பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.

(சமூக அறிவியல் நிறுவன இயக்குனர் ஏஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

உலக வரலாறு புரட்டிப் போடப்பட்டு வருகிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் அதிகாரம் இடம் பெயர்ந்து வருகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும். நவீன உலகில், முதல்முறையாக, மக்கள் தொகையும், செல்வமும் ஒரே இடத்தில் குவிகின்றன. இந்த மாற்றமே பிரிக்ஸ் அமைப்புக்கு வழிகோலியுள்ளது. வேகமாக மாறிவரும் உலகை வழிநடத்துவோரும் மாறி வருகின்றனர். உலகின் பார்வை பிரிக்ஸ் நோக்கித் திரும்பியுள்ளது. 

மற்ற நாடுகள் அமைத்த குழுவைப் போலன்றி, பிரிக்ஸ் அமைப்பில், முன்னாள் வல்லரசு, தற்போது வல்லரசாகப் போகும் நாடு, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வருங்காலத்தில் வல்லரசாகத் திகழக்கூடிய நாடுகள் ஆகியவை ஒன்றிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு மாற்று சக்தியாகவும், போட்டியிடத் தேவையான சக்தி கொண்டதாகவும் பிரிக்ஸ் விளங்குகிறது. முக்கியமாக, உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும், வளமையையும் அளிக்கவல்ல வளரும் பொருளாதார சக்திகளின்பால் உலகின் பார்வையை பிரிக்ஸ் திசை திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச உறவுகளில் ஒரு புதிய நட்சத்திரக் கூட்டம் பிரிக்ஸ் என்றால் அது மிகையல்ல. இது, ஜி-7 நாடுகளைக் காட்டிலும் அதிகப் பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கிறது. தனது இரண்டாவது பதிற்றில் பிரிக்ஸ் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், பல்நிலை அமைப்புக்கு ஒருமனதான, தயக்கமற்ற, உறுதியான ஆதரவும், சர்வதேச உறவுகளில் ஐ.நா.வின் பங்கை மையப்படுத்திய நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பு, சர்வ்தேச நாணய நிதியம் போன்ற உலக நிர்வாக அமைப்புக்களை மேற்கத்திய நாடுகள் உதாசீனப்படுத்துவது போலன்றி, அத்தகைய அமைப்புக்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர, பிரிக்ஸ் ஆதரவளிக்கிறது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே, உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்துவது குறித்து, முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஐ.நா.வின் சட்ட திட்டங்களைத் திறம்பட செயலாக்குவதை உறுதி செய்ய, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், ஐ.நா.வின் மேற்பார்வையில், உறுதியான, சர்வதேச சட்ட ரீதியிலான, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. உலக அளவிலும், பிராந்திய அளவிலும் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்துக்கு எதிராக, உரத்த குரல் எழுப்பிய முதன்மை நாடு இந்தியாவாகும். ஒரு அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகும். பயங்கரவாதத்தை ஒடுக்க, ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை இந்தியா முன்வைத்துள்ளது. காலம் தவறாத, செயல்படத் தகுந்த, உளவுப் பரிமாற்றம், தனியார் துறையின் உதவியைக் கொண்டு, நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயங்கரவாத அமைப்புக்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, எல்லைப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவது, பயணிகளின் நகர்வுகள் குறித்த தகவல் பரிமாற்றம், உலக அளவிலான பயங்கரவாதத்தை ஒடுக்கும் மையப்புள்ளிகளை அடையாளம் காணுதல் ஆகியவை இந்த ஐந்து அம்சத் திட்டத்தில் அடங்கும்.

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள், அனைத்துவிதமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் கண்டனத்தை வெளியிட்டனர். பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிக்ஸ் பணிக்குழுவின் மூலம், உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் வெளிப்படுத்தப்பட்டது.. இந்தியத் தரப்பில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே சிங் அவர்கள், பொருளாதாரக் குற்றங்கள் புரிந்து தப்பியோடிய நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் ஆகியவை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வெளியிட்ட 9 அம்சத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் தொடர்ந்துவரும் சர்ச்சைகள், பிராந்திய அளவிலும், உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்து, பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர். ஆஃப்கானிஸ்தானில் இந்தியா தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலைப்பாட்டிற்கு ஒத்துப்போகும் வகையில், ஆஃப்கான் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர, பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், வெனிசுவேலா நிலைமை குறித்து, பிரிக்ஸ் நாடுகளிடையே, மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. வெளித்தரப்பினர் தலையிடுவதை ரஷ்யா எதிர்க்கும் வேளையில், வெனிசுவேலா மக்களின் குரலுக்கு பிரிக்ஸ் நாடுகள் செவிசாய்க்க வேண்டுமென்று பிரேஸில் கருதுகிறது. எனினும், வெனிசுவேலா பிரச்சனை சுமுகமான முறையில், அமைதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

இவ்வாண்டு துவக்கத்தில், பிரேஸில் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்றதைத் தொடர்ந்து, சில நிச்சயமற்ற தன்மைகள் வெளிப்பட்டன.  அதிபர் போல்சனாரோ, சர்வதேச விவகாரங்களில் மாறுபட்டுச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. வளரும் நாடுகளைச் சர்ந்திருப்பதை விடுத்து, மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கொள்கைகளுக்கு அவர் நெருக்கம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ பிரிக்ஸ் நாடுகளின் திட்டங்களுக்கு முழுமனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளார். எரிசக்தி, அமைதி, பாதுகாப்பு, புதுமைப் படைப்பு, மேம்பாட்டு நிதி போன்றவற்றில், அவர், பிரிக்ஸ் நாடுகளின் ஒட்டுமொத்த கருத்துக்களையொத்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள 74 ஆவது ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்துக்கிடையே, அடுத்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.