ஒசாகாவில் ஜி-20 உச்சிமாநாடு.

(கிழக்கு, தென் கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

ஒசாகா நகரில், ஜி-20 உச்சிமாநாட்டை ஜப்பான் தலைமையேற்று நடத்தியது. உலகப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் பங்களிக்கும் ஜி-20 நாடுகள் குழு, உலகப் பொருளாதார நிர்வாகத்தை அலசும் முக்கிய மன்றமாகத் திகழ்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வண்ணம், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக நெருக்கடிகள் அதிகரித்துவரும் சூழலில், ஒசாகா உச்சிமாநாட்டில், பல்நிலை வர்த்தக அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டுவது, முன்னுரிமை அளிக்கப்பட்ட விஷயமாக விளங்கியது. வளர்ந்த, வளரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

சுதந்திரமான, நியாயமான, வேற்றுமை பாராட்டாத, வெளிப்படையான, நம்பகமான, யூகிக்கக்கூடிய, ஸ்திரமான வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வலியுறுத்தும் ஒசாகா பிரகடனம், உச்சிமாநாட்டின் முடிவில் அங்கீகரிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரும் பல்நிலை வர்த்தக அமைப்பான உலக வர்த்தக அமைப்பு சீரமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்ப்பாயக் குழுவுக்குப் புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வதை அமெரிக்கா தொடர்ந்து தடுத்து வருவதால் வலுவிழந்து வரும் தீர்ப்பாய அமைப்பின் பணிகள் தொடர்பாக, உறுப்பு நாடுகள் தீர்மானித்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒசாகா பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

விவாதத்துக்குட்பட்ட  பருவநிலை மாற்றங்கள் குறித்து, உச்சிமாநாட்டில் அலசப்பட்டது. பாரீஸ் ஒப்பந்தம் குறித்துப் பேசுவதை அமெரிக்கா தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. எனினும், ஃபிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட பல தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதனை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று ஒசாகா பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது. பாரீஸ் ஒப்பந்தம், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும், வரி செலுத்துவோருக்கும் பாதகமாக உள்ளதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்தது. ஒசாகா உச்சிமாநாட்டில் தரமான உள்கட்டமைப்பு முதலீடுகள் ஜி-20 நாடுகளின் பொதுவான செயலுத்திப் பாதையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. நீடித்த தன்மையுடன் கூடிய பொது நிதி. பொருளாதார செயல் திறனை உயர்த்துதல், சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலன்களை உள்ளடக்குதல், பெண்களுக்குப் பொருளாதார அதிகாரமளித்தல், இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளத் தகுந்த கட்டமைப்பை வலுவாக்குதல், உள்கட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஒசாகா உச்சிமாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பண மோசடி, பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை முறியடிக்கும் வகையில், நிதி செயல்பாட்டு செயற்குழுவின் தரக் கட்டுப்பாடுகளை விரைவில் அமலாக்க, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒசாகா பிரகடனம் வலியுறுத்தியுள்ளது. ஜி-20 மற்றும் சர்வதேச உறுதிப்பாடுகளுக்கிணங்க, ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதோ, அல்லது ஊழல் பணத்திற்குப் பாதுகாப்பளிப்பதோ மறுக்கப்படும் வகையில் உறுப்புநாடுகளுக்கிடையே நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பைத் தொடர்வது என்று ஜி-20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

உலகப் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விஷயங்களின் நெளிவுசுளிவுகளைத் திறமையுடன் விவாதிக்கத் தகுந்த முக்கிய அமைப்பாக ஜி-20 விளங்குகிறது. ஜி-20 உச்சிமாநாட்டிற்கிடையே, உலகத் தலைவர்கள் தங்களுக்குள் முறைசாரா இருதரப்பு, முத்தரப்பு சந்திப்பு நிகழ்த்த வாய்ப்பு உருவாயிற்று. தங்களுக்கிடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போரில் சமரசத் தீர்வுகாணும் பொருட்டு, அமெரிக்காவும் சீனாவும் முக்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டன. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும் முக்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவற்றில் இந்தியாவுக்கான செயலுத்தி, பொருளாதார நலன்களை முன்னெடுத்துச் சென்றார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தோ பசிபிக் பகுதிக்கான ஜப்பான் – அமெரிக்கா – இந்தியா முத்தரப்பு செயலுத்திக் கூட்டுறவு குறித்து விவாதிக்கப்பட்டது. ரஷ்யா – இந்தியா – சீனா முத்தரப்பு சந்திப்பில், பல்துருவ உலகம் சந்திக்கும் சவால்கள் அலசப்பட்டன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான சந்திப்பில், பல்நிலைத்தன்மை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான சர்வதேசக் கூட்டமைப்பில் இணையும்படி, ஜி-20 நாட்டுத் தலைவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அழைப்பு விடுத்தார். அடுத்த ஜி-20 உச்சிமாநாட்டை, 2022 ஆம் ஆண்டில் இந்தியா நடத்தவுள்ளது.

___________