நிலவிற்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு

 

மூத்த அறிவியல் எழுத்தாளர் பீமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  ஸ்ரீப்ரியா சம்பத்குமார்

 

நிலவிற்கான இந்தியாவின் இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2, திங்களன்று வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டங்களில் மிக சிக்கலான அதே சமயம் துணிகரமான திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-2, திங்களன்று மதியம் விண்ணில் பாய்ந்தது. நிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது ஆய்வு விண்கலமான சந்திரயான்-2-ஐ சுமந்துச் சென்ற, நாட்டின் அதீத வல்மை மிக்க ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி எம்.கெ-III, இந்தியாவின் விண்வெளித் தளமான, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருது திங்களன்று மதியம் 2.43-க்கு புறப்பட்டது. ராக்கெட் புறப்பட்டு 17 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியைச் சுற்றி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்பட்டது.

இம்மாதம் 15 ஆம் தேதி இந்த செலுத்தல் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. அதன் பிறகு, மிகக் குறைந்த நேரத்தில், எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அதைச் சரி செய்த இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றால் அது மிகையல்ல.

ராக்கெட்டின் சரியான புறப்பாடு, இந்தப் பணித்திட்டத்தின் முதல் படிதான் என்பதை குறிப்பிட்டுக் கூற வேண்டும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இதுவரை மேற்கொண்டுள்ள மிகச் சிக்கலான, கடினமான பணித்திட்டங்களில் இது ஒன்றாகும். சந்திரயான்-2 நிலவைச் சென்றடைந்து, அங்கு மெதுவாக இறங்க இன்னும் 48 நாட்களாகும். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதிக்கு சந்திரயான்-2 நிலவின் பரப்பில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிலவுக்கான இந்தியாவின் முதல் பணித்திட்டமான சந்திரயான்-1-ஐ ஒப்பிட்டுப் பார்க்கையில், சந்திரயான்-2 அதிக சிக்கலான கடினமான ஒன்றாகும். சந்திரயான்-1, சுற்றுவட்டப் பாதையில் மட்டும் சுற்றி, தகவல்களைச் சேகரித்தது, அதாவது, அது ஒரு ஆர்பிடல் மிஷனாக இருந்தது. தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2-ல் மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன – நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர், நிலவின் பரப்பில் இறங்கும் பாகமான லேண்டர் மற்றும் நிலவின் நிலப்பரப்பில் சென்று ஆய்வு செய்யும் ரோவர். இவை மூன்றும் ஒன்றாகப் பணிபுரிந்து, நிலவைச் சுற்றி வந்தும், அதன் பரப்பில் இறங்கியும் ஆய்வுகளை மேற்கொள்ளும். ‘இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை’ எனப் போற்றப்படும், விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் சாராபாயின் நினைவாக, சந்திரயான்-2-ன் லேண்டரின் பெயர், ‘விக்ரம்’ என வைக்கப்பட்டுள்ளது. ரோவருக்கு, ‘பிரஞ்ஞான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது, ‘பிரஞ்ஞான்’ என்றால் சமஸ்கிரதத்தில் ‘ஞானம்’ என்று பொருள். ஆர்பிட்டர், சுமார் 100 கிலோமீட்டர் உயரத்திலிருந்து, மேப்பிங், அதாவது, வரைபடம் உருவாக்கும் பணியைச் செய்யும். அதிலிருந்து பிரியும் லேண்டர், மெதுவாக தரை இறங்கி, நிலவின் பரப்பை ஆராய, ரோவரை வெளியனுப்பும்.

முதலில், ஒரு ஒப்பந்தத்தின் படி, ரஷ்யா, லேண்டரை வழங்குவதாக இருந்தது. ஆனால், பின்னர், இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகிக்கொள்ளவே, இஸ்ரோ இதை, தானே வடிவமைத்தது. இதன் மூலம், சந்திரயான்-2 முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட பணித்திட்டம் என்ற பெருமையும் நமக்குக் கிடைத்துள்ளது.

நிலவைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, ஆர்பிட்டரில் எட்டு, லேண்டரில் மூன்று, ரோவரில் ஒன்று என 13 இந்திய பேலோடுகளை சந்திரயான்-2 ஏந்திச் செல்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் லேசர் ரெட்ரோ-ரிஃப்லெக்டர் ஒன்றையும் லேண்டர் எடுத்துச் சென்றுள்ளது. நிலவின் நிலப்பரப்பில், மெதுவாகத் தரை இறக்கி, அங்கு ஒரு ரோபோடிக் ரோவரை இயக்க வைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

சந்திரயான்-2 தரையிறங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம், நிலவின் தென் துருவத்திலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரு பள்ளங்களுக்கு இடையில் உள்ள ஒரு உயர் சமவெளியாக இந்த இடம் உள்ளது. மற்ற நாடுகளின் நிலவுக்கான விண்கலன்கள் எதுவும் இதுவரை இறங்காத, மத்திய ரேகையிலிருந்து மிக அதிகத் தொலைவில் உள்ள இடமாகும் இது. இந்த அம்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், நிலவின் துருவப் பகுதிகள் எப்போதுமே விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிரான விஷயமாக இருந்துள்ளன. அங்கு, நிரந்தரமாக மறைந்திருக்கும் பள்ளங்களின் பரப்புகளில், நீர்ப் பனிக்கட்டிகள் அதிகமாக இருக்கின்றன என்று நம்மப்படுகின்றது.

 

திங்களன்று செலுத்தப்பட்ட பிறகு, அதிகமாக நீட்டிக்கப்பட்ட ஒரு சுற்றுவட்டப்பாதையில், சந்திரயான்-2 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து, சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் பல்வேறு செய்கைகள் மூலம், இது, மெதுவாக நிலவின் ஈர்ப்புத் தளத்திற்குள் செல்லும். அங்கு, 100 கிலோமீட்டர் உயரத்தில், நிலவைச் சுற்றிய ஒரு வட்ட துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். நிலவின் சுற்றுவட்டப்பாதையில், இந்த விண்கலம் 27 நாட்களைச் செலவழித்து, சில திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பின்னர், லேண்டர்-ரோவர் இணையை வெளியேற்றும். இந்த இணை மெதுவாக இறங்கி, நிலவின் பரப்பிற்கு மேல் 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைகொள்ளும்.

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், லேண்டர் மேலும் கீழ் நோக்கிச் சென்று, ரெட்ரோ ராக்கெட்டுகளின் உதவியுடன், 15 நிமிட இடைவெளியில் நிலவின் பரப்பில் மெதுவாக இறங்கும். இந்த நிகழ்வை, இதில் இருக்கும் தொழில்நுட்பச் சவால்களைக் குறிக்கும் வகையில், இந்தப் பணித்திட்டத்தின் ‘திகிலூட்டும் நிமிடங்கள்’ என இஸ்ரோ தலைவர் கெ.சிவன் அவர்கள் குறிபிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்குப் பிறகு, நிலவில் ஓர் ஊர்தியை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

லேண்டர் தரை இறங்கியவுடன், ரோவர், லேண்டரிலிருந்து வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த ஆய்வுகள் ஒரு சந்திர நாள், அதாவது, 14 பூமி நாட்கள் வரை நடத்தப்படும். ஆர்பிட்டர் ஓர் ஆண்டிற்குத் தன் பணிகளைத் தொடரும்.

நிலவின் பரப்பில் தரையிறங்கும் பணித்திட்டத்தின் வெற்றி விகிதம் 50 சதவிகிதத்தை விடக் குறைவே என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. எனினும், இஸ்ரோவின் முந்தைய சாதனைகளை, குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திரயான்-1 மற்றும் 2013—ஆம் ஆண்டு செவ்வாய் கிரகம் நோக்கி செலுத்தப்பட்ட மங்கல்யான் ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, சந்திரயான்-2-டும் ஒரு வெற்றிகரமான பணித்திட்டமாகத் திகழ்ந்து, இஸ்ரோவின் மகுடத்தில் மற்றொரு வெற்றிக் கல்லாக மிளிரும் என்ற நம்பிக்கையே அனைவரின் மனங்களிலும் ஓங்கியுள்ளது.