புதிய பிரிட்டன் பிரதமரும் பிரெக்ஸிட்டுக்கான வழிகளும்

(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் என அழைக்கப்படும் விவகாரத்தின் மீது, 2016 ஆம் ஆண்டில் வாக்கெடுப்பு நடந்த சமயம் தொட்டே, பிரிட்டிஷ் அரசியலில் கொந்தளிப்பான சூழல் நிலவி வந்துள்ளது. தமது திட்டத்திற்கு இணங்க, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒப்புதல் பெறுவதில் தோல்வியுற்ற தெரெஸா மே அவர்கள், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், இம்மாதம் 4 ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான போட்டியில், வெளியுறவுத்துறை செயலர் ஜெரீமி ஹண்ட் அவர்களைவிட, 40,000 வாக்குகள் அதிகம் பெற்று, போரிஸ் ஜான்சன் அவர்கள் வெற்றி பெற்றார். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்த போரிஸ் ஜான்சன் அவர்கள், நாட்டை ஒன்றுபடுத்தி, லேபர் கட்சித் தலைவர் ஜெரீமி கோர்பின் அவர்களைத் தோற்கடிப்பதே தனது இலக்கு என்று குறிப்பிட்டார். நவீன பிரிட்டனுக்கான அமைச்சரவையைத் தாம் தோற்றுவிக்கவுள்ளதாகவும், அதில் பெண்களும் சிறுபான்மை இனத்தவரும் முக்கியப்பங்கு வகிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேங்கிக் கிடக்கும் பிரெக்ஸிட் விவாகரத்திற்கு சுமுகமான முறையில் தீர்வுகாண, ஐரோப்பிய யூனியனின் 27 தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, புதிய பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன் அவர்கள் சந்திக்கும் முக்கிய சவால்களுள் ஒன்றாக விளங்கும். ஐரோப்பிய யூனியனிலிருந்து, ஒப்பந்தத்துடனோ, ஒப்பந்தம் இன்றியோ பிரிட்டன் வெளியேறுவதைத் தாம் உறுதி செய்வதாக போரிஸ் ஜான்சன் அவர்கள் வாக்களித்துள்ளார். தமது வாக்கை நிறைவேற்ற, ஐரோப்பிய யூனியனின் தலைவர்களுடன் மீண்டும் பேரத்தில் இறங்கி, பிரெக்ஸிட்டுக்கான சிறந்த வாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்குத் தாம் உடன்படப் போவதில்லை என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது நிறைவேறாத பட்சத்தில், எப்படியேனும், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பிரிட்டன் கண்டிப்பாக வெளியேறும் என்று போரிஸ் ஜான்சன் அவர்கள் கூறியுள்ளார். ஏற்கனவே, முன்னாள் பிரதமர் தெரெஸா மே அவர்களுடன் மேற்கொண்ட உடன்பாட்டை பிரிட்டன் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல், பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திலும், தனது கட்சியிலுமே, புதிய பிரிட்டிஷ் பிரதமர் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. ஒப்பந்தம் இன்றி பிரிட்டன் வெளியேறுவதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனது கன்சர்வேடிவ் கட்சியிலேயே, ஒப்பந்தம் இன்றி பிரிட்டன் வெளியேறுவதற்குப் போதிய பெரும்பான்மை ஆதரவு போரிஸ் ஜான்சன் அவர்களுக்குக் கிடையாது. பிரெக்ஸிட் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை,  ’செய் அல்லது செத்துமடி’ என்பது போன்ற நிலைப்பாட்டில் போரிஸ் ஜான்சன் அவர்கள் உறுதி கொண்டுள்ளதால், பிரிட்டிஷ் நாணயமான பௌண்ட் நிச்சயமற்ற தன்மைக்கு உந்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம் இன்றி பிரிட்டன் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும், அப்படி நிகழ்ந்தால், அது பிரிட்டிஷ் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் என்றும் பலர் கருதுகின்றனர். இத்தகைய குழப்பமான சூழலில், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாகவுள்ள உறுப்பினர்களைக் கொண்டு தனது அமைச்சரவையை நிரப்ப, போரிஸ் ஜான்சன் அவர்கள் முற்பட்டுள்ளது அவருடைய நிலைப்பாட்டிற்கு ஸ்திரத்தன்மையை வழங்கும்.

போரிஸ் ஜான்சன் அரசில், இந்திய, பிரிட்டிஷ் உறவுகள், சுவாரசியமான திருப்பங்களை சந்திக்கக்கூடும். 2017 ஆம் ஆண்டில், பிரிட்டன் வெளியுவுச் செயலராக இந்தியா வந்திருந்த போரிஸ் ஜான்சன் அவர்கள், இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டினார். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறபின், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் செயலாக்கப்படுவது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுடனான உறவுகளை, வர்த்தகத்தைத் தாண்டி மேலும் ஆழமாக முன்னெடுத்துச் செல்வதில் தாம் உறுதி பூண்டுள்ளதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் கடிதம் எழுதினார். இந்திய, பிரிட்டிஷ் உறவுகளை மீண்டும் கட்டமைக்க, புதிய பிரிட்டிஷ் அரசு ஆர்வமாயுள்ளதை இது வெளிப்படுத்துகிறது. இந்தியர்கள் பிரிட்டனில் குடியேறுவது எளிதாக்கப்படுவதை இந்தியா விரும்பும் நிலையில், அயல்நாட்டவரைப் புறம் தள்ளி, உள்ளூர் பிரிட்டன் வாசிகளுக்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்க பிரெக்ஸிட் உறுதியளிக்கிறது. விசா வழங்குவதை எளிதாக்கி, இந்திய மாணவர்களை பிரிட்டன் வருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என, தனது கட்சி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாகப் பிளவுபட்ட நிலையில் உள்ள பிரிட்டன், ஏராளமான சவால்களை சந்திக்கிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் மக்களின் கருத்துப்படி, நாட்டிற்கு நலமளிக்கும் விதத்தில் பிரிட்டிஷ் அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பிரெக்ஸிட் தேக்கநிலையிலிருந்து நாட்டை விடுவித்து, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் புதிய பிரதமருக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமுகமாக,, விரைவில் பிரிட்டன் வெளியேறுவது அவசியம். அடுத்த சில மாதங்களில், தனது உறுதியான நிலைப்பாட்டில் புதிய பிரதமர் தொடர்ந்து நிற்பாரா அல்லது அதில் சற்று இளக்கமான நிலைப்பாட்டை மேற்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.