வளர்ச்சி வேகத்தில் கவனம் செலுத்தும் அரசு.

(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஆதித்யா ராஜ் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டுச் செல்ல, புதிய வீரியத்துடன் செயல்படத்  தொடங்கியுள்ளது.

வளர்ச்சி வேகத்தை மேலும் ஊக்கப்படுத்த, விரிவான, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் தனது அரசு உறுதிப்பாட்டுடன் செயல்படவுள்ளதாக,  பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக், ஏற்பாடு செய்திருந்த பொருளாதார மற்றும் வல்லுநர் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு, இந்தியப் பொருளாதாரத்தை போட்டிக்கு சாதகமான வகையில் தயார்ப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி சிறப்பித்துக் கூறினார்.

ஜூலை மாதம் ஐந்தாம் தேதி, புதிய அரசு தனது முதலாவது முழு நீள நிதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், வேளாண்மை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி  போன்ற துறைகளின் வல்லுநர்களுடன் நடத்தப்பட்டுள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றும் நீர் வளம், ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில், புதுமையான கருத்துக்கள் மற்றும் திருப்புமுனைகளைப் பரிந்துரைக்க, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்தது குறிப்பிடத்தக்கது. நீடித்த மற்றும் உயர் வளர்ச்சி வேகத்தில் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவும், வேலைவாய்ப்புக்களைப் பெருக்கவும் பயனுள்ள திட்டங்களை உருவாக்குவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது என்ற பிரம்மாண்டமான, கடினமான சவாலை தனது முதல் ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட  மோதி அரசு, வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், கடுமையாக உழைத்ததாலும், இந்தியப் பொருளாதாரத்தை  உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றுவதில் வெற்றி கண்டது.

தற்போது  மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள மோதி அரசு, பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் உடனடி சவாலை எதிர்கொள்கிறது. வேலை வாய்ப்பின்மைப் பிரச்சனைக்கும், சந்தைப் பொருட்களின் தேவைகளுக்குப் புத்துணர்வு ஊட்டுவதற்கும் அதுவே தீர்வாக அமையும்.

வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த, வளர்ச்சியை ஊக்குவிக்கும் உள்கட்டமைப்புத் துறை போன்ற துறைகளில் முதலீடுகளையும், நுகர்வையும் அதிகப் படுத்தும் திட்டங்கள், வரவிருக்கும் நிதி அறிக்கையில் அறிவிக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பு தென்படுகிறது.

வங்கிகளின் ஆரோக்கியத்தில் புதிய அரசு அதிக கவனம் செலுத்தும். முந்தைய பதவிக் காலத்தில், திவால் நடவடிக்கை மற்றும் திவால் குறியீடு (IBC) உள்பட, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் விளைந்த பலன்கள் ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. இதில் அடைந்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்தி, செயல்முறைகளை வலுவாக்கும் முயற்சியில் புதிய நிதியமைச்சர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தவிர, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும். இந்நிலையில், மந்த நிலையில் காணப்படும் முக்கியத் துறைகளின் வளர்ச்சியைப் புதுப்பிக்க, அரசு புதிய திட்டங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரசாங்கம், இரண்டாவது தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை தொடர்ந்து நடைபெற வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியை மேலும் எளிதாக்க வேண்டும். தொழிற்சாலைகள் கடன் வசதி பெறுவதை எளிதாக்க வேண்டும். இறக்குமதிக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் உருவாக்கித் தந்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

புதுமையான மிகப்பெரிய சீர்திருத்தங்களை இந்த அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும். 1991 ஆம் வருட பொருளாதார சீர்திருத்தத்தில், தனியார் துறைகளைத் திறந்து விட்டதன் மூலம், சந்தையில் பொருட்களுக்கான போட்டி நிலை மேம்பட்டது.

அடுத்த கட்டமாக,  நிலம், தொழிலாளர் மற்றும் முதலீடு போன்ற உற்பத்திக்  காரணிகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தத் துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், இந்தியத் தயாரிப்பு மற்றும் சேவைத் துறை, சர்வதேச அளவில் போட்டியை எதிர் கொள்ளத் தேவையான சக்தியைப் பெறாது என்பதை அரசாங்கம் தற்போது நன்கு உணர்ந்துள்ளது.

நிலச் சந்தை திறக்கப்படாமல் இருந்தால், இந்திய தயாரிப்பாளர்கள் தங்கள் உற்பத்தி அளவை உலக அளவில் ஒப்பிடும் வகையில் உயர்த்த முடியாது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தொழிலாளர் சந்தையில் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிப்பதன் மூலம், அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் உற்பத்தித் துறையை விரிவடையுச் செய்ய முடியும். வேளாண்மை, சந்தை சார்ந்த அரசுக் கொள்கைக்காகக் காத்திருக்கும் மற்றொரு துறையாகும்.

பொருளாதார  சீர்திருத்தங்களை மிகப்பெரும் அளவில் முன்னெடுப்பதன் மூலம்,  பொருளாதார  வளர்ச்சியை அதிகப்படுத்துவதோடு, வேலை வாய்ப்புக்களும் பெருக, எண்ணற்ற வாய்ப்புக்களை உருவாக்க முடியும்.