மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – இந்தியா நிராகரிப்பு.

(சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

இந்தியாவின் மத சுதந்திர வரலாற்றை  அமெரிக்கா மீண்டும் ஒருமுறை போலித்தனமாக விமர்சித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரத்தின் மீதான, அமெரிக்க அரசாங்கத்தின் வருடாந்திர அறிக்கையில், மற்ற நாடுகளின் மத சுதந்திர நற்சான்றுகள் மீது, தார்மீகத் தீர்ப்பு என்ற வெற்றுக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அந்த அறிக்கையில், தீவிரவாதக் குழுக்கள் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்கும் வன்முறை சம்பவங்கள்  2018 ஆம் வருடம் முழுவதும் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிராகரித்த இந்தியா, தனது குடி மக்களின் நிலைமை பற்றிக்கூற, அமெரிக்காவுக்கு எந்தத் தலையீட்டுரிமையும் கிடையாது  என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற நற்சான்றுகள் கொண்ட இந்தியா,  மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், பன்முகத்தன்மை வாய்ந்த சமூகமாகவும் விளங்கி, சகிப்புத்தன்மையிலும், அனைவரையும் உள்ளடக்குவதிலும் நீண்டகால உறுதிப்பாட்டுடன் மிளிர்வதில் பெருமையடைவதாக மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியா, வலுவான ஜனநாயகம் மற்றும் நீதித்துறை அமைப்பைக் கொண்ட திறந்த சமூக நாடு  என்ற தமது மாற்றுக் கருத்தை மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர், டென்ஸின் டோர்ஜீ அவர்கள் பதிவு செய்துள்ளார். அந்த ஆணையமானது, மத சுதந்திர அத்துமீறல் நடப்பதாக, பிற நாடுகளைக் கடுமையாக சாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளூரில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது போல் தோன்றுகிறது. கடந்த ஆண்டு, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற, முதலாவது, மத சுதந்திர  மேம்பாட்டுக்கான அமைச்சர்கள் கூட்டத்தில்,   மத சுதந்திரத்திற்கு டிரம்ப் நிர்வாகம் முன்னுரிமை அளிப்பதாக, அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் அவர்கள் குறிப்பிட்டது இதற்கு சான்றாக விளங்குகிறது.

மனித உரிமை, மத சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விஷயங்களில் பிறநாடுகளைச் சாடும் அமெரிக்கா, தனக்கு வேண்டப்பட்ட நாடுகளைக் கண்டுகொள்வது கிடையாது என்பதை உலகம் அறியும். இந்த விஷயங்களில், அமெரிக்காவும், அதன் நட்புநாடுகளும் இழைக்கும் தவறுகள் குறித்து மௌனம் சாதிப்பதும், பிடிக்காத நாடுகள் மீது கண்டனம் தெரிவிப்பதும் அமெரிக்காவின் கேலிக்கூத்தாக உள்ளது. சர்வதேச அளவில் ஊடக சுதந்திரத்திற்காக பணி புரியும், லாப நோக்கமில்லாத நிறுவனமான, சுதந்திர இல்லம் என்ற அமைப்பு, இந்தியாவை, அடிக்கடி பத்திரிக்கை சுதந்திரம் இல்லாத நாடுகள் பட்டியலில் வைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை சுதந்திரத்திற்கான அட்டவணையைப் பார்த்தால் சிரிப்புத் தான் வரும். இத்தகைய போலி அறிக்கையை முக்கியமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

மற்ற நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சான்றுகள் மீது தீர்ப்பு வழங்கும் டிரம்ப் நிர்வாகமே, சுதந்திர இல்லத்தின் அறிக்கையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது வேடிக்கை.  டிரம்ப் நிர்வாகத்தில் ஜனநாயகக் கொள்கைகளும் விதிமுறைகளும் மீறப்படுவதாகவும், உண்மையை உரைக்கும் ஊடகங்கள் தாக்கப்பட்டு வருவதாகவும் சுதந்திர இல்லத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், 2009ஆம் வருடம் முதல் இந்தியாவை கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த ஆணையத்தின் அறிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2015, 2016 ஆம் ஆண்டு அறிக்கைகளில் விடுக்கப்பட்ட குற்றச்சாட்டையும் இந்தியா மறுத்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களும் கூட, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, மத சகிப்புத்தன்மை மீதான இந்தியாவின் சான்றுகளுக்கு சவால் விடுத்தார்.

மத சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளே தங்கள் நாட்டில் கிடையாது என்று எந்த நாடும் கூற இயலாது. ஆனால் வலுவான ஜனநாயக நாடான இந்தியாவில், மனித உரிமை ஆணையம், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை போன்ற வலுவான அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல அமைப்புகள் அமலாக்க அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், விசாரணைக்கு உத்தவிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

மொத்தத்தில், இந்தியாவில் உள்ள மத சுதந்திரத்தை, அமெரிக்கா அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்கிறது. எவ்விதத்திலும் உதவாத இத்தகைய தேவையில்லாத அறிக்கைகள், இந்தியாவின் உள்விவகாரங்களில், அமெரிக்காவின் தலையீடாகவும், அதிகாரம் செலுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர், அரசியலமைப்பு உத்தரவாதத்தைப் பெற்றுள்ளனர். இந்திய அரசியல் அமைப்பு அதைப் பாதுகாக்கின்றது. பல நாடுகள் இது போன்ற உரிமைகளை தங்கள் நாட்டுக் குடிமக்களுக்கு கொடுப்பதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக எவரும் சவால் விட முடியாது என ஒருமுறை, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் சூளுரைத்தார்.