பாகிஸ்தானில் தொடர்கதையாகும் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்.

(இட்சாவின் தெற்காசிய மையத்தின் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

பாகிஸ்தானின் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான கொள்கையின் விளைவாக, அரசிடமிருந்தும், வலதுசாரி தீவிரவாதிகளிடம் இருந்தும் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கிறது.  பாகிஸ்தானில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள், சில சமயம் தங்களது  மத நம்பிக்கைகளின்படி நடப்பது மிகவும் ஆபத்தாக விளங்குகிறது. மோசமான தெய்வ நிந்தனை சட்டத்தின் கீழ், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறுபான்மையினர் மீது வழக்கு தொடரப்படுகிறது.

சமீபத்திய நிகழ்வாக, சிந்து மாகாணத்தில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மத நூலை சிதைத்ததாகக் காரணம் காட்டி, தெய்வ நிந்தனை சட்டத்தின்கீழ்  குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் மாகாணத்தில், சிறுபான்மை மத சமுதாயத்தைச் சேர்ந்த தம்பதியர், பொருத்தமற்ற உரை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தெய்வநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். லாகூரின் எல்லையில், நரோவால் என்னுமிடத்தில் அமைந்துள்ள குருநானக் மாளிகை சமீபத்தில் தகர்க்கப்பட்டது, சிறுபான்மையினருக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. சிறுபான்மையினரின் உரிமைகள் மீது நடத்தப்படும் தொடர் அத்துமீறல்கள் ஆகும். தெய்வ நிந்தனை சட்டத்தின்கீழ், அதிக அளவிலான சிறுபான்மையினர் குற்றப் பதிவு செய்யப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மை மக்கள் உரிமைகள் மீது நடத்தப்படும் கொடுமைகளுக்கு ஆசியாபிபி அவர்களின் வழக்கு ஒரு சான்றாக உள்ளது. விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து, சிறுபான்மையினரை கொடூரமான இச்சட்டத்தின்கீழ் குற்றப்பதிவு செய்வது தொடர்கிறது.

உள்ளூர் மசூதியின் தலைமை மதகுரு அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மருத்துவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திணிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டானது, பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியது. இந்த சட்டத்தில் சொல்லப்படாத விதிகள் பாகிஸ்தான் மக்களின் மனதில் ஆழ்ந்து பதிந்துள்ளன. இதனால் ரௌடி கும்பல் திரண்டு, குற்றம் சாட்டப்பட்டவர் மீது தாக்குதல் நடத்துவது சிலசமயம் நிகழ்கிறது. இந்த கும்பலின் மனநிலையின் வெளிப்பாடாக, டாக்டர் கைதானதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சிறுபான்மை சமுதாயத்தினரின் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டம், தளர்வானதும், தெளிவற்றதும் ஆகும். கட்டாயப்படுத்துதலையும் இச்சட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ், மத ரீதியிலான சிறுபான்மையினர் அளவுக்கு மீறி இலக்காக்கப்படுகின்றனர். தனிப்பட்ட பழிதீர்க்கும் விதமாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்பாவி மக்கள் மீது பல தவறான வழக்குகள் இச்சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினத்தவருக்கு, அவர்களது மதத்தைச் சார்ந்த புனித இடங்களில் உத்திரவாதமான பாதுகாப்பு கிடைப்பதில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்கவையும், முக்கியமான கலாச்சார மையங்களும் பாகிஸ்தானில் உள்ள வலதுசாரித் தீவிரவாதிகளின் இலக்குகளாக, நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. இவ்வாறு இலக்கான சிறுபான்மை இனத்தவரின் புனிதத்  தலங்களின் நீண்ட பட்டியலில், சமீபத்தில், நரோவால் என்னுமிடத்தில் தகர்க்கப்பட்ட குருநானக் மாளிகையும் இடம் பெற்றுள்ளது. வலதுசாரி தீவிரவாதிகளுடன் இணைந்து,  செல்வாக்கான உள்ளூர் மக்களால் இந்த மாளிகை தகர்க்கப்பட்டுள்ளது வருத்தத்துக்குரியது. இந்த அத்துமீறலான செயலுக்கு எவரும் கேள்வி எழுப்பவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குருத்வாராவில் இருந்து, வரலாற்று சிறப்புமிக்க சில முக்கிய பொருட்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை திருடப்பட்டு உள்ளூர் சந்தையில் அவை விற்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரிகளிடம் கேள்வி கேட்ட போது, அவர்கள் பதிலேதும் கூறாமல் மௌனம் சாதித்தனர். இச்சம்பவம், சீக்கிய சமுதாயத்தினரின் உணர்வுகள் மீது பலத்த காயம் ஏற்படுத்துவது திண்ணம் என்ற நிலையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் ஒரு பெரிய பின்னடைவு ஏற்படும். அந்தப் பாரம்பரிய மாளிகை இடிக்கப்பட்டதையடுத்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னால், இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது  ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பாகிஸ்தானில், முஸ்லீம் அல்லாதோர், காஃபிர், அதாவது இஸ்லாம் மீது நம்பிக்கையற்றவர்கள் என்று முத்திரை இடப்படுகின்றனர். இதற்கு பாகிஸ்தான் அரசியலமைப்பும், அரசு நிறுவனங்களும் ஆதரவு அளிப்பது, பிரச்சனைக்குரிய விஷயமாக உருவெடுக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஐந்து சதவிகித இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்காக ஒதுக்கப் பட்டுள்ள போதிலும், அவர்களுக்காக எந்த ஒரு பிரதிநிதித்துவமும் அங்கு இல்லை. சிறுபான்மையினருக்கும்,  அவர்களது கோவில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றுக்கும் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை.  தெய்வ நிந்தனை சட்டத்தின்கீழ், சிறுபான்மை இனத்தவரைத் துன்புறுத்துவோருக்கும், புனிதத்தலங்களை சேதப்படுத்துவோருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க  பாகிஸ்தானில் எந்தவித ஏற்பாடும் இல்லை. இதனால் ஷியா ஹஜாராஸ் மற்றும் அகமதியர்கள் உள்ளிட்ட பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராக, கொடிய மனித உரிமை அத்துமீறல்கள் நிகழ, மேலும் உத்வேகம் அளிக்கப்படுகிறது என்பது கசப்பான உண்மை.