எஃப்ஏடிஏஃப் இடம் தொடர்ந்து அவமானப்படும் பாகிஸ்தான்.

(இட்சா தெற்காசிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

சென்ற வாரம், அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில், எஃப் ஏடிஏஃப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முழுஅமர்வுக் கூட்டம் ஆறு நாட்களுக்கு நடைபெற்றது. இதில் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான், வரும் அக்டோபர் மாதத்திற்குள் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எஃப்ஏடிஏஃப் இன் சாம்பல் பட்டியலிலிருந்து கருப்புப் பட்டியலுக்கு பின்னோக்கித் தள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

பாகிஸ்தான், எஃப்ஏடிஏஃப் மற்றும் ஏபிஜி எனப்படும் ஆசிய-பசிபிக் குழு ஆகியவற்றுடன் இணைந்து, பண மோசடியைக் கட்டுப்படுத்துவதிலும், பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதியை கட்டுப்படுத்திலும் போதிய கவனம் செலுத்தி, அதற்கான செயலுத்தித் திட்டங்களை வலுப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து, ஓராண்டுகாலம் முடிவடைந்துள்ளது.  இருப்பினும், இவ்விஷயத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளன. ஒப்புக்கு சில நடவடிக்கைகளை எடுத்ததாகக் காட்டிக் கொண்டதே தவிர, தனது மண்ணிலிருந்து பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட இயலாத வகையில் முடக்க, எந்த ஒரு கணிசமான நடவடிக்கையையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை.

எஃப்ஏடிஏஃப் தனது 30 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடியுள்ளது.  பண மோசடிக்கு எதிராக சர்வதேச செயல்திட்டம், பயங்கரவாதப் பரவலுக்கும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதற்கும் எதிரான செயல் திட்டம், குறிப்பிட்ட காலத்தில் இலக்குடன் சரியான முறையில் பணியை முடிப்பது போன்ற செயல்களை செவ்வனே செய்துவரும் அமைப்பாக, எஃப்ஏடிஏஃப் தனது நன்மதிப்பைப் பெருக்கியுள்ளது. புதிய, விரிவான சர்வதேச ஆதரவையும் இந்த அமைப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஃப்ஏடிஏஃப் இன் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விதிமுறைகளை மீறினால், பாகிஸ்தானுக்கு மேலும் இன்னல்கள் விளையும் என்பது உறுதி. குறுகிய வட்டத்திலுள்ள சில நட்புநாடுகளின் உதவியைப் பெறுவதும் பாகிஸ்தானுக்குப் பெரும்பாடாகி விடும். பண மோசடியைத் தடுத்தல், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுத்தல் போன்ற முக்கிய செயல்களில் பாகிஸ்தான் செயலற்று விளங்குவதால், உலகெங்கும் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அந்த அத்துமீறிய பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த எஃப்ஏடிஏஃப், இதுபோன்ற கொலைத் தாக்குதல்கள், காயப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற மாபாதகச் செயல்களை நிறைவேற்ற, நிதி மற்றும் பிற உதவிகள், பயங்கரவாத ஆதரவுக் குழுக்களிடையே புழங்காமல் சாத்தியமில்லை என்று பட்டவர்த்தனமாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதக் குழுக்கள், நிதி திரட்டுவதிலும், புழங்க விடுவதிலும், சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, புது யுக்திகளைக் கையாண்டு வரும் நிலையில், அவற்றை ஒடுக்குவதில் சில பிராந்தியங்கள் சவால்களை சந்திக்கின்றன என்று, பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடாமல் எஃப்ஏடிஏஃப் மேலும் தெரிவித்துள்ளது.

தனது 2019, ஜூன் மாத, விதிமுறை இணக்க அறிக்கையில், பயங்கரவாத நிதியளிப்பு விவகாரத்தில், பாகிஸ்தானின் செயலுத்தி ரீதியிலான செயல்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாக, எஃப்ஏடிஏஃப் தெரிவித்துள்ளது. இவ்விஷயத்தில் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், சர்வதேச பயங்கரவாத நிதியளிப்பு விஷயத்தில் சரியான புரிதலை பாகிஸ்தான் வெளிப்படுத்தவில்லை என்றும் எஃப்ஏடிஏஃப்  குற்றம் சாட்டியுள்ளது.

 எஃப்ஏடிஏஃப் உடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, ஜனவரி மற்றும் மே, 2019 காலக்கெடுவுக்குள், தனது பத்து அம்ச செயல்திட்டத்தை நிறைவேற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது குறித்து, எஃப்ஏடிஏஃப் கவலை கொண்டுள்ளது. தாமாகவே முன்வந்து நிர்ணயித்த அக்டோபர் மாதக் காலக்கெடுவுக்குள், பாகிஸ்தான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிவரும் என்று எஃப்ஏடிஏஃப் எச்சரித்துள்ளது.

இருப்பினும், தன் மக்களையும், உலகையும் ஏமாற்றும் விதத்தில், தவறான செய்தியை பாகிஸ்தான் அரசு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. பண மோசடிக்கும், பயங்கரவாதத்திற்கு  நிதியளிக்கப்படுவதற்கும் எதிராக, தமது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, எஃப்ஏடிஏஃப், பாகிஸ்தான் அரசைத் தட்டிக் கொடுத்தது என்றும், மேலும் நடவடிக்கைகளை எடுக்க ஊக்கப்படுத்தியதாகவும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

எஃப்ஏடிஏஃப் க்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தனது மண்ணிலிருந்து வெளிப்படும் பயங்கரவாதத்தையும், அதற்கான நிதியுதவிகளையும் ஒடுக்க, நம்பகமான, பரிசீலிக்கத்தகுந்த, நிரந்தரமான, நீடித்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

மிகவும் மோசமான பொருளாதாரப் பிரச்சனைகளை தற்போது சந்தித்து வரும் பாகிஸ்தான், எஃப்ஏடிஏஃப் இல் உறுப்பினராக உள்ள, தனது பாரம்பரிய நட்பு நாடுகளின் உதவியுடன், எஃப்ஏடிஏஃப் இன் அனுதாபத்தை சம்பாதித்து, மேலும் மூன்று மாதகால அவகாசத்திற்கு முயற்சி செய்திருக்கக் கூடும்.  தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி அளிக்கப்படுவதற்கும், பணமோசடிக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர, பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை.