வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்.

(மூத்த பொருளாதார விமர்சகர் சத்யஜித் மொஹந்தி, ஐ.ஆர்.எஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம், தன்னுடைய சமீபத்திய, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த  அறிக்கையில், இந்த நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டிற்கு முன்னர், இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்ற கணிப்புகளை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் ஐ.எம்.எஃப்-ன் கணிப்பு உள்ளது. உலகளாவிய சிக்கல்கள் பல இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவானதாக இருக்கும் என்பதையும் இது குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

உலகப் பொருளாதாரத்தில் தீர்வுகாணப்படாமல் தொடரும் வணிகப் போர் மற்றும் வர்த்தகத் தற்காப்பு ஆகியவற்றின் பின்னணியில், இந்த நிதி ஆண்டிற்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் கணிப்பை, ஐ.எம்.எஃப், 7.3 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. சீனா உட்பட, பெரிய பொருளாதாரங்கள் மந்த நிலையில் இருப்பதோடு, உலக முதலீடுகளும் கீழ் நோக்கியே இருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவிற்கு ஐ.எம்.எஃப் அளித்திருக்கும் வளர்ச்சி விகிதக் கணிப்பு, வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்குக் கிடைத்துள்ள பெருமையே ஆகும். வலுவற்ற உலக பொருளாதாரச் சூழலில், இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியைக் கொண்டிருப்பது, நாட்டின் வளர்ச்சியானது, வலுவான உள்நாட்டுப் பொருளாதார அடிப்படைகள், பெரிய பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடான நிதிநிலை ஆகியவற்றையே பெரும்பாலும் சார்ந்திருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவிகிதம் என்ற அளவைச் சுற்றியே இருந்துள்ளது. உலகளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் இந்தியா உள்ளது. வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட, பர்சேசிங் பவர் பேரிடி என்ற அளவுகோலில் பார்த்தால், அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்குப் பிறகு, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முக்கியப் பொருளாதார சீர்திருத்தங்களான ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஐ.பி.சி எனப்படும் திவால் குறியீடு ஆகியவற்றை செயல்படுத்தியுள்ளது. கூட்டுறவுக் கூட்டாட்சி முறையில், ஜி.எஸ்.டி ஒரு மிகச்சிறந்த முயற்சியாகப் புகழப்படுகின்றது. ஐ.பி.சி, திவால் நிலை தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதற்கான ஓரிடத் தீர்வை அளிப்பதோடு, வர்த்தகம் செய்யும் செயல்முறையையும் எளிதாக்குகின்றது. இப்படிப்பட்டச் சீர்திருத்தங்களை, சமீப காலங்களில், ஐ.எம்.எஃப் மட்டுமின்றி, உலக வங்கி, ஆசிய வளச்சி வங்கி போன்ற மற்ற சர்வதேச பொருளாதார அமைப்புகளும் பாராட்டியுள்ளன. வர்த்தகம் புரிய ஏதுவான சூழல், எல்லை தாண்டிய வணிகம், சர்வதேச புதுமுயற்சிகளுக்கான குறியீடு போன்ற சர்வதேச பொருளாதார அளவுகோள்களில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சி, விடாமுயற்சியுடன் கூடிய உயர் வளர்ச்சிப் பாதையை நோக்கி, இந்தியப் பொருளாதாரம் பயணிப்பதைப் பறைசாற்றுகின்றது.

சீர்திருத்தங்களைத் தொடரவும், அதிகரிக்கவும், இந்தியா உறுதியுடன் உள்ளது. இதன் மூலம், வர்த்தகம் செய்யக்கூடிய சூழல் இன்னும் ஏதுவாகி, அந்நிய நேரடி முதலீடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 6400 கோடி டாலர் என்ற அளவில் வலுவாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6 சதவிகிதம் அதிகமாகும். ஆண்டொன்றிற்கு 30000 கோடி டாலர் என்ற அளவில் முதலீடுகளைப் பெற, விமானப் போக்குவரத்து, காப்பீடு போன்ற துறைகளை, அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்து விடும் திட்டங்களும் அரசாங்கத்திடம் உள்ளன. இதனால், சந்தையை விரிவாக்கி, நீண்ட காலத்திற்கான பெரு நிறுவனப் பத்திரங்களை ஈர்க்க முடியும். 2024 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்ட, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நிர்ணயித்த குறிக்கோளை அடைவதற்கான பாதையில் இந்தியா உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியப் பொருளாதாரம், இதுவரை, 2.87 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை இரட்டிப்பாக்க, வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதம் என்ற அளவில் இருக்க வேண்டும். தொடர்ச்சியான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், குறைந்த செலவில் முதலீட்டுக்கான அணுகல், உள்கட்டமைப்பில் அதிக செலவினம் ஆகியவற்றால் வளர்ச்சி உந்தப்பட வேண்டும். மோதி அவர்கள் தலைமையிலான அரசாங்கம் இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பின்னர் வெளிவந்த முதல் பட்ஜெட்டிலேயே, இவற்றிற்கான துவக்கப் பணிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், வெளிப்படையான போட்டியுடைய ஏலச் செயல்முறை மூலம், சூரியசக்தி மற்றும் அதி நவீன தொழில்நுட்பத் துறைகளில், பெரிய அளவிலான உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்க, சர்வதேச நிறுவனங்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கும். முதலீடு சார்ந்த வரிச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.

அதிக வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்ட அதே வேளையில், பணவீக்கத்தை 4 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்குப் பற்றாக்குறையின் விகித்த்தைக் கட்டுக்குள் வைத்தும், இந்தியா தனது மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையையும் உறுதிசெய்துள்ளது. ஐ.எம்.எஃப்-இன் குறிப்புகளும் கணிப்புகளும் பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும், இந்தியா தன்னுடைய வளர்ச்சிப்பாதையில் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. தன்னுடைய சீர்திருத்தங்களை துரிதப்படுத்த இந்தியா முனைப்புடன் உள்ளது என்பது ஒரு அனுகூலமான விஷயமாகும். சட்டங்களை எளிதாக்குதல் மற்றும் நிதி நிலை ஒருங்கிணைப்பு, வங்கி மற்றும் தொழிலாளர் துறைகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், பொதுக் கடன் குறைப்பு ஆகியவை பொருளாதார வளர்ச்சியை அசுரகதியில் இயக்கி, வரும் ஆண்டுகளில், இந்தியா, உலக வளர்ச்சிக்கும், புதுமைப்படைப்புகளுக்கும் ஓர் முக்கிய உந்துசக்தியாக இருப்பதை உறுதி செய்யும்.