மொசாம்பிக் நாட்டுடனான உறவை வலுவாக்கும் இந்தியா.

(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.)

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், சமீபத்தில் மொசாம்பிக் நாட்டிற்கு மேற்கொண்ட மூன்று நாட்கள் பயணத்தின் போது, அந்நாட்டுடன் இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவை வெள்ளை கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பரிமாற்றம் மற்றும் ஹைட்ரோ கிராஃபி துறையில் ஒத்துழைப்பு ஆகியவையாகும். மொசாம்பிக் நாட்டில் இந்தியா கணிசமான அளவில் பொருளாதார முதலீடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு செயலுத்தி ரீதியிலான உறவையும், இருதரப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும்.

மொசாம்பிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அடனாசியோ டுமுகே அவர்களுடன் நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது, ஆப்பிரிக்க நாடுகளுள் மொசாம்பிக் நாட்டை, இந்தியா தனது மிக முக்கியமான நட்பு மட்டும் கூட்டாளி நாடாகக் கருதுகின்றது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கூறினார். இந்தியா, மொசாம்பிக்கில் 700 கோடி டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக, எரியாற்றல் மற்றும் நிலக்கரி போன்றவற்றில் முதலீடு செய்துள்ளது. இது, ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியா செய்துள்ள மொத்த முதலீடுகளில்  25 சதவிகிதமாகும். 2017 ஆம் வருடத்தில் மொசாம்பிக் நாட்டின் ஏற்றுமதி, அதிகப்படியாக இந்தியாவிற்கே மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அந்நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 35 சதவிகிதம் இந்தியாவுக்கான ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளது.

ராஜ்நாத் சிங் அவர்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி ஏற்றவுடன் மேற்கொண்ட இந்த முதல் வெளிநாட்டுப் பயணம், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொண்ட முதல் பயணமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய, மொசாம்பிக் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கும்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கும் தனது இப்பயணம் ஒரு உத்வேகமாக அமையும் என்று ராஜ்நாத் சிங் அவர்கள் கூறினார்.

கடத்தல், பயங்கரவாதம், கடல் கொள்ளை, வேட்டையாடுவது போன்றவற்றைத் தடுக்க இணைந்து பணியாற்றுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், கடல்சார் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற உபகரணங்களில் உதவி  அளிப்பது ஆகியவை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். மபூடோவில் நடைபெற்ற ஒரு விழாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 வேகமாக இடைமறிக்கும் படகுகள் (FIB) மற்றும் 44 எஸ்யூவி வாகனங்கள்  மொசாம்பிக் நாட்டிற்கு வழங்கப்பட்டது. ரோந்துப் படகுகளை செயல்படுத்துவது மற்றும் பராமரிப்பது குறித்துப் பயிற்சியளிக்க, இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அங்கு உதவி செய்து வருகிறது.

முன்னதாக, மொசாம்பிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்தும், ஆயுதக் குறைப்பு, படைக் கலைப்பு, மற்றும் மறு ஒருங்கிணைவு ஆகியவை குறித்தும் ராஜ்நாத் சிங் அவர்களிடம் எடுத்துரைத்தார். மொசாம்பிக் நாட்டின் தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளில் உள்ள அனைத்து விஷயங்களையும் சிங் அவர்கள் விவாதித்தார். இருநாட்டு அரசுகளுக்கும் இடையே உள்ள சிறந்த உறவுகள், வலுவான தொழில் பரிமாற்றங்கள், துடிப்பான கூட்டாளித்துவ முன்னேற்றம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே உள்ள நீண்ட கால தொடர்புகள் ஆகியவை குறித்து சிறப்பித்துப் பேசினார்.

மொசாம்பிக் நாட்டின் பிரதமர்  கார்லோஸ் அகோஸ்டினோ அவர்களைச் சந்தித்த அமைச்சர், இரு நாடுகளுக்கிடையே உள்ள ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் பற்றி விவாதித்தார். அதிகரித்து வரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதப் பிரச்சாரங்களை எதிர்கொள்ள இந்தியாவின் ஒத்துழைப்பை அவர் நாடினார். இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளையும் இரு நாடுகளும் ஆராய்ந்தன.

முதலீடுகளைத் தவிர, இரு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு வர்த்தகமும் கடந்த சில வருடங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றது . 2010 மற்றும் 2015ஆம் வருட இடைப்பட்ட காலத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. அது, உச்சகட்டமாக,  2014 – 15 ஆம் வருடத்தில் 240 கோடி டாலராக உயர்ந்திருந்தது. சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப்  பொருட்கள் ஆகும். அதேசமயம், நிலக்கரி மற்றும் முந்திரிப்பருப்பு போன்றவை மொசாம்பிக் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கியப் பொருட்கள் ஆகும்.

மொசாம்பிக் நாட்டுடன் இந்தியா, நெருக்கமான நல்லுறவைக் கொண்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான, துடிப்புமிக்க முன்னேற்றக் கூட்டாளித்துவமும், மொசாம்பிக்கில் வசிக்கும் அதிகளவிலான இந்திய வம்சாவளியினரும் இருநாட்டு உறவுகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் இந்தப் பயணத்தின் மூலம் மொசாம்பிக் நாட்டுடன் உறவுகள் மேலும் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ஆம் வருடம், ஜூலை மாதம் ஆப்பிரிக்க நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகள் மேல் நோக்கிச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  2014 ஆம் வருடம், முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து,  அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுடனும்  இந்தியா தனது தொடர்புகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2015 ஆம் வருடம் நடைபெற்ற மூன்றாவது இந்தியா ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, உயர் அளவிலான பயணங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் இதர மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோரின் ஆப்பிரிக்க நாட்டுப் பயணங்கள், 29 முறை நிகழ்ந்துள்ளன. தற்பொழுது கூட, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மூன்று நாள் பயணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளார்.