிபிக் தீவு கார்ப்பொரேஷனின் மன்றம் மற்றும் இந்தியா – லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளின் சந்திப்புக்கள் ஆகியவற்றில் கடந்த ஐந்தாண்டுகளில் வெளியிப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவதை இந்திய வெளியுறவுக் கொள்கைகள் முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும்.  இதன் மூலம்,துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தவர்கள் உள்பட, இந்தியாவின் உலகளாவிய பிரபலம் குறிப்பிடத்தக்க அளவு விரிவடையும்.

நான்காவது தொழில்துறைப் புரட்சியை உருவாக்க வல்ல தொழில்நுட்பங்கள், 21 ஆவது நூற்றாண்டை வடிவமைப்பதற்கான வாய்ப்பை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வழங்குகிறது. நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதில் இந்தியா, தன்னிச்சையாகப் பங்களிக்க வேண்டும். இது இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஊக்கமளிப்பதோடு, இந்திய மக்களுக்கு அதிகாரமளிக்கவும் உதவும்.

2020 ஆம் வருடம் ஜூன் மாதம் துவங்கி, 2022 ஆம் ஆண்டுவரை, இரு ஆண்டுகளுக்கு, ஐநா பாதுகாப்புச் சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.  2021 ஆம் வருடத்தில் ஐநா மனித உரிமை சபையில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. அது மூன்று வருடத்திற்கு நீடிக்கும். 2022 ஆம் வருடம், ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இது போன்ற மிக முக்கியமான பல்நிலைத் தலைமை மூலம், சர்வதேசக் கூட்டுறவுக்கான சிந்தனைக் களஞ்சியமாக உலகை வழிநடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். மாறுபட்ட இந்தியாவை உருவாக்குவதில் இவை அனைத்தும் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.