வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்.

(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோதி அவர்கள், ஏழைகளின் நலன் மற்றும் நவீன கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தமது அரசு முன்னுரிமை அளிக்கும் இரட்டைத் திட்டங்கள் என்பதை உலகுக்குப் பறைசாற்றினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்குழுவில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்துத் தான் அளித்த பதிலில், பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிற்கும் மக்களுக்கும் நலன் பயப்பவை எவை என்பது குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார்.

மத்திய அரசின் தொலைநோக்கு பற்றி சிறப்பித்துப் பேசிய அவர், பொதுமக்களின் நலன் மற்றும் நவீன கட்டமைப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார். வளர்ச்சிப் பாதையிலிருந்து சிறிதளவும் வழுவாமலும், வளர்ச்சித் திட்டங்கள் நீர்த்துப் போகாத வகையிலும் தமது அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவது முக்கியம் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் கட்டமைப்பு நவீனமானதாக விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விவசாயிகள், அமைப்புசாரா துறையின் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் பயனளிக்கும் வகையில், ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் துவக்கப்பட்டன. எனினும், நவீனமயமாக்கலை நோக்கியும் அரசு பயணித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில், பிரசித்தி பெற்ற எய்ம்ஸ் மருத்துவ நிறுவனங்கள், ஆறிலிருந்து இருபதாக உயர்த்தப்படும். தவிர, மாவட்டங்களில் உள்ள 150 மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளாக உயர்த்தப்படும்.

அதேபோல், 7 ஐஐடி, 14 ஐஐஐடி, 1 என்ஐடி, 7 புதிய ஐஐஎம், 4 தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனங்கள் ஆகியவை நாடு முழுவதும் நிறுவப்பட்டு வருகின்றன. நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்காத துறையே இல்லை எனலாம். சுனாமி எச்சரிக்கையை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் படைத்த நாடுகளுள் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. வானிலை முன்னறிவிப்பில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. விண்வெளி வீரர்களைத் தாங்கிய விண்கலங்களை 2022 ஆம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களைத் தாங்கிய விண்கலங்களை ஏவும் திறன்படைத்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, நான்காவது இடத்தை இந்தியா எட்டிப்பிடிக்கும். இந்தியாவுக்கென விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவும் தொலைநோக்குத் திட்டத்தை இஸ்ரோ தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், நவீனமயமாக்கவும் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் பதிலளிக்கையில், நெடுஞ்சாலைகள், நீர்வழிகள், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்து, ஸ்டார்ட் அப், புதுமைப்படைப்பு ஆகியவற்றில் எழுச்சி பெற்ற இந்தியா,  நவீனமயமாக்கலை விரும்புகிறது என்று குறிப்பிடத் தவறவில்லை. நவீன, விரைவான போக்குவரத்து, தற்கால உலகின் அத்தியாவசியமான வசதியாகக் கருதப்படுகிறது. காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, தங்களை மாற்றியமைத்துக் கொள்ளாத நாடுகள், பொருளாதார ரீதியாகத் தோல்வியுற்ற நாடுகளாக மாறுகின்றன.

2024 ஆம் ஆண்டுக்குள், இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுள்ளதாக்க, பிரதமர் விடுத்துள்ள அழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது, 2.8 லட்சம் கோடி டாலர் அளவிலான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியா, உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், உலகின் 6 ஆவது பெரிய பொருளாதார நாடாகவும் விளங்குகிறது. 2024 ஆம் ஆண்டுக்குள், இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுள்ளதாக்க, பொருளாதார வளர்ச்சியை, தற்போதுள்ள 6.7 சதம் என்ற நிலையிலிருந்து, 10 முதல் 11 சதமாக, தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுவரை உயர்த்த வேண்டும். சவால்கள் பல நிறைந்திருந்தாலும், இந்தியா, இந்த இலக்கை எட்டிப்பிடிக்க வல்லது.

இந்திய வரலாற்றில், காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாள், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு போன்ற முக்கிய மைல்கல்களை அதிக வீரியத்துடன் கொண்டாடுமாறு, பிரதமர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவை மக்கள் நனவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

புதிதாக ஆட்சி அமைத்த சில வாரங்களுக்குள்ளாகவே, மக்கள் நலனுக்கான முக்கிய முடிவுகளைத் தமது அரசு எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த முடிவுகள், விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பல பிரிவினருக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கும் என்று அவர் கூறினார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் துவங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நாட்டின் பல பகுதிகள் வறட்சியை சந்தித்துவரும் நிலையில், நீர்சேமிப்பில் அதிக கவனம் செலுத்துமாறு, பிரதமர் மக்களைக் கேட்டுக் கொண்டார். ஜல் ஷக்தி என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்தியதன் மூலம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க, அரசு கொண்டுள்ள உறுதிப்பாடு வெளிப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்க, அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே, இரு அவைகளிலும் பிரதமர் அளித்த பதிலுரையின் சாராம்சமாக விளங்கியது.