வளரும் இந்திய – சீன நல்லுறவுகள்.

(கிழக்காசிய மற்றும் யூரேஷிய விவகாரங்கள் ஆய்வாளர் சனா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள்  இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின், சீன கொள்கை தொடர்ந்து சீராக இருக்கும்.  மாறிவரும் உலக அரசியல் சூழலில், அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் தொடரும் இந்த வேளையில், சீனாவுடனான இந்த சீரான நல்லுறவு, இந்தியாவுக்கு நன்மை பயப்பதாக விளங்கும். 2017 ஆம் வருட டோக்லாம் நிலைப்பாட்டிற்குப் பிறகு, இரு நாடுகளும் தங்களது வேறுபாடுகளைக் களைய முக்கியத்துவம் காட்டி வருகின்றன. இந்த அணுகுமுறையின் வெளிப்பாடாக,  2018 ஆம் வருடம் வூஹான் நகரில் முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது. வூஹான் உச்சி மாநாடு மற்றும் முறைசாரா பேச்சுவார்த்தை, பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்தது. சீன – இந்திய உறவுகளில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது  தலைவர் மசூத் அசாரை , சர்வதேச பயங்கரவாதி என்று  ஐநா பாதுகாப்பு சபை  அறிவித்ததை சீனா ஒப்புக் கொண்டது. தவிர, தற்போது  இருநாட்டு உறவுகளை  “வூஹான் நட்பு “ அணுகுமுறை வழிநடத்திச் செல்கிறது. இரண்டாவது முறை பதவியேற்றதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், சீன அதிபர் ஸீ ஜின்பிங்க் அவர்களுடன், கிர்கிஸ்தான் நாட்டில், பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  உச்சிமாநாட்டிற்கு இடையே, முதல் இரு தரப்பு சந்திப்பை மேற்கொண்டார். இரு தலைவர்களும் மீண்டும் இந்த மாதம், 28-29 ஆம் தேதிகளில், ஜி 20 ஒசாகா உச்சி மாநாட்டின் போது சந்திப்பார்கள். பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் பிரேசில், ரஷ்யா ,இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அமைப்பான  பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போதும், இந்த வருடம் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் பதினான்காவது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டின் போதும் இரு தலைவர்களும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

இந்த உத்வேகத்தை தொடர்ந்து, இரு தலைவர்களும் முறைசாரா சந்திப்பை மீண்டும் மேற்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். இரண்டாவது முறை சாரா சந்திப்பு வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வாரணாசியில் நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு  உறவுகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோதி மற்றும் அதிபர் ஸீ ஜின்பிங் ஆகியோருக்கிடையே நிலவும் தனிப்பட்ட நட்புறவால், இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டாளித்துவம் விரிவடையும். உறவுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், வேறுபாடுகள் அனைத்தும், முற்றிலும் களையப்படவில்லை என்பதே உண்மை. 2019 ஆம் வருட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், சீனாவின் சாலை மற்றும் வளையம் முன்முயற்சிக்கு, இந்தியா இரண்டாவது முறையாக அங்கீகாரம் அளிக்கவில்லை. உண்மையில், இந்தியா மட்டும்தான் இரண்டு முறை சாலை மற்றும் வளையம் மன்றத்தைப் புறக்கணித்துள்ளது. சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதும்,  சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்  திட்டமும், இந்தியாவுக்கு முக்கிய எரிச்சலூட்டுபவையாக உள்ளன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள்  மற்றும் சிறப்புப் பிரதிநிதி அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகும், பொது எல்லை மீதான வேறுபாடுகள் தொடர்கின்றன. அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு சீனா இன்னும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், வேறுபாடுகள், பூசல்களாக மாறிவிடக் கூடாது என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவின் மீதான இந்தியாவின் அணுகுமுறை  நேர்மறையாகவே இருந்த போதிலும், சில தொடர் பிரச்சினைகளில், இந்தியா, தனது சொந்தக் கருத்துணர்வுகளை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது. தொடர் உயர் அளவிலான சந்திப்புகள், வேறுபாடுகளை பெரிய பிரச்சனையாக மாற்றாமல் தடுத்து வருகின்றன. பரஸ்பர நலனில் இருநாடுகளும் அக்கறை கொண்டுள்ளன. பரந்த நோக்கில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, தங்கள் சொந்த நலனை மையமாகக் கொண்டுள்ளது.  எஸ்சிஓ கட்டமைப்பின் கீழ் ,பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும். உலகளவில் சீனாவின் ஈடுபாட்டிற்கு அமெரிக்கா பெரும் தடைக்கல்லாக விளங்குகிறது. அமெரிக்கா – சீனா வர்த்தக போர் மற்றும்  சீனாவின் பி ஆர் ஐ திட்டத்தின் மீதுள்ள ஐயப்பாடுகள் ஆகியவற்றுக்கிடையே, அனைத்து நாடுகளுடனும் சுமுகமான உறவுகளைப் பராமரிக்க சீனா முயன்று வருகின்றது. இந்தியாவின் பங்கேற்பு இல்லாமல், சீனாவின் பிஆர்ஐ முன்முயற்சித் திட்டம்,  ஆசியா முழுவதற்குமான முன்முயற்சியாக விரிவடைய முடியாது.

பிரதமர் திரு  நரேந்திர மோதியும், அதிபர் ஸீ ஜின்பிங்கும் வாரணாசியில் மீண்டும் முறைசாரா சந்திப்பு நடத்திய பிறகு, இருதரப்பு உறவுகள் மேல் நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய, சீன எல்லைப் பிரச்சனையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல, அதிகாரிகளுக்கு இருதலைவர்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும். சீனா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, 2018 – 19 ஆம் வருடத்தில் 5337 கோடி டாலர் என்ற, சீனாவிற்கு மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. குவாதார் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புக்களில் சீனா உதவி வருவது, இந்தியாவுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. எனவே, பேச்சுவார்த்தைகளில் இந்த விவகாரம் இம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, பிஆர்ஐ, சீனா – அமெரிக்கா வர்த்தக வேறுபாடுகள் மற்றும் இதர பிராந்திய பிரச்சனைகள்  பேச்சுவார்த்தையில் இடம்பெறும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜீய உறவுகள், 2020 ஆம் ஆண்டில் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யவுள்ளன. இந்நிலையில், இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான தனிப்பட்ட நட்பு, இருதரப்பு உறவுகளை வழிநடத்திச் செல்லும். இது, முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், உறவுகளை முன்னெடுத்துச் செல்லவும் மிகவும் உதவும்.