பாரசீக வளைகுடா பகுதிகளில் ராணுவம் குவிப்பு.

(மேற்கு ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முஹம்மத் முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன். )

ஓமன் வளைகுடா பகுதியில், சென்ற வாரம், கச்சா எண்ணெய் ஏந்திய இரண்டு டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா பகுதிக்குப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, அதிகப்படியாக ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அறிவித்தது. ஜேசிபிஓஏ எனப்படும் கூட்டு விரிவான செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் விலகிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமலாக்கிய அமெரிக்கா, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கான விதிவிலக்குகளையும் கடந்த மாதக் கடைசியில் ரத்து செய்தது. மேலும் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் முடிவு செய்துள்ளார். தடை செய்யப்பட்ட ஈரான் தொழிற்சாலைகளுடன் தொழில் புரியும் நிறுவனங்கள் மீதும் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மீதும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக, ஈரானும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.  தடைகளால் ஈரான் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க ஆவன செய்யுமாறு, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட, ஜேசிபிஓஏ வில் கையெழுத்திட்டுள்ள பிறநாடுகளை ஈரான் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்யாவிடில், அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இது, ஆர்லிங்டன், பேட்ரியட் போன்ற ஏவுகணைத் தொகுப்புக்களையும், அதிகப்படியாக 1,500 துருப்புகளையும் அமெரிக்கா வளைகுடா பகுதிகளுக்கு அனுப்பி வைக்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. அதிகப்படியான துருப்புக்கள், பேட்ரியாட் பேட்டரி மற்றும் ஏவுகணைகள், கண்காணிப்பு விமானம் போன்றவற்றைக் குவிப்பதால், அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும்.

ஓமன் வளைகுடாவில் நடத்தப்பட்ட டேங்கர் தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. ஈரான்தான் இந்தக் குற்றச் செயலைப் புரிந்தது என்று, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் குற்றம் சாட்டுகின்றன. மேலும், மே மாதம் ஃபுஜாரியா கடற்கரையில் நான்கு எண்ணெய் ஏந்திய டேங்கர் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈராந்தான் காரணம் என, இந்த இரு நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன. ஏமனில் நெடிய பூசல்களில் ஈடுபட்டுவரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஹௌதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து தாக்குதல்களை சந்தித்து வருகிறது.

நடப்பாண்டு மே மாதம், சவுதி அராம்கோ எண்ணெய்க் குழாய்கள் மீது, ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.  சென்ற வாரம், தெற்கு நஜ்ரான் மாகாணத்தில் உள்ள ஆபா விமான தளத்தை, ஹவுதி ஏவுகணை தாக்கியது இதில் 26 பேர் காயம் அடைந்தனர். சவுதி அரேபியாவில் தாக்குதல்களை நடத்த,  ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான், ஆயுதம் அளித்து ஊக்குவிக்கிறது என, சவூதி அரேபியா குற்றம் சாட்டியது. இந்த சம்பவங்களின் பின்னணியில், அதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா எடுத்த முடிவைப் பார்க்க வேண்டும். ஈரானின் விரோதமான நடத்தையின் காரணமாகவே அதிகப்படியான துருப்புகளை அனுப்புவது என்று அமெரிக்கா முடிவு  செய்ததாக, ராணுவத்தின் தற்காலிக செயலாளர் பேட்ரிக் ஷனாகன் கூறியுள்ளார். ஈரானுடனான மோதலை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், அமெரிக்க ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதியும், தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது  என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே வளர்ந்து வரும் பதற்றங்களுக்கு நடுவில், இத்தகு குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மற்ற சர்வதேச சக்திகளான ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், பதட்டங்கள் குறைந்துவிடும் என்று நம்பினாலும், இதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கத் தவறிவிட்டன. பதட்டத்தைக் குறைப்பதற்கான முன் முயற்சியாக, இந்த மாதம் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அவர்கள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு, சொல்லாட்சிகளைத் தவிர்த்து விட்டு, ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கும்படி அந்நாட்டைக் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், அதனை மீறிய எதிர்மறை அணுகுமுறையை ஈரான் மேற்கொண்டுள்ளது. எந்த ஒரு ராணுவ அச்சுறுத்தலுக்கும் தலைவணங்க ஈரான் மறுத்துவிட்டது.  எந்த ஒரு இராணுவ நடவடிக்கையையும் சொந்தமாகவே சமாளிக்கும் திறன் மற்றும் உரிமை தங்களுக்கு உண்டு என ஈரான் வலியுறுத்துகிறது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா மேற்கொண்ட செயல்களை, ரஷ்யாவும், சீனாவும் சாடியுள்ளன. இந்த சச்சரவில் ஈரான் தனித்து விடப்படவில்லை என்பதையும், இது மேலும் தீவிரமாக்கப்பட்டால், அது விரிவான பிராந்திய அளவிலான மோதலில் முடியும் என்பதையும் இது காட்டுகிறது. இதற்கிடையே, ஆளில்லா அமெரிக்க விமானம் ஒன்றை ஈரான் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செயல் மிகப் பெரும் தவறு என்றும், இதனால் இறுக்கம் மேலும் உயரும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொருத்தவரை, பாரசீக வளைகுடாவில் வளர்ந்து வரும் பதட்டம் ஒரு கவலையளிக்கும் விஷயமாக விளங்குகிறது. அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்படுவது, இந்திய நலனுக்கு, முக்கியமாக, எரியாற்றல் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் வசிக்கும் 85 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து வளைகுடா நாடுகளுடனும் இந்தியா வலுவான செயலுத்தி, அரசியல் மற்றும் தொழில் சார்ந்த உறவுகளைக் கொண்டுள்ளது. ஈரானுடனும், சவுதி அரேபியாவுடனும் மிகச்சிறந்த உறவுகளை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளும், தங்கள் நாட்டுப் பிரதிநிதிகளை இந்தியாவிற்கு அனுப்பி இருந்தது இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மோதல்களைத் தவிர்த்து அமைதிக்கு உகந்த சூழலை ஏற்படுத்த, அனைத்து பங்குதாரர்களும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வர் என, இந்தியா நம்புகிறது