நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

திரு வி மோகன்ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராம மூர்த்தி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளுக்கு, சந்திரயான் -2,  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையொட்டி, குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குடியரசு துணை தலைவர் திரு வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோதி ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  சந்திரயான்  திட்டம் வெற்றி பெற்றதையொட்டி,  மேலும் பல்வேறு கண்டுபிடிப்புகள் இந்திய மக்களுக்கு கை கூடும் என்று   கூறினார் திரு ராம்நாத் கோவிந்த்.  சந்திரயான் –2  நிலவில் வெற்றிகரமாக இறங்கும் போது இந்திய அரசு இந்த சாதனையை படைத்த 4-வது நாடாகும் என்றார் திரு வெங்கையா நாயுடு அவர்கள்.

இந்திய அறிவியலாளர்களின் திறமை, நடவடிக்கையை பறை சாற்றும் வகையில் சந்திரயான் –2  அமைந்துவிட்டது என்று பாராட்டினார் பிரதமர்.  மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், பாகிஸ்தானுடன் ஆன அனைத்து பிரச்சனைகளும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளின் மூலமே தீர்க்கப்படும் என்றும் மூன்றாவது நாடு தலையிடுவதற்கு பிரதமர் எந்த நாட்டின் உதவியையும் நாடவில்லை என்றும் தெளிவுபட கூறினார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக்கொண்டால் மட்டுமே பேச்சு வார்த்தைகளை தொடர இயலும் என்றும், பேச்சு வார்த்தைகள் சிம்லா ஒப்பந்தத்தின்படியும், லாகூர் பிரகடனத்தின் படியும் பேச்சு வார்த்தைகள் அமையும் என உறுதி கூறினார் ஜெய்சங்கர் அவர்கள்.

பிரதமர் திரு மோதி மக்களவையில் இது குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என மற்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். கடந்த மாதம் ஒசாகா நகரில் நடைபெற்ற மோதி—டொனால்டு–டிரம்ப் சந்திப்பின் போது இந்திய  பிரதமர் மூன்றாவது நாட்டின் உதவியை நாடுவது குறித்த எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபட கூறினார்.  இச்சந்திப்பின் போது உடனிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஏற்கனவே மக்களவையில்  நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளார் என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், எப்போது பேச்சு வார்த்தை நடந்தாலும் காஷ்மீர் பற்றி மட்டுமில்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியும் பேச்சுக்கள் தொடரும் என ஆணித்தரமாக உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார்.

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த போதிலும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது.  இச்சட்டத்தின்படி தீவிரவாத தூண்டுதலுக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சம்பந்தபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று உள்துணை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மக்களவையில் அறிவித்தார்.

பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் மசோதா 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.  தண்டனை அதிகபடுத்தப்பட்டதுடன், மரண தண்டனைக்கும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க 1023  விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது  என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் மாநிலங்களவையில் அறிவித்தார்.  இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா 2019 மக்களவையில் குரல்வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.

2017-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்த பின்னரும் தொடர்ந்து வரும் அநீதிகளை களைய முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படுவது அவசியமாகிறது என்று சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் முத்தலாக் முறை பின்பற்றப் பட்டு வருவது நிறுத்தப்படவேண்டும் என்றார் திரு ரவி சங்கர் பிரசாத். இச்சட்டம் எந்த மதத்தினருக்கும் அல்லது வகுப்பினருக்கும் எதிரானதல்ல என்று கூறிய அமைச்சர், இஸ்லாமிய பெண்களுக்கு இச்சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்றும், பல்வேறு வெளிநாடுகளில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.