நரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்பு.

(நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த நிருபர் மணிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

நரேந்திர மோதி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ,தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். பிரதமரின் தலைமையின் கீழ், 58 கேபினட் அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களையும் சேர்த்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் இருந்தும் திறமை வாய்ந்த அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர் அவர்களை பிரதமர் மோதி அவர்கள் சேர்த்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறையில் ஒரு முக்கியப் பதவியில் இருந்தார். சீன விவகாரங்களில் அவருக்கு உள்ள நிபுணத்துவம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா அவர்களும் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்த அரசாங்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் எதிர்பார்ப்புதான், மோதி அவர்களுக்குக் கிடைத்த வெற்றிக்குக் காரணம் என்று விவரிக்கப்படுகிறது. தேசிய லட்சியம் மற்றும் பிராந்திய அபிலாஷை என்பதைக் குறிக்கும் “நாரா” என்பதின் அடிப்படையிலேயே தனது இரண்டாவது அரசாங்கம் பணிபுரியும் என்று மோதி அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.  அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்ல நிர்வாகம் ஆகிய தாரக மந்திரமே அரசை வழிநடத்திச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியுடைய மாற்றங்கள் என்பதே அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்ததில் உள்ள பின்னணி என்று தோன்றுகிறது. ராஜ்நாத் சிங் அவர்கள், திரு நிதின் கட்கரி, திரு  ராம் விலாஸ் பாஸ்வான், திரு நரேந்திர சிங் தோமர், திரு பியூஷ் கோயல், திருமதி ஸ்மிருதி இரானி ஆகியோர் மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சியில் பதவி ஏற்றுள்ளனர். சில இளைய மந்திரிகள், திரு கஜேந்திர சிங் ஷெகாவத், திரு கிரிராஜ் சிங் மற்றும் திரு மகேந்திர நாத் பாண்டே போன்றவர்களின் செயல்திறன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

58 உறுப்பினர்கள் கொண்ட இந்திய மந்திரிசபையில், 24 கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள், மற்றும் 24 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். பெரும்பான்மையான மாநிலங்களில் ஆளும் கூட்டணிக் கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் அனைத்து மாநிலங்களிலிருந்தும் அமைச்சரவையில் மந்திரிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது தேசிய அரசு என்பதற்கான உண்மையான பிரதிபலிப்பாக உள்ளது.

பிரதாப் சந்திர சாரங்கி அவர்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒரிசாவிலுள்ள பாலாஸோர் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு குடிசையில் வசிப்பவர். சாரங்கி அவர்கள் மிக எளிமையான மற்றும் மிகவும் கண்டிப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். பொதுச் சேவையில் சாரங்கி அவர்களுக்கு உள்ள பக்தி மற்றும் எளிமை மூலம், பிரதமர் நரேந்திர மோதி உள்பட பல மக்களின் இதயத்தை அவர் வென்றுள்ளார்.

புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு நிகழ்ச்சியுடன், பதினேழாவது லோக்சபா தேர்தல் பணிகள் முடிவடைந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்க வகை செய்யும் விதமாக, குறுகிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட்டப்படும்.

அபிலாஷைகளைக் கொண்ட ஜனநாயக  நாடாக, இந்தியா மிகச்சரியாக அழைக்கப்படுகிறது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 90 கோடி மக்கள் தொகையில் 67 சதவீத மக்கள், மோதி அவர்களின் முன்னேற்றத் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். நாட்டின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு, உலகப் பொருளாதாரத்துக்கும் ந்னமை பயக்கும்.

மோதி அவர்கள் இரண்டாவது  முறையாகப்  பதவி ஏற்கும் இந்த வேளையில், சர்வதேசப் பொருளாதாரம் சிக்கலான சூழலில் உள்ளது. இது புதிய அரசாங்கத்திற்கு ஒரு முக்கியப் பிரச்சனையாக இருக்கும். அமெரிக்கா – சீனாவிற்கு இடையே நடைபெறும் வர்த்தகப் போரின் தீவிரத்தை, ஏற்கனவே இந்த உலகம் உணர்ந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை உச்சமடைந்துள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பிரதமர் மோடி அவர்களின் அரசாங்கம் தனது முதல் ஆட்சிக் காலத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சிகள் அவரது இரண்டாவது ஆட்சியிலும் மேற்கொள்ளப்ப்டும் என்று எதிர்பார்க்கலாம்.  விவசாயிகளின் சிறந்த வாழ்வாதாரத்திற்காக, இந்திய விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், இந்த அரசாங்கம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிம்ஸ்டெக் என்று அழைக்கப்படும் வங்காள விரிகுடா பல்நிலை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முன்முயற்சிக் குழு உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். கிர்கிஸ்தான் நாட்டின் அதிபர் மற்றும் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இது இந்தியாவின் கொள்கையான “அண்டை நாடு முதலில்” என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இந்தியா விரும்பும் கூட்டு நலன் என்பதற்கான நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது என்றால் அது மிகையல்ல.