ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 துவக்கம்.

(ஆல் இந்தியா ரேடியோ செய்தி ஆய்வாளர், கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

‘ஜெண்டில்மேன்ஸ் கேம்’ என்றழைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் உலகக் கோப்பையானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் திருவிழாவாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் –சில் நடைபெறும் 12-ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஜூலை மாதம் 14 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். ஒன்றரை மாத காலம் நடக்கும் இந்தப் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நடத்துகின்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், இந்தப் போட்டிகளை ஐந்தாவது முறையாக நடத்துகின்றன. இதற்கு முன்னர், உலகக் கோப்பை, 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ளது.

உலகளவில் சில நாடுகளே, அதுவும், பெரும்பாலும், ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியில் இருந்த நாடுகளே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன என்ற போதிலும், ‘கேம் ஆஃப் வில்லோஸ்’ என்றழைக்கப்படும் இந்த விளையாட்டு, உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டாக உள்ளது. பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை வைத்துப் பார்த்தால், இது கால்பந்து மற்றும் லான் டென்னிசிற்கு அடுத்தபடியாக உள்ளது. நமது துணைக் கண்டத்தில், கிரிக்கெட் விளையாட்டிற்கு ஒரு மதத்திற்கான புனிதத்தன்மை அளிக்கப்பட்டு, கிரிக்கெட் வீரர்கள் கடவுள்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறார்கள். இப்பகுதிகளில் இருக்கும் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் மிகவும் தீவிரமாக இருக்கும். சில சமயம் இது எல்லை மீறுவதும் உண்டு. இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களுக்குள் இதுவரை நான்கு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்களும் இங்கு மிக அதிகம். நமது துணைக் கண்டத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு நாட்டின் பிரதமராக இருப்பதும், தெற்காசியப் பகுதியில், இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் முக்கிய நாடுகளில், பல கிரிக்கெட் வீரர்கள் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதும், இப்பகுதிகளில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் புகழுக்கும் பிரபலத்திற்கும் சான்றுகளாகும்.

இவ்வாண்டு உலகக் கோப்பையின் முதல் ஆட்டம், இங்கிலாந்திற்கும் தென் ஆஃப்பிரிக்காவிற்கும் இடையே இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும். இறுதிப்போட்டி, கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடபெறும்.

இம்முறை போட்டிகளின் அமைப்பின் படி, இடம் பெற்றுள்ள பத்து அணிகளில், ஒவ்வோர் அணியும் மீதமுள்ள ஒன்பது அணிகளுடன் விளையாடும். இந்த லீக் கட்டத்தின் இறுதியில், முன்னணியில் இருக்கும் நான்கு அணிகள், அரை இறுதிக்குத் தகுதி பெறும். இந்தப் பத்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளில், மற்ற இணை அணிகள் பங்குபெற முடியாத காரணத்தால், இம்முறை, பல விமர்சனங்களும் எழும்பின. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டவுடன், டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளின் என்ணிக்கை 10-லிருந்து 12 ஆனது.  ஆக, டெஸ்ட் போட்டிகள் விளையாட்த் தகுதி பெற்ற அனைத்து நாடுகளும் பங்கு கொள்ளாத முதல் உலகக் கோப்பையாக இது இருக்கும். விதிகளின் படி, தேர்வுப் போட்டிகளில், இணை அணிகள் நீக்கப்பட்டன.

கிரிக்கெட் விளையாட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து, இன்னும் ஒரு முறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பது அந்நாட்டைப் பொறுத்தவரை சோகமான விஷயமாகும். இம்முறை, அங்கு போட்டிகள் நடப்பதால், இங்கிலாந்திற்குக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.  எனினும், இந்திய அணியும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளில் ஓங்கி இருக்கும் அணியாக உள்ளது. இந்தியா இதுவரை, 1983 மற்றும் 2011 என இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியா, 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையில் அரை இறுதி வரை வந்தது. ஆஸ்திரேலியா, தென் ஆஃப்பிரிக்கா, நியூஸிலாந்து, மற்றும் வெஸ்ட்-இண்டீஸ் ஆகியவை கோப்பையை வெல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படும் மற்ற அணிகளாகும். ஆனால், உலகக் கோப்பைப் போட்டிகளில் எந்த அணியையும் சாதாரணமாக எடை போட முடியாது என்பது உண்மையே.

அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி இந்திய அணிக்குத் தலைமை வகிக்கிறார். இவர் அனைவரையும் ஊக்கப்படுத்தி உடன் அழைத்துச் செல்லும் நல்ல தலைவராகவும், விடாமுயற்சியுடன் கூடிய போராளியாகவும் தன்னை நிரூபித்துள்ளார். பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் இந்தியாவில் திறமை மிக்க வீரர்கள் உள்ளனர். ஸ்டம்புகளுக்குப் பின் இருந்து தன் பங்களிப்பை அளிக்கும் மகேந்திர சிங் தோனி, ஒரு மூத்த வீரர் என்பதுடன், 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பங்குகொண்ட இந்திய அணிகளின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்திய அணியைப் பொருத்த வரை, அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு மும்பையின் வாங்கடே மைதானத்தில், இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அவர், ஆறு ரன்கள் அடித்து வெற்றிக்கான இலக்கை அடைந்த அந்த்த் தருணத்தை எந்த கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது. அது, கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கருக்கு உலகக் கோப்பையைப் பரிசளிப்பது போல அமைந்தது.

இம்முறை உலகக் கோப்பையில் இந்தியாவிற்கான முதல் ஆட்டத்தில், இந்தியா, சௌதாம்ப்டனின் ரோஸ் பௌலில் தென் ஆஃப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. அதன் பிறகு இந்தியா, 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் 13 ஆம் தெதி நியூஸிலாந்தையும் எதிர்கொள்ளும். ஓல்ட் ட்ரஃபோர்ட், மான்செஸ்டரில், ஜூன் 16 ஆம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முழுதும் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட்த் தோற்றதில்லை. இந்த சாதனையைத் தொடர இந்தியா முயற்சி செய்யும். அதன் பிறகு, இந்தியா, ஆஃப்கானிஸ்தான், வெஸ்ட்-இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் விளையாடும்.

முதல் மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கிடையில் முதல் அரை-இறுதிப் போட்டி, ஓல்ட் ட்ரஃபோர்ட், மான்செஸ்டரில் ஜூலை மாதம் 9 ஆம் தேதி நடைபெறும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் நாடுகளுக்கு இடையில், எட்ஜ்பாஸ்டன், பர்மிங்கமில், ஜூலை 11 ஆம் தேதி இரண்டாவது அரை-இறுதிப் போட்டி நடைபெறும். இந்த இரண்டு அரை-இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, கோப்பையை வென்று 40 லட்சம் டாலர் பரிசுத் தொகையைப் பெறும். இந்த அற்புதமான கிரிக்கெட் போட்டிகளைக் கண்டுகளிக்க, இங்கிலாந்தை நோக்கி ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கிரிக்கெட் உலகக் கோப்பையால், இங்கிலாந்தின் இந்த கோடைக் காலம் கொண்டாட்ட காலமாக மாறி வருகின்றது!!

__________