மூடி மறைத்த உண்மையை வெளிப்படுத்தும் பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

வியப்பூட்டும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள், பாகிஸ்தான் மண்ணில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன என்றும், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பலவித பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தற்சமயம் உள்ளனர் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உண்மையை இதுகாறும் பாக் அரசு அமெரிக்காவுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பாகிஸ்தான் பங்கு கொண்டதாகவும், அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார். அல் கைதா, ஆஃப்கானிஸ்தானிலிருந்து செயல்பட்டதாகவும், தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இல்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பாகிஸ்தான் பங்கு கொண்டதாகக் கூறிய அவர், துரதிருஷ்டவசமாக, அப்போதைய பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுவது குறித்த உண்மை நிலையை அமெரிக்காவுக்கு எடுத்துரைக்கவில்லை என்று கூறினார். அமெரிக்க காங்கிரஸின் பாகிஸ்தான் குழுவின் தலைவரான ஷீலா ஜேக்சன் லீ அவர்கள் அளித்த விருந்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்க அமைதி நிறுவன நிகழ்ச்சியில் பேசுகையில், பாகிஸ்தான் மண்ணில் 30,000 முதல் 40,000 பயங்கரவாதிகள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் ஆஃப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர், உண்மையை அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிராக, நம்பகமான, பின்வாங்க முடியாத கடும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சில அண்டைநாடுகள், பயங்கரவாதத்தைத் தங்கள் அரசுக் கொள்கையாகவே கடைப்பிடித்து வருவதாக, பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கூறியுள்ளார்.

உலகே அறிந்த உண்மையை பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளார். இருப்பினும், அவரே ஒப்புக்கொண்டபடி, பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்பட்டுவரும் 40,000 பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாம் எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பது குறித்து, எந்தத் தகவலையும் அவர் வெளியிடவில்லை. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதை இது வெட்ட வெளிச்சமாக்குகிறது.

அக்டோபர் மாதத்துக்குள், உறுதியளித்தபடி, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கத் தவறினால், தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சர்வதேச பயங்கரவாத நிதித்தடுப்புக் குழு எச்சரித்துள்ள நிலையில், தனது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 4 ஆவது பிரிவில், 8000 பயங்கரவாதிகள் தங்கள் மண்ணில் செயல்பட்டு வருவதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எனவே, பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவில் அறிவித்துள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச பயங்கரவாத நிதித்தடுப்புக் குழுவின் நிபந்தனைகளின்படி பாகிஸ்தான் நடப்பது குறித்து, கேள்விகள் எழுகின்றன. இதனை இந்தியா அந்தக் குழுவிடம் எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவில் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துக் கூறுகையில், பாக் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் குறித்து வெளிப்படையாக, இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தான் பிரதமர் பேசுவது இது முதல் தடவையல்ல. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், டெஹ்ரானில் ஈரான் அதிபர் ருஹானி அவர்களுடனான சந்திப்பின்போது, ஈரானுக்கு எதிரான பயங்கரவாதிகள் தங்கள் நாட்டிலிருந்து  செயல்பட்டு வருவதாக அவர் அறிவித்ததற்கு, பாக் நாடாளுமன்றத்தில் கண்டனங்கள் வெளியிடப்பட்டன. கடுமை – மென்மை என்ற இரண்டுபட்ட கொள்கையை பாகிஸ்தானிடம் டிரம்ப் நிர்வாகம் கடைப்பிடித்து வருவது பலனளிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த 130 கோடி டாலர் சிவில் மற்றும் ராணுவ நிதியுதவியைக் கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகம் நிறுத்திக் கொண்டது. எனினும், இம்ரான்கான் அவர்களின் அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா மனம் மாறியுள்ளது போல் தோன்றுகிறது.

ஆஃப்கான் தாலிபான்களுடன் உடன்படிக்கை எட்டுவதற்கு, பாகிஸ்தானின் தயவை நாடுவதில் அமெரிக்கா ஆர்வமாய் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் ஆஃப்கான் தாலிபான்கள் இயங்குகின்றனர் என்பதை அதிபர் டிரம்ப் நன்கு அறிவார். பாகிஸ்தானின் உதவியுடன், ஆஃப்கான் தாலிபான்களுடான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. அமெரிக்காவுடன் நண்பன் போல் நடித்து, அமெரிக்கத் துருப்புக்களை ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றவுடன், ஆஃப்கான் அரசியலில் தனது கைவரிசையைக் காட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதனால், தெற்காசியாவிலும், அண்டைநாடுகளிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தீவிரமடையக் கூடும் என்றால் அது மிகையல்ல.