வட கொரிய ஏவுகணைச் சோதனைகளால் மீண்டும் அதிகரிக்கும் இறுக்கம்.

(கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதி என்ற சூழலுக்கான சாத்தியக்கூறுகளுக்கு ஒரு எதிர் அதிர்வாக, கடந்த வாரம், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை சோதித்தது. வட கொரியா தென் கொரியா இடையிலுள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்க்-உன்-னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் சந்தித்த ஒரு மாதத்திற்குள்ளேயே இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தங்களது சந்திப்பில், இரு தலைவர்களும், தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வைக் காண்பதை நோக்கி உழைக்க உறுதி பூண்டிருந்தனர்.

வட கொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலிருக்கும் வோன்சானிலிருந்து இரண்டு ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இந்த ஏவுகணைகள் மாறுபட்ட திறன் இயல்புகளைக் கொண்டவை என வட மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாட்டு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. அதாவது, இவை லாவகமாக இடம் மாறக்கூடியதாகவும், எளிதாக எடுத்துச் சென்று மறைக்கக் கூடியவையாகவும் இருப்பதோடு, முக்கியமாக, இவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்க மிகக் கடினமானவையாக இருக்கும் என்பதை இது குறிப்பிடுகின்றது. இதனால் ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் அமெரிக்காவை விட கொரிய தீபகற்பத்தையே நேரடியாக பாதிக்கும் என்பது தெளிவாக உள்ளது.

ஏவுகணைச் செலுத்தலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், வட கொரியாவிற்கு வரக்கூடிய நேரடி மற்றும் மறைமுக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பதே இந்த ஏவுகணைச் செலுத்தலின் நோக்கமாகும் என கிம்-ஜாங்-உன் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு தென் கொரியாவே பொறுப்பு என்று கூறிய அவர், தென்கொரியாவே இதனைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டினர். அடுத்த மாதம், தென் கொரியா, அமெரிக்காவுடனான தனது வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. வட கொரியாவின் கூற்றுகளைப் பற்றி கவலைப்படாமல், தென் கொரியாவும் அமெரிக்காவும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தும் உறுதியுடன் இருக்கின்றன. சுவாரசியமாக, அமெரிக்காவையோ, அதிபர் டிரம்பையோ கிம் ஜாங்-உன் குறிப்பிடவில்லை என்பது, அமெரிக்காவுடனான தனது வேறுபாடுகளை வட கொரியா அதிகப்படுத்த விரும்பவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. அதே சமயம், தனது அணு ஆயுத ஏவுகணைத் திட்டங்களையும் வட கொரியா கை விடுவதாக இல்லை.

வட கொரியாவின்  அணு ஆயுதத் திறனை வளர்ப்பதற்கான தொலைதூர நோக்கம் ஆட்சியை தக்கவைப்பதாக இருக்கலாம் என்ற போதிலும், சமீபத்திய சோதனைகள், வரவிருக்கும் அமெரிக்கா-தென் கொரியா வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிகளை மனதில் கொண்டே மேற்கொள்ளப்பட்டவையாகும். கூடுதலாக, 40 எஃப்-35ஏ ஸ்டெல்த் ஜெட் போர் விமானங்களை தென் கொரியா வாங்கியிருப்பதும், வட கொரிய ஏவுகணைச் சோதனைக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகள், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறுவதாக விமர்சித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் சோதிக்கவும் வடகொரியாவிற்குத் தடை விதித்துள்ளது. வடகொரியாவின் நடவடிக்கைகளைக் கண்டித்த தென்கொரியா, இதனால் தென் கொரியப் பாதுகாப்பிற்கு, தீவிரமான பாதகம் ஏதும் விளையாது எனத் தெரிவித்துள்ளது.

கொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனையை அமெரிக்கா மிகவும் சாதாரண முறையிலேயே எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால், குறுகிய வரம்பிற்கான ஏவுகணைச் சோதனைக்கான அமெரிக்காவின் பதில் மிதமானதாகவே இருக்கிறது என்பது புரியும். நீண்ட வரம்பிற்கான ஏவுகணைச் சோதனைகள் அல்லது அணுச் சோதனைகளை வட கொரியா செய்தால், அமெரிக்கா அதை வேறு விதமாக, அதிக ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளும். அமெரிக்கா, வட கொரிய நடவடிக்கைகளை தன் நாட்டுப் பாதுகாப்புடனும் இணைத்துப் பார்க்கிறது என்பது இதன் மூலம் புலப்படுகின்றது.

மே மாதம் நடத்தப்பட்ட சோதனைகளையும் அமெரிக்காவும் தென் கொரியாவும் மிதமாகவே எடுத்துக் கொண்டன. வட கொரியா, ஏவுகணைச் செலுத்தலை பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு உக்தியாகக் காண்கிறது என அமெரிக்கா எண்ணுவதாகத் தோன்றுகிறது. எனினும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தடுக்கப்படாமல் தொடர்ந்தால், கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை வெகுவாக பாதிக்கப்படும்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஹனோயில் நடைப்பெற்ற டிரம்ப் மற்றும் கிம் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தாலும், இரு தலைவர்களும், ஜூன் மாதம் மற்றொரு முறை சந்தித்தனர். எனினும், அப்போது  நடந்த பேச்சுவார்த்தைகளிலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. ஹனோய் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்கா வட கொரியா இடையிலான பணிக்குழு சார்ந்த பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டு விட்டன. வட கொரியாவைப் பொறுத்த வரை, டிரம்ப், பணிக்குப் பதில் பாணிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், எந்த உறுதியான பலனும் ஏற்படவில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. வட கொரியா ஒரு பக்கம் தொடர்ந்து தன்னுடைய ராணுவத் திறனையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. வட கொரியா சீனாவுடன் நெருக்கமான உறவுமுறையைக் கொண்டிருப்பதும் மற்றொரு கவலைக்குரிய விஷயமாகும்.

அமைதிக்கான செயல்முறையில் சீனா கலந்து கொள்ளாமல் இருப்பது நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தாது. பிரச்சனைக்கான தீர்விற்கு, ஆறு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் கொண்டு வரலாம். எனினும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வேறுபாடுகளால் வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரிக்காமல் இருக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்கா, வட கொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அந்நாடு தொடர்ந்து மற்ற சோதனைகளைச் செய்யாமல் தடுப்பது அத்தியாவசியமாகும்.

ஸ்திரமான, பாதுகாப்பான, இறுக்கமற்ற கொரிய தீபகற்பத்தையே இந்தியா காண விரும்புகின்றது. இதற்கு, இதில் தொடர்புடைய அனைத்து நாடுகளும் இணைந்து உழைத்து, இந்தப் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.