ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி வீறுநடை போடும் இந்தியா.

(தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் லேகா சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், 2024 ஆம் ஆண்டிற்குள், இந்தியப் பொருளாதாரம், 5 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டுவதற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளார். ‘பத்து ஆண்டுகளுக்கான முன்னோக்கு’ என்ற கொள்கை நடவடிக்கைகளுக்கான தொடரை அவர் அறிமுகம் செய்துள்ளார். இதில் முதலீடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டிட மற்றும் சமூக உள்கட்டமைப்புகளை வலுவாக்குதல், டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மூலம் நிதி உள்ளடக்கலை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உடல் நலனில் கவனம், நீர் மேலாண்மை, நீல பொருளாதாரத்தில் கவனம், விண்வெளி பணித்திட்டங்களை வலுப்படுத்துதல், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் மேம்பாடு, வலுவான ஆயுஷ்மான் பாரத் திட்டம், ‘குறைந்தபட்ச அரசுத் தலையீடு, அதிகபட்ச நிர்வாகம்’ ஆகியவை இந்த கொள்கை நடவடிக்கைகளில் அடங்கும். இந்தச் செயல்முறையில் ஒவ்வொரு இந்தியரும் பங்குதாரர்களாக இருப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கூறியுள்ளார்.

எனினும், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை 2024 ஆம் ஆண்டிற்குள் அடையத் தேவையான வரைவுத் திட்டம் தெளிவாகத் தீட்டப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனை ஆணையத்தின் உறுப்பினரான ரதின் ராய் எச்சரித்துள்ளதைப் போல, நடுத்தர வருவாய்ப் பிடியால், மேல்நோக்கிய வளர்ச்சிப் பாதையை இந்தியா தவறவிடும் அபாயத்திற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளைப் பெறுவதே, பிரதமர் மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற, நிதி ஒருங்கிணைப்பு ஒரு முக்கியத் தேவையாக இருக்கும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. நிதி ஒருங்கிணைப்பைப் பொறுத்த வரை, இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில், மொத்த மூலதன உருவாக்கத்திற்கு இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது. பொது செலவின சுருக்கத்தை விட, வரி வருவாயால் உந்தப்பட்ட நிதி ஒருங்கிணைப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதாகும்.

பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, வரிவிதிப்பு ஒரு வலுவான கொள்கைக் கருவியாகும். இதில், பெரு நிறுவன வரிகளுக்கான பகுப்பாய்வு, முன்னேற்றத்தை நோக்கிய ஒரு திடமான நடவடிக்கையாகும். ஆண்டொன்றுக்கு 400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் புரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் பெரு நிறுவன வரி 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி மூலம் வரும் வருவாயை அதிகரிக்க, ‘வருமான வரி தாக்கல்’ தொடர்பான நடவடிக்கைகளை எளிமையாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

விவசாய நெருக்கடியை சரிசெய்வதற்கான கொள்கைகளையும் இந்தியா உருவாக்க வேண்டும். இன்றளவிலும், இந்தியாவின் பெரும்பான்மையான பயிர்கள் மழையைச் சார்ந்துள்ளன. பருவமழை பொய்த்தால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நிரந்தரக் கடன் தொல்லைக்கு ஆளாவார்கள். விவசாயத் துறையில் மொத்த மூலதன உருவாக்கத்தை அதிகப்படுத்துவதற்கான அவசரத் தேவை தற்போது எழும்பியுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு, அதிக இளம் வயதினரைக் கொண்ட சாதகமான இந்திய மக்கள்தொகையைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியமானதாக இருக்கும். மனித மூலதன உருவாக்கத்தை வலுப்படுத்த, கல்வி மற்றும் சுகாதாரத்தை வலுப்படுத்துவதில், கொள்கைகள் மூலம் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது பொருளாதார முன்னேற்றத்தையும் உயர்த்தும். கடந்த 15 ஆண்டுகளுக்கான பாலின பட்ஜெட் முறை பற்றி ஆராய்வதற்காக, ஒரு நிபுணர் குழு உருவாக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார். இந்த கொள்கை அறிவிப்பின் மூலம், மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றான ‘யாரும் பின்தங்கிவிடக் கூடாது’ என்ற கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாலின வேறுபாடற்ற மனித முன்னேற்றத்திற்கு இதன் மூலம் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

‘கடைசி மைல் வரைத் தொடர்பு’ என்ற திட்டம், ஏழைக் குடும்பங்கள் வரை, அரசாங்க நலத்திட்டங்கள் போய்ச் சேருவதை உறுதிபடுத்தும் முக்கியத் திட்டமாகும். உஜ்வாலா திட்டம், எரியாற்றல் உள்கட்டமைப்பில், பாலின பட்ஜெட் முறையை எடுத்துக்காட்டுகின்றது. இது மோதி அரசாங்கத்தின் ஒரு முக்கியக் கொள்கை நடவடிக்கையாகும். உதய் திட்டம்,  மின்சார விநியோக நிறுவனங்களின் நிதி மற்றும் இயக்க முறைகளின் சீராக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது. 100 சதவிகிதம், அதாவது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை நோக்கி பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நடைமுறை அளவிலேயே, இந்தத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, களையப்பட வேண்டும். குறைபாடுகள் உள்ள கட்டமைப்பு வசதிகள், வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப் போக்குவரத்து உட்பட, முக்கியத் துறைகளில், அந்நிய நேரடி முதலீடுகளை வரவேற்பது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனினும், அதிகமாக ஈர்ப்பை உடைய அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடுகள், வரி விகித வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடுவதால், இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்தால், மூலதன வெளியேற்றமும் ஏற்படலாம். வணிகத்தைப் பொறுத்த வரையில், பட்ஜெட்டில், சுங்க வரிகளில் சில அதிகரிப்புகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரின் பின்னணியில், இந்தியா தனது வர்த்தகக் கொள்கையை சாதுர்யமாக அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தியா தற்போது 2.87 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உள்ளது. வருடத்திற்கு 10 சதவிகிதத்தை விட அதிக  விகிதத்தில் வளர்ச்சியடைந்தால்தான், 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் அளவை எட்ட முடியும். துறை சார்ந்த முதலீடுகள் மற்றும் மாநில மற்று ஊரக நிலைகளில் மூலதன உருவாக்கம் ஆகியவை, 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய மிகத் தேவையான முக்கிய விஷயங்களாகும்.