நாடாளுமன்றத்தில் நடந்தவை சென்ற வாரம்

பத்திரிக்கையாளர் வி. மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

பிரதமர் திரு நரேந்திர மோதி, அரசானது இந்தியாவை வளர்ச்சி பாதையில் புது உயரங்களுக்கு இட்டு செல்ல உள்ளதாகவும்,  ஒரு நாடு- ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூறினார்.    நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.  நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற் உதவுமாறு அவர் எதிர் கட்சிகளை கேட்டுக் கொண்டார்.  இந்தியா தனது முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளத்திற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட்டு விடக்கூடாது என்று அவர் கூறினார்.  நாட்டை எதிர் கொண்டிருக்கும் சவால்களை அரசும், எதிர் கட்சிகளும் இணைந்து செயல்பட்டு சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க அவர் அழைப்பு விடுத்தார்.  ஊழல், விவசாயிகள் பிரச்சனை, வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள் குறித்து பேசிய அவர்,  நாட்டில் ஊழலுக்கு இடமே இருக்காது என்றும்,  தனது அரசானது ஊழலுக்கு எதிரான போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்றும் கூறினார்.  நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னை குறித்து பேசிய அவர்,  ஒவ்வொரு குடும்பத்திற்கும் தண்ணீர் கிட்டுமாறு செய்வோம் என்பதே தனது அரசின் முழக்கமாக இருக்கும் என்று கூறினார்.

மாநிலங்களவையில் விவாதத்திற்கு பதிலளிக்கையில்,  தேர்தல் சீர்திருத்தங்கள் நாட்டிற்கு மிக மிக அவசியம் என்றும்,  புதிய இந்தியாவை வடிவமைப்பது குறித்து உறுப்பினர்களை ஆழ்ந்து சிந்திக்குமாறு பிரதமர்    கேட்டுக்கொண்டார்.  அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வை எளிதாக்குவது என்று அரசு உறுதி பூண்டிருப்பதாக கூறிய பிரதமர், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இந்தியாவை ஐந்து ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

ஒரே சமயத்தில் மாநில சட்ட சபைகளுக்கும், மத்திய அரசுக்கும் தேர்தல் நடத்துவதற்கான யோசனை உட்பட பி.ஜே.பியின் புதிய இந்தியா உருவாக்கம் குறித்த கருத்தை கேலி செய்யும் எதிர்கட்சிகளை திரு மோதி கடுமையாக சாடினார்.  மாநிலங்களவையின் எதிர் கட்சி தலைவர் திரு குலாம் நபி ஆஸாத், தான் பழைய சிறந்த இந்தியாவையே விரும்புவதாக கூறியதற்கு பதிலடியாக,  அரசின் முடிவுகளை கடுமையாக விமர்சிக்கும் பத்திரிக்கையாளர் கூட்டங்களையும்,  தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட கடற்படை கப்பல்கள் இருந்த பழைய இந்தியாவைத்தான் காங்கரஸ் கட்சி விரும்புகிறது என்று பிரதமர் கூறினார்.  மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்பாட்டை ஆதரித்து பேசிய திரு மோதி, வாக்குபதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகங்களை எழுப்பி வருவதற்காக எதிர்கட்சிகளை சாடினார்.

அறக்கட்டளைகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தங்களது அலகுகளை அமைக்க வழிவகுக்கும் சிறப்பு பொருளாதார மண்டல திருத்த மசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  ஆதார் மற்றும் மற்ற சட்டங்கள் திருத்த மசோதா 2019ஐ சட்ட அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் அவையில் வைத்தார்.   இந்த மசோதாவானது விதிமுறைகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்க வழிகோரும், மார்ச் மாதம் வெளியான அவசர சட்டத்திற்கு  பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும் இந்த மசோதாவானது,  குழந்தைகள் 18 வயதை எட்டிய பின்னர் விரல் வழி அடையாள திட்டமான பையோமெட்ரிக் அடையாள திட்டத்திலிருந்து விலக வேண்டுமென்றால் அதற்கு இந்த மசோதாவில் இடமிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு சட்டம் 2004ஐ மேலும் திருத்துவதற்கு அனுமதி கோரும் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2019ஐ உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அவையில் சமர்ப்பித்தார்.  இந்த மசோதாவில் ஜம்மு சர்வதேச எல்லையில் 10 கிலோமீட்டர்களுக்குள் வசிப்போருக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்த வெளியுறவு துறை இணை அமைச்சர் திரு வி. முரளிதரன், புது தில்லி தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து விவாதங்களை எழுப்பி வருவதாகவும்,  பயங்கரவாத அரக்கனை எதிர்கொள்வதற்கு,  இரு தரப்பும், பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகள் உள்பட அனைத்து அரங்குகளிலும் சர்வதேச ஒத்துழைப்பு பெறுவதற்காக தீவிரமாக பாடுபட்டு வருவதாக கூறினார்.  அரசின் தொடர்ந்த கடுமையான முயற்சிகளால்,  தனி நபர்கள் மற்றும் பயங்கரவாத நிறுவனங்களால் பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதம் குறித்து சர்வதேச சமூகம் முன்பை விடவும் கூடுதல் அக்கறை காட்டுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் பயங்கரவாதம்  தனது மண்ணை எந்த ஒரு வகையிலும் உபயோகப்படுத்த அனுமதிக்க கூடாது என்று பல நாடுகள் பாகிஸ்தானை அழைத்து கூறியுள்ளதாக அமைச்சர் கூறினார்.   புல்வாமாவில்  நிகழ்ந்த எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு பின்,  அந்த  கொடிய கோழைத்தனமான செயலை,  ஐ.நா பாதுகாப்பு சபையானது மிகவும் வன்மையாக கண்டித்தது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் குடி நீர் பிரச்னை குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் பெரும் கவலை தெரிவித்தனர்.  இது குறித்த சிறியதொரு விவாதத்திற்கு பதிலளிக்கையில்,  நீர் வளதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெக்காவத்,  நிலத்தடி நீரிருப்பை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.