இலங்கையில் அதிகரிக்கும் இந்திய முதலீடுகள்.

(இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். எம்.சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

 இந்தியாவும் இலங்கையும், மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான 130 கிலோமீட்டர் நீள ரயில்வே தடத்தை மேம்படுத்துவதற்கான, 9.126 கோடி  டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழிப்பாதை முதன் முறையாக மேம்படுத்தப்படுவதால், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இலங்கை ரயில் துறையை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கு உள்ள பங்கு அனைவரும் அறிந்ததே. இதுவரை இலங்கையில், ரயில் துறை முன்னேற்றத்திற்கு மட்டும், இந்தியா சுமார் 130 கோடி டாலர் அளவிலான உதவியைச் செய்துள்ளது.

இலங்கை போன்ற, வளர்ந்து வரும் நாடுகளில், தனது முதலீடுகளை அதிகப்படுத்தி, கூட்டு முதலீடுகளில் ஈடுபடவும் இந்தியா ஆர்வத்துடன் உள்ளது என்பதை இது குறிப்பிட்டுக் காட்டுகின்றது. சுகாதாரம், கல்வி மற்றும் இணைப்புப் பணிகள் என இந்தியா அங்கு மேற்கொண்டிருக்கும் பணித்திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனை மையமாகக் கொண்டுள்ள பணித்திட்டங்களாக உள்ளன. இந்த மாதத்தில் மட்டும், கம்பாஹா மாவட்டத்தில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 100 மாதிரி கிராமங்கள் துவக்கி வைக்கப்பட்டன. இலங்கை முழுவதிலும், 2400 கிராமங்களைக் கட்டித் தருவதாக இந்தியா அளித்துள்ள உறுதியில் ஒரு பங்குதான் இந்த 100 கிராமங்கள். இதைத் தவிர, இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 60,000 வீடுகளின் கட்டுமானப் பணிகளிலும் இந்தியாவின் பெரும் பங்கு உள்ளது. மற்றொரு நிகழ்வாக, இலங்கை முழுவதற்கும் அவசரத் தேவைக்கான ஆம்புலன்ஸ் சேவைகளை இந்தியா வழங்கி வருகிறது, இது இலங்கை மக்களின் வெகுவான பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது. தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மாதிரி கிராமங்களைக் கட்ட உதவியதன் மூலம், கூட்டுறவிற்கான ஒரு ஆக்கப்பூர்வ செய்தியை, குறிப்பாக, செயலுத்திக் கூட்டுறவை மேம்படுத்தத் தேவையான நம்பிக்கைக்கான செய்தியை இந்தியா தெளிவாக அனுப்பியுள்ளது.

இலங்கையுடனான இந்தியாவின் கூட்டுறவில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இலங்கை அரசியலில் உட்பூசல்கள் பல இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள் அதிக காலதாமதமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வரவிருக்கும் அதிபர் தேர்தல்களும், அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிற்கு இடையில் உள்ள வேறுபாடுகளால் இலங்கையில் இருக்கும் அரசியல் குழப்பங்களும், அங்கு, பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களாக உருவெடுத்துள்ளன. ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த தாக்குதல்கள் அந்நாட்டின் பாதுகாப்புச் சூழலை ஆபத்தாக்கியுள்ளது. இலங்கையின் உள்நாட்டு பூசல்கள் மற்றும் கொந்தளிப்புகளுக்கு எச்சரிக்கையுடன் பதிலளித்த இந்தியா, ஜனநாயக முறைப்படி தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைந்து பிரச்சனைகளைத் தீர்க்குமாறு அந்நாட்டுத் தலைவர்களைக் கேட்டுகொண்டுள்ளது. பாதுகாப்புப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமானால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க, சர்வதேச சமூகத்தால் உறுதியான கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில், துறைமுகங்கள் போன்ற, செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், இந்தியா தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள, ‘கிழக்கு கண்டெயினர் டெர்மினலை’ கூட்டாகச் சேர்ந்து மேம்படுத்துவதற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தப் பகுதியில், சீனா தொடர்ந்து தன்னை நிலைநாட்ட செய்து கொண்டிருக்கும் முயற்சியைத் தடுக்க, இந்த கூட்டுப் பணித் திட்டம் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது. செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பந்தோட்டா துறைமுகத்தை, சீனா ஏற்கனவே 99 ஆண்டுகால குத்தகைக்கு எடுத்துவிட்டது என்பது நினைவிருக்கலாம்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம், கடலோர நகரமான மதாராவையும், ஹம்பந்தோட்டாவின் பெலியாட்டாவையும் இணைக்கும் புதிய ரயில் தடம் ஒன்று துவக்கப்பட்டது. பெல்ட் மற்றும் சாலை முயற்சியான பி.ஆர்.ஐ-யின் கீழ், இலங்கையில், ரெயில்வே பணித்திட்டங்களில் சீனாவால் செய்யப்பட்டுள்ள முதல் முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, வட மாகாணத்தில், காங்கேசந்துறை துறைமுகத்தையும், 4.527 கோடி டாலர் நிதி உதவியுடன் உருவாக்கி வருகின்றது. இவ்வாண்டு மார்ச் மாதம், ஹம்பந்தோட்டா துறைமுகத்தில், 385 கோடி டாலர் மதிப்புள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திய வர்த்தகங்களுடன் தொடர்புடைய ஒரு சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஓமனின் எண்ணெய் அமைச்சகத்துக்கிடையிலான கூட்டுப் பணித்திட்டமாக இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது. ஹம்பந்தோட்டா அருகில் ஏற்பட்டுள்ள இப்படிப்பட்ட  பன்னாட்டு முதலீடுகளை இலங்கை பிரதமரும் வரவேற்றுள்ளார். திரிகோணமலை துறைமுகம் மற்றும் மதாலா விமான நிலையம் ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்தியா ஆர்வம் காட்டி வருகின்றது. எனினும், இவற்றிற்கான செயல்முறைகளையும் முதலீடுகளையும் இனிமேல் தான் தீர்மானிக்க வேண்டும்.

கூட்டுறவு மேம்பாட்டில், இரு நாடுகளும் அதிக ஆர்வம் காட்டியுள்ள மற்ற துறைகள் எரியாற்றல் மற்றும் தொடர்பு வசதிகளாகும். இந்தியா இலங்கை இடையில், எரியாற்றல் துறையில் கூட்டுறவு குறித்த கூட்டுப் பணிக்குழுவின் நான்காவது சந்திப்பு, இவ்வாண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில், திரிகோணமலை அருகிலுள்ள சாம்புரில் சூரிய சக்தி பணித் திட்டம் மற்றும் கேரவாலபிடியாவில் எல்.என்.ஜி பணித் திட்டம் ஆகியவைப் பற்றி பரிசீலனை செய்யப்பட்டது.

இன சச்சரவுகள் மற்றும், காங்கேசந்துறை மற்றும் புதுச்சேரி அருகிலுள்ள காரைக்கால் ஆகிய துறைமுகங்களுக்கிடையில் படகு சேவைகளுக்கான வணிக சாத்தியக்கூறுகள் போன்ற காரணங்களால், நீண்ட காலமாக இணைப்பு வசதிகள் ஒரு பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது. தற்போது, இந்திய உதவியுடன் காங்கேசந்துறை துறைமுகம் மேம்படுத்தப்படுவதால், இரு நாடுகளுக்கும் உள்ள இணைப்புத் தொடர்புகள் மேன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைக்கும் அனுகூலமாக இருக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துள்ள இந்த முன்னேற்றங்கள், இந்தியா, இலங்கையுடனான தன்னுடைய கூட்டுறவை பன்முகப்படுத்தியுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. எனினும், இலங்கையில் இந்தியா செயலுத்தி ரீதியான தனது நிலைப்பாட்டை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.