நாடாளுமன்ற நடவடிக்கைகள்

திரு.வி மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராமமூர்த்தி.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகையில் நிலையான, பாதுகாப்பான, வளர்ச்சியை நோக்கிய அனைவரையும் உள்ளடக்கிய அரசை தரும் வகையில் முன்னேறி வருகின்றது என குடியரசு தலைவர் திரு  ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டினார்.  அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கையுடன் என்னும் கொள்கையை நோக்கி இப்பயணம் தொடர்கிறது என்றார் அவர்.  மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய  திரு ராம் நாத் கோவிந்த் மக்களின் துயர் துடைக்கவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் குடியரசு தலைவர்.

முதல் ஐந்தாண்டுகளில் இந்த அரசின் சாதனைகளை பார்த்து மக்கள் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு இந்த அரசிற்கு வெற்றியை தந்துள்ளனர்.  17-வது நாடாளுமன்றத்திற்கு, பாதிக்கும் மேல் முதல் தடவை உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் மகளிரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

மளிருக்கு அதிக அதிகாரம் அளிப்பது கிராமப்புறங்களை வலிமைப்படுத்துவது, விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பது அவர்களின் வருமானத்தை 2022-ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவது சிறு வணிகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என அனைத்து துறைகளிலும் இந்த அரசு செயல்திட்டங்களை நிறைவேற்ற உள்ளது.  ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கொள்கை குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க வேண்டும் எனினும், முத்தலாக் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்றும் குடியரசு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  எதிர்கட்சிகள் எண்ணிக்கை குறித்து கவலைபட வேண்டியதில்லை எனவும், நாட்டின் நலனுக்காக தங்களது மேலான யோசனைகளை அளிக்க வேண்டுமென்றும் பிரதமர் மோதி அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

கடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகிவுள்ளது. இந்திய அரசின் மக்களாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதோடு அதிக எண்ணிக்கையில் மகளிர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என்றார் பிரதமர்.

முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகளிர் உறுப்பினர்களும் தொடர்ந்து நம்பிக்கையுடனும், உறுதியுடனும் நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார் பிரதமர்.  தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் வீரேந்திர குமார்  அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் பதவியேற்பு உறுதிமொழியை பெறச் செய்தார். பிரதமர் மோதி முதன் முதலாக பதவியேற்று கொண்டார்.

கடந்த புதன்கிழமையன்று மக்களவை ஒருமனதாக ஓம் பிர்லா-வை மக்களவை தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜஸ்தானில், கோட்டா மக்களவை தொகுதியிலிருந்து இரண்டாவது முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்  திரு  ஓம் பிர்லா.    திருஓம் பிர்லாவின் பெயர் மக்களவை தலைவர் பதவிக்கு பிரதமரால் முன் மொழியப்பட்டு, திரு அமித் ஷா, திரு ராஜ்நாத் சிங், திரு நிதின் கட்காரி ஆகியோரால் வழிமொழியப்பட்டது.

குஜராத், உத்தராகண்ட் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஓம் பிர்லா அவர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து பிரதமர் பாராட்டி பேசினார். ஓம் பிர்லா தனது ஏற்புரையில் கட்சி பாகுபாடின்றி தான் பணியாற்ற உள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஓம் பிர்லா தனது பதவியை ஏற்றபின் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும், மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.