பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான குரல் ஒடுக்கம்.

(பாகிஸ்தான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

பாகிஸ்தான் தற்போது அரசியல் கொந்தளிப்பை சந்தித்து வருகிறது.  பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாஃப் (PTI) கட்சியின் தலைமையிலான அரசாங்கம், அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை அடக்க முற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சித் தலைவர் அம்சா ஷபாஸ் ஆகியோரைக் கைது செய்ததன் மூலமும், பஷ்டூன் டஹாஃபுஸ்  இயக்கம் (PTM) போன்ற குழுக்களை ஒடுக்கியதன் மூலமும், செயலுத்தி ரீதியில், அரசுக்கு எதிரான குரல் நசுக்கப்பட்டு வருகிறது.  தன்னிச்சையாக நாட்டைவிட்டு வெளியேறிய பாகிஸ்தான் அரசியல்வாதியும், எம் க்யூ எம் எனப்படும் முத்தாஹிதா  குவாமி இயக்கத்தின் தலைவருமான அல்டாப் உசைன் அவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கைது செய்ததன் பின்னணியில், பாகிஸ்தான் அரசின் கை உள்ளது போல் தோன்றுகிறது. விமரிசனங்கள் எங்கிருந்து வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆணையின் படி, அரசு செயல்படுகின்றது போல் தெரிகிறது. இருப்பினும், எதிர்க் கட்சியினரையும் அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவது எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெறும் இந்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர்களை  ஊழல் குற்றச்சாட்டின் கீழ், நேப் (NAB) எனப்படும் தேசிய பொறுப்புடைமைத் துறைமூலமாகக்  கைது செய்திருப்பது, செயலுத்தி ரீதியாக, எதிர்க் கட்சியினரை திசைதிருப்பி, அரசின் நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட யுக்தியாகத் தெரிகிறது. நேப் தற்பொழுது, முன்னாள் பிரதமர் ஷஹீத் அப்பாசி மற்றும் முன்னாள் நீர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் குவாஜா முஹம்மத் ஆசிப் ஆகியோரைக் கூர்ந்து கவனித்து வருகிறது. இவ்விருவரும் பி எம் எல் – என்  கட்சியில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்கள். பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியும், பி எம் எல் – என்  கட்சியின் மரியாம் நவாஸ் ஷெரீஃப்ஃபும் இரண்டு முறை சந்தித்து, நாட்டின் நடப்புக்கள் குறித்துப் பேசியுள்ளனர். இருவரும் இணைந்து, அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு எதிரானது என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின்படி தயாரிக்கப்பட்ட ஆவணம் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேப், இந்த இருகட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராக விசாரணையும் கைது நடவடிக்கைகளும் மேற்கொண்டுவரும் வேளையில், இந்த சந்திப்பு ஏற்பட்டுள்ளது.  அரசியல் ஆதாயத்துக்காக ஏற்பட்ட சந்திப்பு இது என, இவ்விரு தலைவர்களின் சந்திப்பை பி டி ஐ கட்சி சாடியுள்ளது. ஆனாலும், இந்த இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முடுக்கி விட்டால், ஏற்கனவே பிரச்சனைகளை சந்தித்துவரும் இன்ரான்கான் அரசுக்கு அது மேலும் தலைவலியை உண்டாக்கக்கூடும். இந்தக் கைது  நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கத்துடன், ஊழல் என்ற கண் துடைப்பைக் காரணமாகக் காட்டி, நடந்தேறியுள்ளது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடக்கு வஸிரிஸ்தானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, பிடிஎம் இயக்கத்தின் இரு தலைவர்கள் கைது  மற்றும் தொண்டர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் பகுதி தற்பொழுது பாகிஸ்தான் ராணுவத்தின் முற்றுகையில் உள்ளது. உள்ளூர் மக்கள் போர்க் கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர் என்றும், துப்பாக்கி ஏந்தியவர்களே அந்த நகரத்தில் வலம் வருகின்றனர்  என்றும்  பிடிஎம் இயக்கத்தின் தலைவர் மன்சூர் பஸ்தீன், சமூக ஊடகம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாடங்களில் உயிர்நீத்த தொண்டர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அத்தொகையைப் பெற, உயிரிழந்தோரின் குடும்பங்கள், உயிரிழப்புக்குக் காரணமாக, பாக் ராணுவத்தை சுட்டிக்காட்டாமல், பிடிஎம் இயக்கத்தையே குற்றம் சாட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாகவும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிடிஎம் இயக்கத்தின் பெண் தலைவரான குலலாய் இஸ்மாயில் அவர்கள், சமீபத்தில், நாட்டிற்கு எதிராகப் பேசியதாக குற்றம்  சாட்டப்பட்டு, பெஷாவர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் குலலாய் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் குலலாய் இஸ்மாயில் அவர்களது பெயர், வேறொரு குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பஷ்டூன் படுகொலையை மறைக்கவும், மனித உரிமை இயக்கத்தை ஒடுக்கவும், இதுபோன்ற அப்பட்டமான மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

ககன் அப்பாசி மீதான விசாரணையை  நேப்  துரிதப்படுத்தியுள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பி டி எம் கட்சியின் தலைவர்களுக்கு, அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் வெளிப்புற முகவர்கள் மூலமாக நிதி கிடைக்கின்றது என்று நிரூபிக்க நேப்  முயன்று வருகின்றது. இந்த சூழலின் பின்னணியில், எதிர்க்கட்சி தலைவர்கள்  மர்யாம் நாவாஸ் ஷெரீஃப் மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் ஒன்று சேர்ந்து ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். அதை ஜனநாயகத்தின் சாசனம் என்று குறிப்பிடுகின்றனர். இம்ரான் கான் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வேளையில், இந்த சாசனம், நீண்டகால பாகிஸ்தான் அரசியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.