இந்திய, அமெரிக்க உறவுகள் – தொடரும் பேச்சுவார்த்தை.

(ஜேஎன்யூ வின் அமெரிக்கக் கல்வி மையத்தின் தலைவர், பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அவர்களின் புதுதில்லிப் பயணமும், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடனான சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே, சில முக்கியத் துறைகளில் நிலவிவரும் இருதரப்பு வேறுபாடுகளைக் களைய, இரு நாட்டுத் தலைவர்களின் நேரடிப் பேச்சுவார்த்தை அவசியமாகிறது.

வர்த்தகம் மற்றும் கட்டணம், ஈரான் மீது உள்ள தடைகள், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அளித்த சலுகைகளை விலக்கிக் கொண்டது, இந்திய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எச்1பி விசா வழங்குவது, வெனிசுவேலா நாட்டுடனான எரியாற்றல் வர்த்தகம், ரஷ்யாவிடமிருந்து ஆயுதக் கொள்முதல்  போன்ற துறைகளில், இரு நாடுகளுக்குமிடையே நிலவும் வேறுபாடுகள், இரு நாட்டு உறவுகளில் அழுத்தத்தை உருவாக்கியுள்ளன.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 உச்சிமாநாடு நடக்க இருக்கிறது. அந்த உச்சிமாநாட்டிற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும்,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் நிமித்தம், பாம்பியோ அவர்களின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. ஜி-20 உச்சிமாநாட்டை ஒட்டி, ஜப்பான், அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே,  ஜேஏஐ எனப்படும் முத்தரப்பு சந்திப்பும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று, மோதி அவர்கள் அடுத்த 5 ஆண்டிற்கு மீண்டும் அரசு அமைத்துள்ளதைத் தொடர்ந்து, டிரம்ப் நிரவாகத்தின் சார்பில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணமாகும் இது.

இரு நாடுகளுக்கிடையே  நிலவும்  வேறுபாடுகளைப் பொருத்தவரை, அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணத்தின் போது, எந்த ஒரு புதிய  ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்பதும், எந்த ஒரு புதிய அறிக்கையும் வெளியிடப்படாது என்பதும் முன்கூட்டியே கோடிட்டுக் காட்டப்பட்டது.

ஈரான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியா நன்கு புரிந்து கொண்டுள்ளது. ஆனால், ஈரான், பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடு என்ற அமெரிக்காவின் பார்வையை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆப்கான் நாட்டுப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. ஆனால், தாலிபான் அமைப்புடன், ட்ரம்ப் நிர்வாகம், அமைதி ஒப்பந்தத்திற்காக, மிகவும் நெருக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா தங்களது துருப்புக்களை விலக்கிக் கொள்ளும் என்றும் திட்டவட்டமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அளித்து வந்த பொது விருப்ப முறைமை சலுகையை  அமெரிக்கா விலக்கி கொண்டதற்கு இந்தியா கேள்வி எழுப்பியது.  அதேசமயம், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மீது இந்தியா அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, அமெரிக்கா தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இந்தியர்களுக்காக வழங்கப்படும் எச்1பி விசா வில் எந்த ஒரு கட்டுப்பாடும் இருக்காது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோட்டிடுக் காட்டினார். ஆனாலும், , முந்தைய கொள்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதை உறுதியாக அவர் தெரிவிக்கவில்லை.  ரஷ்யாவிலிருந்து இந்தியா ஆயுதங்கள் கொள்முதல் செய்வது பற்றியும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றது. தேசிய நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவில் எந்தவொரு சமரசமும் இல்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படாத நிலையிலும், இருதரப்பினரிடமிருந்தும் வேறுபாடுகள் குறித்த முதிர்ச்சி பெற்ற அணுகுமுறை வரவேற்கத் தக்கதாக இருந்தது.

இரு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. சில பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவற்றுக்குத் தீர்வுகாண, பேச்சுவார்த்தைகளைத் தொடர, இரு அமைச்சர்களும் உறுதி பூண்டனர். இரண்டு விஷயங்கள் தெளிவாக ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளன. அதில் ஒன்று, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்பதும், பயங்கரவாதத்துக்கு எதிரான  ஒத்துழைப்பை இரு நாடுகளும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் ஆகும். இரண்டாவது, இந்தோ பசிபிக் பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட, பலநிலைகளிலும் அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டுறவைத் தொடர வேண்டும் என்பதாகும்.

கடந்த 20 வருடங்களாக, இருதரப்பிலிருந்தும் பராமரிக்கப்பட்டு வரும்  இந்திய, அமெரிக்க செயலுத்திக் கூட்டாளித்துவம், குறிப்பிட்ட பிரச்சனைகளில் உள்ள சில  வேறுபாடுகளினால் பாதிக்கப்படாமல் இருந்து வருகின்றது. அமெரிக்காவின் ஈரான் கொள்கை, இந்தியாவின் எரியாற்றல் பாதுகாப்பை நேரடியாகத் தாக்குவதாக உள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க, அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களில், அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு அதிகரித்துள்ளது.

அதேபோல், ரஷ்யாவிடமிருந்து  எஸ் – 400 ரக  ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்தியாவைத் தங்களின் முக்கியப் பாதுகாப்பு கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது. தவிர, அதிநவீன ஆயுதங்களை இந்தியாவிற்கு வழங்குவதில் உள்ள விதிகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிகக் கட்டணம் வசூலிக்கிறது என்று ட்ரம்ப் நிர்வாகம் புகார் அளித்து வருகின்றது. ஆனால், அலுமினியம் மற்றும் எஃகுப் பொருட்களுக்கு அமெரிக்கா கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இதற்கு எதிராக, பாதாம் பருப்பு போன்ற அமெரிக்கப் பொருட்களுக்கான கட்டணத்தை இந்தியா உயர்த்தினாலும், பேச்சுவார்த்தைக்கு  தனது கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு எப்போதும் இடமுண்டு. ஒசாகா நகரில் பிரதமர் மோதி அவர்களும், அதிபர் டிரம்ப் அவர்களும் சந்திக்கும்போது,  இந்தப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உறுதி பூண்டுள்ளதாகத் தெரிகிறது