ஒசாகாவில் இந்திய – அமெரிக்கப் பேச்சுவார்த்தைகள்.

(அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

ஒசாகாவில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஆஸ்திரேலியா, பிரேசில், ஜெர்மனி, இந்தோனேஷியா, ஜப்பான், தென் கொரியா, சௌதி அரேபியா, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையிலும், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இடையிலும் இரண்டு முத்தரப்பு சந்திப்புகளும் நடைபெற்றன. மேலும், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான ஒரு முறைசாரா சந்திப்பும் நடந்தது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் அனைத்து சந்திப்புக்களும் மூன்று நாட்களில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஜி-20 உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம் உலகப் பொருளாதாரத்தைப் பற்றி விவாதிப்பதாக இருந்த போதிலும், வணிகமும் புவிசார் அரசியலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால், இவற்றைப் பற்றிய பேச்சுக்களும் இடம்பெற்றன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் வணிகம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உள்ளது. நரேந்திர மோதி அவர்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் இடையில் நடந்த இருதரப்பு சந்திப்பில், வணிகம் தொடர்பான விவகாரங்கள் பற்றி பேசப்பட்டது.

சீனா அமெரிக்கா இடையில் நடந்துகொண்டிருக்கும் வணிகப் போரில், ஒரு சமாதான நிலைப்பாடு ஏற்பட்டது, ஜி-20 உச்சிமாநாட்டின் ஆக்கப்பூர்வமான முக்கிய விளைவுகளில் ஒன்றாக இருந்தது. அமெரிக்காவுடன், வரி வகைகளில் தனக்குள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்க இந்தியா முயற்சித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சீனா அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகளை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை இந்தியா குறைக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இந்தியப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பொது விருப்ப முறைமை சலுகையை அமெரிக்கா திரும்பப் பெற்றதையடுத்து, இந்தியா, அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாதாம் பருப்பு, பிற பருப்பு வகைகள், வாதுமைக் கொட்டை உட்பட, 28 பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்தது. எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்பட்டதையடுத்து, உலக வர்த்தக அமைப்பின் சச்சரவுத் தீர்வு முறைமை முன், இந்தியா, அமெரிக்காவைக்  கொண்டு வந்து நிறுத்தியது. ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பேம்பியோ அவர்கள் இந்தியா வந்தபோதும் இந்த விஷயம் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரசனைகளுக்குத் தீர்வுகாண, இந்திய, அமெரிக்க வர்த்தக அமைச்சர்கள் விரைவில் சந்தித்துப் பேசுவது  என, இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன.

வர்த்தகத்தைத் தவிர, 5-ஜி தொழில்நுட்பம், பாதுகாப்பு உறவுகள், ஈரான் விவகாரம் ஆகியவை பற்றியும் இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரானைப் பொறுத்த வரை, பாரசீக வளைகுடா பகுதிகளில், ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் முதன்மை நோக்கமாக உள்ளது. எனினும், அங்கு அதிகரித்துக்கொண்டிருக்கும் பிராந்திய நெருக்கடியின் விளைவாக, இந்தியக் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய, இந்திய கப்பற்படையின் கப்பல்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதைப் பாராட்டிய அமெரிக்கா, இந்தியாவிற்கான எண்ணெய் வழங்கலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளது.

5-ஜி தொழில்நுட்பம் பற்றிய கலந்துரையாடல், பேச்சுவார்த்தைகளின் மற்றொரு முக்கிய விஷயமாக இருந்தது. குறிப்பாக, சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய்-யுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகத் தொடர்புகளைத் தொடர, அமெரிக்கா அனுமதித்து வரும் நிலையில், இது முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. 5-ஜி தொழில்நுட்பம் பற்றி இந்தியா ஆராய்ந்து  வருகிறது. 5-ஜி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா எழுப்பியுள்ள பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் பற்றி இந்தியாவிலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வளர்த்து வரும் அமெரிக்கா, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளுக்காக இந்தியாவின் கூட்டாளித்துவத்தையும் எதிர்பார்க்கின்றது. இந்தியாவும்  ஆக்கப்பூர்வமான கூட்டுழைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வடிவமைப்பு செயல்முறை ஆகியவற்றை எதிர்பார்க்கின்றது. இந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு இந்தியாவால், சுமார் 100 கோடி உபயோகிப்பாளர்களை அளிக்க முடியும். இதன் மூலம், 5-ஜி தொழில்நுட்பத்தின் உலகளாவிய போக்குகளை இந்தியா முன்னடத்திச் செல்ல முடியும். வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் ஆக்கம் ஆகியவற்றில் 5ஜி திறனை, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்குள் எவ்வாறு கொண்டு வருவது என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் இந்திய, அமெரிக்க வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள், அரசுகளுக்கிடையிலான உறவுகளையும் தாண்டி, இணைந்து செயல்பட வாய்ப்புக்கள் உருவாகும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்புத்துறையில் கூட்டுறவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒசாகா சந்திப்பின் போது, இது தொடர்பாக அதிகம் பேசப்படவில்லை என்றாலும், சில காலமாகவே, இந்தியா, அமெரிக்காவுடனான தனது பாதுகாப்பு இணைப்புகளை வலுப்படுத்தி வருகின்றது. இந்தோ-பசிபிக் பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பாதுகாப்புக் கூட்டாளித்துவம் இதில் அடங்கும். ஜெய் எனப்படும், ஜப்பான் – இந்தியா – அமெரிக்கா இடையிலான சந்திப்பில், இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோர் மேற்கொண்ட இரண்டாவது முத்தரப்பு சந்திப்பிலும்  இந்த விஷயம் பேசப்பட்டது. இந்தோ பசிபிக் பகுதிகளின் மேம்பட்ட முன்னேற்றத்திற்காக, இணைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் மூன்று நாடுகளும் இணைந்து உழைப்பதற்கான வழிகள் பற்றியும் இந்த முத்தரப்பு சந்திப்பில் கலந்துரையாடப் பட்டது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டு, அதன் மூலம், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நன்மை விளைய வேண்டும் என்ற லட்சியத்தையும் மூன்று நாடுகளும் கொண்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடல்சார் துறைகளில் தற்போதிருக்கும் பரஸ்பரக் கூட்டுறவை மேலும் வலுப்பெறச் செய்ய, வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தவும் மூன்று  நாடுகளும்  முடிவெடுத்துள்ளன. இந்தப் பகுதிகளில் அதிகரித்துவரும் சீன ஆக்கிரமிப்பு நோக்கங்களை மனதில் கொண்டு பார்க்கையில், இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுவது விளங்கும்.