சமநிலையில் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள்.

(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

நரேந்திர மோதி அவர்கள், இரண்டாம் முறையாக, பிரதமராகப்  பதவியேற்ற சில நாட்களிலேயே, அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு இதுகாறும் அளித்த வந்த, ஜிஎஸ்பி எனப்படும் பொது விருப்ப அமைப்பு வர்த்தக சலுகைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. தவிர, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்குக் கட்டணங்களை உயர்த்துவது என்ற முடிவையும் எடுத்துள்ளது. இது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இருப்பினும், செயலுத்திக் கூட்டாளித்துவத்தைப் பொருத்தவரை, இருதரப்பும் ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டுள்ளன. ஜப்பான் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒசாகா ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ அவர்கள், இம்மாதம் 25 ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பிறகு, அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்படும் முதல் உயர் அளவிலான சந்திப்பாகும் இது. இப்பயணத்தின் போது அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் பிற முக்கிய அரசுப் பிரமுகர்களையும் அவர் சந்திப்பார். இந்திய-அமெரிக்க செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கு, மேலும் வலு சேர்க்க, பாம்பியோ அவர்களின் பயணம், இருதரப்பிற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில், பரஸ்பர நலன்கள் குறித்து, உச்சமட்ட ஈடுபாட்டைத் தொடரவும் இப்பயணம் உதவும்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவரது பதவி நியமனத்திற்கு வாழ்த்துத் தெரிவித்ததாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை கூறுகிறது. புதிதாக அமைந்துள்ள இந்திய அரசாங்கத்துடன் மிக நெருக்கமாகப் பணிபுரிந்து, தமது செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேலெடுத்துச் செல்ல அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதை வெளியுறவுத் துறை அமைச்சர் கோடிட்டுக் காட்டினார்  என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, அமெரிக்க – இந்திய பொருளாதாரக் கூட்டாளித்துவம்,  சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ பசிபிக் பகுதியைப் பாதுகாப்பதில் இருநாடுகளும் பகிரும் இலக்குகள் ஆகியவை குறித்து, இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

ஒசாகா நகரில் நடைபெறவிருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , ஆகியோருக்கிடையே நடக்கவிருக்கும் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, அமெரிக்க வெளியுறவுத்  துறை அமைச்சர் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். பிரதமர் மோதி அவர்களும், அதிபர் டிரம்ப் அவர்களும் இணைந்து, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ  அபே அவர்களை சந்தித்து, இந்தோ – பசிபிக் செயலுத்தி  குறித்து விவாதிக்க, இந்தியா – அமெரிக்கா – ஜப்பான் முத்தரப்பு அமைப்பை உருவாக்குவது பற்றிப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய – அமெரிக்க இருதரப்பு கூட்டாளித்துவத்தின் அணுகுமுறை, மொத்தத்தில் தொடர்ந்து நேர்மறையாகவே இருக்கிறது என்று இந்தியா கருதுகிறது. கடந்த வருடங்களில் இருதரப்பு வர்த்தகம் 15000 கோடி டாலராக வளர்ந்துள்ளது என்பதை நினைவில் கொண்டு, வர்த்தக உறவுகளில் ஏதாவது நெருக்கடி இருந்தால், அதை இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் திருப்தி அடையும் வகையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். H1B விசா சம்பந்தமாக எந்த ஒரு திட்டத்தையும் அமெரிக்கா, இந்தியாவிற்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் – மோதி இருதரப்பு சந்திப்பின்போது, ஈரான் மீது அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள தடைகள் பற்றி  விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. எரியாற்றல் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகள் பற்றியும் பாம்பியோ  அவர்களின் இந்தியப் பயணத்தின்போது விவாதிக்கப்படலாம்.

இருதரப்பு வெளியுறவு அமைச்சர்களும் எதிர்காலத் திட்டங்களை வகுப்பார்கள். வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் மோதி ஆகியோருக்கிடையே மீண்டும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து, இருநாட்டு அரசுகளும் ஆராய்ந்து வருகின்றன. அதே சமயத்தில் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் வருடாந்திர 2+2 உச்சிமாநாட்டில் ஜெய்சங்கர் அவர்களும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் பங்கு பெறுவர். விரைவில்  அமெரிக்க அதிபரும் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது.
இந்தியாவில் 5G அலைக்கற்றையை அறிமுகப்படுத்துவதில், சீன தொலைபேசி நிறுவனமான ஹுவேய்க்கு உள்ள பங்கு பற்றி, அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. எனினும், பொருளாதார, பாதுகாப்பு அம்சங்களை நன்கு ஆரய்ந்த பின்,பே இது குறித்த முடிவை இந்தியா எடுக்கும்.

தகவல்களை உள்ளூர் நிலையில் வைத்தல், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துள்ள ஆழ்ந்த இருதரப்பு உறவை இருநாடுகளும் புரிந்து கொண்டுள்ளன. தற்காலிக இடையூறுகள், சுமுகமான நல்லுறவை பாதிக்காது என்றும் புரிந்து கொண்டுள்ளனர். மோதி அவர்களின் அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற உடனேயே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பது, இந்தியாவுடன் அமெரிக்கா வைத்திருக்கும் உறவுகளின் சிறப்பை வலியுறுத்துகின்றது. 21 ஆம் நூற்றாண்டில், இந்த இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும், நீடித்த உலகளாவிய கூட்டாளிகளாக உள்ளன.